3039.

     அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
          அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
     வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
          மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
     என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
          டின்பநிலை தனைஅளித்த என்ன்றிவுக் கறிவே
     முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
          முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே.

உரை:

     மெய்யன்பர்களின் மனமாகிய கோயிலிலே அன்புடன் எழுந்தருளும் தலைவனே, அம்பலத்திலே ஆடலைப் புரிகின்ற இன்பச் செல்வமே, வன்மனம் உடையவர்களின் நெஞ்சில் மறைந்து நின்றொளிரும் மணி போல்பவனே, வேதாந்தம் ஆகமாந்தம் ஆகியவற்றின் உச்சியில் திகழும் முழுத் திங்களானவனே, என் பக்குவத்தை நோக்காமல் வலிய வந்து ஆட்கொண்டு, இன்ப ஞான நிலை நல்கிய அறிவுக் கறிவே, ஆன்மாக்களின் முன்னைய, நிலை, பின்னருள்ள பக்குவநிலைகளை அறிந்து அருள்செய்யும் முறைமை உன்னுடைய திருவருள் ஞான நெறிக்கு நோக்கப்படுவதில்லை யெனத் தெரிந்து கொண்டேன். எ.று.

     அன்புடையார் யாவராயினும் அவர் மனத்தின்கண் எழுந்தருளி இன்ப வொளி செய்து இருள் நீக்கி யாளுவது பற்றிச் சிவபெருமானை, “அன்பர் உளக்கோயிலிலே அமர்ந்தருளும் பதி” எனவும், இறைவனென்றற் கொப்ப, அன்பின்மையால் வலிதாகிய கன்மனத்தார் நெஞ்சினும் நீக்கமின்றி ஒளித்திருந்து அது மென்மையுறும் போது மென்மை மிகுவித்து இன்புறுவிக்கும் மணி போல்வது விளங்க, “வன்மனத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே” எனவும் இயம்புகின்றார். ஒளி மிக்க மணி இருளிற் புதையுண்டு கிடக்கினும் இருள் திணிப்புச் சிறிது விலகினும் ஒளிர்வது போல இறைவன் இறைமையிலகுவது புலப்பட, “மறைந்து வழங்கும் ஒளி மணியே” எனக் குறிக்கின்றார். உயிர்கட்கு இன்பம் விளைவித்தல் வேண்டியே இறைவன் கூத்தனானா னாதல் பற்றி, “அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே” என மொழிகின்றார். இதனால் மணிவாசகர் “அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத் தறை கடலோன்” (கோவை.307) எனப் புகழ்கின்றார்; “ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவ ணல்லூராரே” என நாவுக்கரசர் பராவுகின்றார். வேதாந்த ஆமகாந் தங்கள் வானளாவிய மலை போன்றுயர்ந்தவையாகலின், “மறைமுடி ஆகமமுடியின் வயங்கும் நிறைமதியே” எனக் கூறுகின்றார். அருளொளி நிறைந்த ஞான முழுமதி என்றற்கு “நிறைமதியே” எனப் புகல்கின்றார். ஞான முரைக்கும் பெருமக்கள் அதற் கெனக் காலம் நோக்குவது போலின்றி, நினைந்தாங்கு நேர்ந்து அருள் ஞானம் நல்கும் எளிமை வியந்து “என் பருவம் குறியாமல் என்னை வலிந் தாட்கொண்டு இன்ப நிலை தனையளித்த என் அறிவுக் கறிவே” என இசைக்கின்றார். “மையிலங்கு நற்கண்ணி பங்கனே, வந்தெனைப் பண்கொண்ட பின் மழக்கை யிலங்கு பொற் கிண்ணம் என்றலால் அரியை என்றுனைக் கருதுகின்றிலேன்” (சதகம்) என்ற திருவாசகத்தை நினைவுறுத்துவது காண்க. உயர் பொருளைப் பக்குவர்க் களிக்க வென்னும் உலகியற் பொருட் கொடை மரபு அருட் கொடைக்கில்லை என்ற தம் கருத்தை வலியுறுத்தும் வடலூர் வள்ளல் மேலும் யாப்புறுத்தல் கருதி, “முன் பருவம் பின் பருவம் கண்டருளிச் செய்யும் முறை நினதருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே” என வுரைக்கின்றார். திருவருள் ஞானோப தேசத்துக்குப் பெண்களும் இளையரும் உரியரல்லர் என்ற முறை சில சமயத்தவரிடையே உண்மையை வடலூர் வள்ளல் உடன்படாமை யறியலாம்..

     இதனால், திருவருள் ஞானத்துக்குப் பக்குவா பக்குவம் காண்டல் வேண்டாமை வெளிப்படுத்தியவாறாம்.

     (11)