3038. அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டிச்
சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
வந்தோடு நிகர்மனம்போய்க் கரைந்தஇடங் காட்டி
மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மைஎவர்க் குளதே.
உரை: அறிதற்குரிய திருவருளை யறியாத சிறுமை யுடையவனாகிய என்னை அத்திருவருள் ஞானத்தை அறியச் செய்து, பிறைத் திங்கள் இருந்தொளிரும் சடையாகிய மணிமுடியையும், திருவடியையும் காட்டி, இப்பிறப்பின் இயல்பையும், வீட்டின் இயல்பையும், அதனைப் பெறற்கமைந்த என்னுடைய நிலையையும் அறிவித்து, இதற்கிடையே இன்பமுறும் சித்தர்களின் சூதான செயல்களையும், வீட்டின்கண் பெறலாகும் சாகா வாழ்வையும், இயற்கையான நிட்டை நிலையையும் உணர்த்திப் பொறி புலன்களோடு கூடியும் பிரிந்தும் இயங்கும் மனமாகிய பொருள், மறைந்தொழியும் யோக நிலையையும் விளக்கி என்னை மகிழ்வித்தாயாகலின், நின் திருவருள் ஞான வளமை நின்னின் வேறே எவர்க்குண்டு; இது மிகவும் அதிசயம்; அந்தோ, இதனை யான் எவ்வாறு கூறுவேன். எ.று.
உலகிய லறிவுக்கும் உயிரறிவிற்கும் வேறாய் மேலாயுள்ள திருவருளறிவு ஈண்டு அறிவு எனப்படுகிறது. அதனை யறியாமையால் உளதாவது சிறுமை; அறிய வருவது பெருமை யாகலின், “அறிவறியாச் சிறியேன்” எனக் கூறுகிறார். அறிவறியாமையை எண்ணி, “உன்னை வந்திப்பதோர் நெறி யறியேன், நின்னையே அறியேன், நின்னையே அறியும் அறிவறியேன்” (அடைக) என மணிவாசகர் வருந்துவது காண்க. அறிவறிய விரும்புவார்க்கு இறைவன் அறிவருளும் திறத்தை “அறிநீர்மையில் எய்துமவர்க்கு அறியும் அறிவருளும் குறிநீர்மையர்” (இடும்பா.) என ஞானசம்பந்தர் நவில்கின்றார். இதனையே மணிவாசகர், “அறிவிலாத எனைப் புகுந்தாண்டு கொண்டறிவதை யருளி மேல் நெறி யெலாம் புலமாக்கிய எந்தை” (சதகம்) எனக் கூறுகின்றார். இங்ஙனம் அறிவருளிய முதல்வன் சகள வுருவில் சீகண்ட பரமனாய்ச் சடைமுடி விளங்கத் தோன்றிக் காட்சி தந்த செய்தியை, “இந்தோங்கு சடைமணி நின் அடி முடியும் காட்டி” யருளினாய் என வுரைக்கின்றார், இது என்றது உலகியல் வாழ்வு; அது என்பது வீட்டின்ப வாழ்வு. உலகிற் றோன்றி வாழ்வாங்கு வாழ்ந்து வீடு பெறற் கமைந்து ஆன்ம வுரிமை “ மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே” (பள்ளி) என மணிவாசகர் தெளிய வுரைப்பது காண்க. மகிமா, லகிமா முதலாகிய எண்வகைச் சித்திகளைப் பெற்றுச் சித்தி யின்ப மொன்றே பெற்றுலவும் சித்தர்களைச் “சந்தோட சித்தர்கள்” எனவும், அவர் தாமும் உலகில் நிலை நில்லாது மறைந்தமையால், அவருடைய சித்திகளும் சூதா யொழிந்தமை பற்றி, “சித்தர்கள் தம் தனிச் சூதும் காட்டி” எனவும் இயம்புகிறார். நிலை யுளது போலத் தோன்றி நில்லாது மறைந்தமையால் சித்தர்களின் சித்திகளைத் “தனிச் சூது” என்று குறிக்கின்றார். சாகாத நிலை -என்றும் உளதாகும் பெருநிலை. “பண்டும் இன்றும் என்றுமுள் ளானுக்குப் பல்லாண்டு கூறுதுமே” (திருப்பல்) எனச் சேந்தனார் “சாகாத நிலை”யை விளக்குவது நோக்குக; பிறவாப் பெரு வாழ்வு எனவுமாம். கேட்பன கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து உண்மை யுணர்வில் ஒன்றுதல் இயற்கைச் சகச நிட்டையாம்; “இறையருள் ஞானம் நண்ணித் தேசுறுமதனால் முன்னைச் சிற்றறி வொழிந்து சேர்ந்து, நேசமோ டுயர்பரத்து நிற்பது ஞான நிட்டை” (சிவப்.84) என உமாபதி சிவம் கூறும் நிலை மனம் கரைந்து கெடும் ஆகந்துக நிலை; ஆகந்துகம், செயற்கை.
இதனால், உண்மை ஞானம் எய்தப் பெற்றமைக்கு, இறையருளை வியந் துரைத்தவாறாம். (10)
|