3036. குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
எழுமையும்என் றனைஆண்ட என்உயிரின் துணையே
பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந்தகையே
அன்றால நிழல் அமர்ந்த அருள்இறையே எளியேன்
ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
உரை: குறைதல் இல்லாத நற்குணமாகிய மலையாகியவனே, கோக்கப்படாத மணியே, என்னுடைய குருவே, எனது குடி முழுது மாட்கொண்ட சிவ குமரனே, எனக்குத் தந்தையும் தாயுமாய் நின்று எழுமையும் என்னை ஆட்கொள்ளும் என்னுயிர்க்குத் துணையானவனே அறிவுறாத நித்தப் பொருளே, மெய்ம்மை நிறைந்த புண்ணியச் செயல் விளைவிக்கும் பயனாகியவனே, பொய்ம்மை யுற்ற அடியவனாகிய என்னுடைய குற்றங்களைப் பொறுத்தருளிய பெருந்தகையே, அந்நாளில் முனிவர் பொருட்டுக் கல்லாலின் நிழலின்கண் வீற்றிருந்து ஞான மருளிய பெருமானே, எளியவனாகிய என்னுடைய ஆசை யனைத்தும் நினது திருவடிப் பேறன்றி வேறு யாதும் இல்லை. எ.று.
சலித்தலின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி நற்குண மலையாகிய சிவபெருமானைக் குணக்குன்று என்கின்றாராகலின், “குன்றாத குணக்குன்றே” என வுரைக்கின்றார். குன்றுதல் - குறை படல், கோத்தல் - துளையிட்டு நூலிடைப் பெய்து சேர்த்தல். துளை படல் குற்றமாதல் கண்டு “கோவாத மணியே” என்று கூறுகிறார். “கோவா முத்தும் சுரும் பேறாக் கொழுமென் முகையும் அனையார்” (ஏயர்.227) எனச் சேக்கிழார் பெருமான் வழங்குவது காண்க. மணி, மாணிக்க மணி. மலவிருளை விலக்கிப் புறக்கண்கள் காணாதவற்றைக் காணக் கண்டு காட்டலால், “குருவே” என்று குறிக்கின்றார். தாம் பிறந்த குடியிலுள்ளா ரனைவரும் சிவனடியே சிந்திக்கும் சீர்த்த அடியவராதல் கண்டு மகிழ்தல் விளங்க, வடலூர் வள்ளல் “என் குடிமுழு தாட் கொண்ட சிவக்கொழுந்தே” எனச் சிறப்பிக்கின்றார். சிவ நெறியின் முடி பொருளாதல் பற்றி, சிவனைச் சிவக் கொழுந்து என்பர். “திருச்சத்தி முற்றத் துறையும் சிவக் கொழுந்தே” (சத்தி) எனப் பெரியோர் உரைப்பதறிக. தாதை, தந்தை - உயிரையும் உடம்பையும் அருளாற் பேணுதலால் “என் தாதையாய் எனக்கு அன்னையுமாய் நின்று” எனவும், பிறவி தோறும் இத் திருவருளைச் செய்தொழுகுதலின், “எழுமையும் என்றனை யாண்ட என் உயிரின் துணையே” எனவும் இயம்புகின்றார். “என்னுயிரின் துணையே” என்பதை என் உயிர், இன் துணை எனப் பிரித்துக் கோடலும் பொருந்துவதாம். ஒருகால் தோன்றி மறையும் பொருளன்மையால், “பொன்றாத பொருளே” என்கின்றார். தற்பயன் கருதாமல் மன்னுயிர் நலமும் திருவருள் விழைவும் கொண்டு செய்யும் புண்ணியம், “மெய்ப் புண்ணியம்” எனச் சிறப்பிக்கப்படுகிறது. இது சிவ புண்ணியம் எனவும் வழங்கும். இதன் விளைவு சிவப் பேறாதலால், “புண்ணியத்தின் பயனே” எனப் புகல்கின்றார். நினைவு சொற் செயல்களில் பொய்ம்மை கலத்தலுண்மையின், “பொய் யடியேன்” என்றும், அடியாராயினார் பிழைகளைப் பொறுத்து அருள் புரிவது பெரிய ஆண்டகைமை எனப் பெரியோர் கருதுதலால், “பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்த பெருந்தகை” என்றும் இசைக்கின்றார். மெய்ப்பொருள் சிந்தனையில் ஐயுறவு தோன்றி அலைத்த போது, சனகர் முதலிய நால்வர் பொருட்டுக் கயிலைப் பகுதியில் கல்லாலநிழலில் தென்முகநோக்கிய தேசிகனாய்ப்போந்தருளிய வரலாற்றை நினைந்து போற்றுதலால், “அன்றால நிழலமர்ந்த அருள் இறையே” என ஏத்துகின்றார். இவ்வாறு நெடிது புகழ்ந்தோதியவண்ணம் இருத்தற் குற்ற காரணம் இது வென்பார், “எளியேன் ஆசை யெல்லாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலை” என வுரைக்கின்றார். இஃது “ஆசை யெலாம் அடியார் அடியோம்” என்ற திருவாசகத்தை நினைப்பிப்பது காண்க.
இதனால், உள்ளத்து ஆசை மிகுதி அறிவித்தவாறாம். (8)
|