3037.

     பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
          பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
     காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே
          கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
     மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்
          மனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்
     ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்
          என அறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே.

உரை:

     அணியாதற் கொண்ணாத பாம்புகளைப் பூணாரமாக அணிந்துள்ள பரம் பொருளே, பொய் நிறைந்த அடியவனாகிய எனது பிழையைப் பொறுத்து, அருள் செய்து எப்போதும் கண்டறியாத காட்சிகள் பலவற்றையும் எனக்குக் காட்டி, எனக்குள்ளே நின்று திருக்கூத்தாடும் நின்னுடைய திருவருட் பெருமையை என்னென்பேன் சிறப்புறாத தீய குணங்களையுடைய கொடியவனாகிய யான் இதனை நினைக்கும் போதெல்லாம் மனம் உருகி இரு கண்களிலும் நீரைச் சொரிகின்றேன்; காண்; மிக்க அறிவில்லாதவனாயினும் யான் முற்பிறவிகளில் நினக்கு அடியனாயினே னெனத் தெரிந்து கொண்டேனாக, என் மனம் மகிழ்ச்சி யுற்றேன், காண். எ.று.

     பூவும் பொன்னும் முத்தும் மணியுமாகியவற்றாலாகும் மாலைகளை நோக்க, நீண்டிருப்பது பற்றிப் பாம்பையும் பிறவற்றையும் மாலையாக எவரும் விரும்பி யணியாராகலின், “பூணாத பூண்கள் என்று கூறுகிறார். பிறவாவன என்பு மாலையும் தலை மாலையும் எருக்கு மாலையுமாகிய விருப்பம் தராத பிறவற்றையுமாம் எனக் கொள்க. சிவ மூர்த்தத்தில் பாம்பு முதலாயவற்றைப் பூணாகப் பூண்டா ரெனினும் உண்மை நிலையிற் பரம் பொருளாதல் தோன்றப் “பரம் பொருளே” என்று பகர்கின்றறார். பகர்கின்ற தன்னை நோக்கும் வடலூர் வள்ளல், தன்பால் நிறைந்திருக்கும் பொய்ம்மைகளை நோக்குதலால், “பொய் யடியேன்” எனவும், தாம் செய்வன பலவும் குற்றங்களாதலை யுணர்கின்றமையால், “பிழை யனைத்தும் பொறுத்து” எனவும், தன்னுடைய குணம் செயல்களைக் காணும் நல்லறிவு விளங்கச் செய்தமை புலப்பட, “அருளி” எனவும் எடுத்தோதுகின்றார். “நானேது மறியாமை என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” (ஆனைக்கா) எனச் சான்றோர் கூறுவ தறிக. அருளளிவு, இது காறும் காணாது செய்த பிழைகளைக் காணக் காட்டினமையின், “என்றும் காணாத காட்சி யெலாம் காட்டி” எனக் கூறுகிறார். “காணாதன வெல்லாம் காட்டினான்” (பூந்துருத்தி) என நாவரசரும், “அறிவிலாத எனைப் புகுந்தாண்டு கொண்டறிவதையருளி மேல் நெறி யெலாம் புலமாக்கிய எந்தை” (சதகம்) என மணிவாசகரும் தெரிவிப்பது காண்க. உடற் குள்ளிருக்கும் கருவி கரணங்கள் பலவும் முறை பிறழாமல் நடத்தற் கேதுவாவது இறைவன் திருக்கூத்தாகலின், “எனக்குள்ளே கருணை நடம் புரிகின்ற கருணையே என்னென்பேன்” என்று கூறுகிறார். உடம்பொடு கூடி வாழும் உயிர்கள் இனிது வாழ்தல் வேண்டிச் செய்யப்படுவது பற்றி, “கருணை நடம் புரிகின்ற கருணை” என வுரைக்கின்றார். கருணை, திருவருள். அருட்கூத்தின் அருமை புலனாவதால், “என் புகல்வேன்” என வியக்கின்றார். மாண்பு பயவாத நினைவுகளைக் கொள்ளுதலால் “மாணாத மனம்” என்றும், அவற்றால் கொடுமையே விளைவது பற்றி “மனக் கொடியேன்” என்றும், இதனை நினைப்பவர் நன்மனம் நொந்து நீராய் உருகிக் கண்ணீராய் ஒழுகும் திறம் கூறலுற்று, “மனமுருகி இருகண்ணீர் வடிக்கின்றேன்” என்றும் இயம்புகின்றார். ஏண் - வலி மிகுதி. ஆதன் - அறிவில்லாதவன். இம்மையில் இறைவன் திருவடியை நினைந்தொழுகும் பேறு, முன்னைப் பிறவியில் உளதாய காரணம் பற்றிய தென வுணர்தலின், “ஏணாதனெனினும் யான் அம்மையின் நின் அடியேன் என அறிந்தேன்” எனவும், அது மேலும் தொடர்ந்து இன்பம் செய்யுமென்ற பெருமகிழ்ச்சியால், மனம் மலர்கின்றேன் என்பாரால், “அறிந்த பின்னர் இதய மலர்ந்தேன்” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், அம்மையிற் கொண்ட பத்திமை இம்மை மறுமைகளில் தொடரும், என்பதறிந்து மகிழ்கின்றமை தெரிவித்தவாறாம்.

     (9)