3040.

     பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணிமலையே
          பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே
     சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்
          சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே
     மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி
          வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்
     கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே
          காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே.

உரை:

     இருபாலாகப் பகுத்துக் காட்டும் ஒளியும் நிறமுமுடைய படிகத்தாலும் மாணிக்கத்தாலுமாகிய மணி போல்பவனே, பத்தி நெறிக்கண் நிற்பார்க்கு, இனிமை தரும் பழமாகியவனே, சேல் மீன் போன்ற தனது கடைக் கண்ணால் திருவருளைச் செய்யும் சிவகாமக் கொடியாகிய உமாதேவி, கண்டு களிக்கக் கூத்தாடும் தலைவனே, மயக்கத்தைத் தந்து மறையாமல் என் அறிவுக் கறிவாய் நின்று நன்னெறி காட்டி நலம் தரும் கூறுகளைத் தெரிவித்துத் திருவடி காட்டி, அத்திருவடி ஞானத்தால் காணப்படுவதையும் காணச் செய்த நின் திருவருட்கு யான் செய்யக் கடவ கைம்மாறு ஒன்றும் காண்கிலேன். எ.று.

     ஒருபால் நீலமும் ஒருபாற் செம்மையும் பொருந்திய ஒளியும் நிறமும் உடைய திருமேனி கொண்டு விளங்குதலின், சிவனைப் “பால் காட்டும் ஒளி வண்ண மலையே” எனவும், திருநீற்றொளியும் உடன் தோன்றுதலின் “படிக மலையே” எனவும், இயம்புகின்றார். பத்தி - பக்தி நெறி; இதனை அன்பு நெறி என்பர். பந்திக்கும் நிலையெனக் கொண்டு - இறைவன் திருவடியோடு அன்பால் தம்மைப் பிணிக்கும் நிலை யென வுரைத்தலும் ஆம்; அப்போது பந்திக்கும் என வலித்தது எனக்கொள்க. தித்தித்தல் - இனித்தல், விழிக்கடை -கடைக்கண். அம்மையின் கண்கள் அருண் ஞானப்பார்வை யுடையனவாதலால்”விழிக் கடையால் திருவருளைக் காட்டும் சிவகாமவல்லி” எனத் தெரிவிக்கின்றார். கயிலையை யடைந்த காரைக்காலம்மைக்குத் திருவருள் ஞான வொளியால் இறைவன் திருவடிப் பேறு எய்துதல் கருதி அம்மை அருள் நோக்கம் செய்தசிறப்பை “கண்ணுதல் ஒருபாகத்துச் சிலைநுதல் இமயவல்லி திருக்கண்ணோக்குற்ற தன்றே” (காரைக்) எனச் சேக்கிழார் பெருமான், தெளிய வுரைப்பது காண்க. உமை கண்டு மகிழுமாறு சிவன் திருக்கூத்தாடிய நலத்தை, மந்த முழவ மியம்ப மலைமகள் காணநின்றாடி” (வேட்க) என ஞானசம்பந்தர் கூறுவதால், வள்ளற் பெருமான், “சிவகாம வல்லி மகிழ் திருநட நாயகனே” எனச் சிறப்பிக்கின்றார். முக்குண வியக்கத்தால் அனுபவம் பெறுதல் வேண்டி உயிரறிவை மறைத்தலும், அருளலும் இறையருட் செயல்களாதலின், “மால் காட்டி மறையாது என் மதிக்கு மதியாகி” எனவும், மதியாதலோடு அருள் பெறற்குரிய வழியையும், அதனை அவன் வழங்கும் திறத்தையும், அறிவிக்கின்றானாதலால், “வழி காட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டி” எனவும், திருவடி ஞானத்தாலன்றி உயிர்கட்குக் காணும் திறம் எய்தாமையின், “காலாலே காண்பதுவும் எனக்கே காட்டிய நின் கருணைக்கு” எனவும் விரியக் கூறுகின்றார். இக்கருத்தை அருணந்தி சிவனார், “கண்ட சிவன் தனைக் காட்டி யுயிரும் காட்டிக் கண்ணாகிக் காரணங்கள் காணாமல் நிற்பன்; கொண்டரனை யுளத்திற் கண்டு அடி கூடின் பாசம் கூடாது” (சிவ. சித்தி : 296) என அறிவிக்கின்றார். கைம்மாறு வழங்கும் மக்கட் பண்பு பற்றி, இறைவனருட்குக் கைம்மாறு கண்டிலேன் என்பாராய், “நின் கருணைக்குக் கைம்மா றொன்றிலனே” எனக் கனிந்து மொழிகின்றார். இறைவன் திருவருட்குக் கைம்மாறாம் பொருள் அகிலவுலகத்தும் இல்லாமை தோன்ற, “கைம்மாறொன்றிலனே” என்கின்றா ரென்றுமாம். “அருளிற் பெரிய தகிலத்து வேண்டும் பொருளிற்றலையிலது போல்” (திருவருட்.31) என உமாபதி சிவனார் உரைப்ப தறிக.

     இதனால் இறைவன் கருணைக்குக் கைம்மாறின்மை கூறியவாறாம்.

     (12)