3041. என்னைஒன்றும் அறியாத இளம்பருவந் தனிலே
என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
அன்னை எனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
இன்னல் அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ.
என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே.
உரை: என்னுடைய இயல்பை யானே அறிய மாட்டாத பேதைப் பருவத்தில் என் மனத்தின்கண் இருந்து யான் மயங்கும் போதெல்லாம் தாய் போலத் தலையாளி செய்தும், அவ்வப்போது தந்தை போல அறிவின்கண் தெளிவுறுத்தும் நின்றருளினாயாகலின், நினக்கும் எனக்கும் உள்ள தொடர்பை என்னென மொழிகுவேன்? உன்னை எனக்கு உயிர் என்று சொல்லுவேனா? நெடுங்காலமாக என்னுயிர்க்குத் துணையாகிய நேயப் பொருள் என்பனோ? எனக்குண்டாகும் துன்பங்களைத் துடைத்தருளும் அருட் குரு என வுரைப்பேனா? என்னென்று இயம்புவேன்? என்னை மகிழ்விக்கும் எனது இன்பம் என மொழிகுவேன். எ.று.
பருவ மெய்தும் பெண் தனது பெண்மையை யுணர்தல் போல யான் ஓர் உயிர்பொருளென்றும், தனக்கு உணர்வே வடிவமென்றும் அறிந்தொழுக மாட்டாத பேதைமை நிலையை “என்னை யொன்றும் அறியாத இளம் பருவம் தன்னில்” என்றும், உயிர் தோறும் உயிர்க்குயிராய் இறைவன் இருந்தருளுபவனாதல் பற்றி, “என்னுளத்தே அமர்ந்தருளி” என்றும் இசைக்கின்றார். உடலொடு கூடி வாழும் உயிர்க்குக் காமம் வெகுளி மயக்கம் என்ற மூன்றும் ஓரளவு இன்றியமையாமை பற்றி “யான் மயங்குந்தோறும்” என்கின்றார். காம வெகுளிகளால் உளதாவது மயக்கம் செம்பிற் களிம்பு போல் உயிரின்கண் தோய்ந்திருக்கும் மலம்காரணமாகப் பகலும் இரவும் போல மாறி மாறி வேறு வேறு இயல்புடன் உணர்வை மயக்குவதும் தெளிவுறுத்துவதும் செய்வது. உழைப்பால் எய்தும் உறக்கத்தால் தெளிவுறுவது கண்டு ஈதுணரப்படும். மயக்கம் - கலப்பு; “தேன் மயங்கு பாலினும் இனிய” (ஐங்.) என்றாற் போல, இருட்குள் ஒளியும் ஒளிக்குள் இருளும் தோய்ந்திருப்பது போலும் மறைப்பும் ஒளிவும் கலந்த கலப்பு. இதனை “ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றேயிடம்; ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும்;” (கொடிக்) என்பர் உமாபதி சிவம். மயங்கியது மயங்கியே யொழியாமையும், தெளிந்தது தெளிந்தே நில்லாமையும் இயல்பாதலின், “மயங்குந் தோறும்” எனக் கூறுகிறார். தெளிவுறுங்கால் இனிமை உடனிகழ்ச்சியாகலின் அதற் கெடுத்துக் காட்டாகத் தாய்மையை விதந்து “அன்னையெனப் பரிந்தருளி” எனவும், அன்புமொழிந்து அறிவு தரும் தந்தையை விதந்து, “அப்போதைக்கப்போது அப்பனெனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்” எனவும், உரைக்கின்றார். “இருளடராது உள்ளுயிர்க் குயிராய்த் தெளிக்கு மறிவு திகழ்ந்துளதேனும் திரிமலத்தே குளிக்கும் உயிர்; அருள் கூடும்படிக் கொடி கட்டினேன்” (கொடிக்) என்று உமாபதி சிவனார் உரைப்பது காண்க. இறைவன் தாய் போல் அருளும் திறத்தைப் “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய ஊனினையுருக்கியுள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த - தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே” (பிடித்த) எனத் திருவாசகம் விளக்குவது காண்க. இவ்வருட் செயற்குக் காரணமாவது நினக்கும் எனக்குமுள்ள உறவாமென வுணர்கின்றேனாயினும் அவ்வுறவு முறையை ஆராயும் போது, உயிர்க் குயிராகும் முறைமை கண்டு, “என் உயிர் என்பேனோ” எனவும், உயிர்த்துணையாதற்குக் காரணமாகிய அன்பு என்பார், நீடிய என்னுயிர்த் துணையாம் நேயமது என்பேனோ” எனவும் கூறுகின்றார். நீடிய துணை - பிறவி தோறும் தொடரும் பழைய நட்பு. “பழைமையெனப் படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு” (குறள்) என்பர் திருவள்ளுவர். இதனைக் கெழுதகைமை எனவும் கூறுப. நேயம் - அன்பு. இன்னல் - அறியாமையால் உண்டாகும் துன்பம்; குருவாய் அறிவருளிய விடத்து இது நீங்குதலின், “இன்னலறுத் தருள்கின்ற என் குரு என்பனோ” எனக் கூறுகின்றார். “இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி, குருவென வந்து குணம் பல நீக்கித் தரும்” (திருமந். 1527) என்பர் திருமூலர். எக்காலத்தும் எவ்வுயிராலும் விரும்பப்படும் முறைமை பற்றி, “என்னுடைய இன்பமது என்பேன்” என்றும், வேறு கூற மாட்டாமையால், என்னென்பேன்” என்றும் இசைக்கின்றார். அது, பகுதிப் பொருட்டு, “ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பமே என்னுடைய அன்பே” (கோயில்) என்றும், “இன்பமே யுன்னைச் சிக்கென பிடித்தேன்” (பிடித்த) என்றும் மணிவாசகர் மொழிவது காண்க.
இதனால், பல்வகையால் அருள் செய்யும் இறைவற்கும் தமக்குமுள்ள உறவு முறை ஆராய்ந்தவாறாம். (13)
|