3042.

     பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
          பருவத்தே அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து
     நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
          நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
     நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
          நிறுத்தினைஇச் சிறியேனை நின் அருள்என் என்பேன்
     கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர் பார்க் கின்றார்
          குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே

உரை:

     குற்றம் புரிவதை உயிர்க் குணமாகக் கொண்டு பொறுத்தருளும் நற்குணக்குன்ற மாகியவனே, பாட்டுக்களைப் புனைந்து பாடும் திறத்தைச் சிறிதும் விரும்பி யறியாத இளமைக் காலத்தே அணிவகை பலவும் பொருந்துமாறு பாடும் கூறுபாட்டை அன்புடன் எய்துவித்து, பாடும் பாட்டுக்களின் நலம் தெரியும் நன்புலவர் கண்டு நன்கு மதிக்க நன்ஞானத்தை எனக்கு நல்கி, என்னுடைய புன்மையைப் போக்கி எய்திய ஞானம் நெடிது பெருகுதல் வேண்டிச் சுத்த சன்மார்க்கச் சிவ நெறியில் என் சிறுமை கண்டும் நிற்கச் செய்துள்ளாய்; நின் திருவருளிற் கூடத்தக்க நல்லோரெல்லாம் நின்னுடைய திருக்குறிப்பை எதிர்நோக்கி எனக்கருளிய நின் அருட் பண்பை என்னென்பேன். எ.று.

     ஒருவர்க்குக் குணம் இயற்கையும் குற்றம் செயற்கையுமாயினும், குற்றத்தைக் காணுமிடத்துக் காண்பார்க்கு வெறுப்பும், குணம் காணுமிடத்து விருப்புமுண்டாதல் இயல்பு. வல்லவர் பிறர் குற்றத்தையும் குணமாகக் கொண்டு வெறுப்பதிலராவர்; எல்லாம் வல்ல பெருமானுக்குக் குற்றத்தைக் குணமாகக் கோடல் எளிதாவது கொண்டு “குற்றமெலாம் குணமாகக் கொண்ட குணக்குன்றே” என்று கூறுகின்றார். பாட்டை யிசைத்தற்கும் புனைதற்கும் இயலும் முறையும் உண்மையின், இசை முறையும் யாப்பு முறையும் உரிய பருவத்தில் பயில்வது நெறியாதலால் சிறு பருவத்தின் நிலைமையை விளக்கப் “பாடும் வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய பருவத்து” எனப் பகர்கின்றார். அணுத்துணை சிறிதளவு. செவி வழியாகப் பன்முறையும் கேட்டலால் இசை யாப்புகளில் பரிவும், பின்பு அவற்றின் இயலறிதற்கண் விருப்பும் உண்டாதலால், இரண்டு மில்லாத இளம் பருவத்தைப் “பரிந்தறியாச் சிறிய பருவம்” எனச் சிறப்பிக்கின்றார். அப்பருவத்தேயே இசையைச் சுருதியும் தாளமும் கெடாமலும், பாட்டைச் சீரும் தளையும் பிழையாமலும் பல்வகை யணி நலங்களும் பொருந்தப் பாடும் திறமுடையரானது தோன்ற “அணிந்தணிந்து பாடும்வகை புரிந்து” என வுரைக்கின்றார். இசைப் புலமையும் யாப்பியலறிவும் கொண்டு பாடவும் பாட்டை யாராயவும் வல்லவர் பாடியும் தேர்ந்தும் மகிழத் தக்க வகையில் எனக்கு இரண்டையும் சிறக்க அருளினாய் என்பாராய், “நாடும் வகை யுடையோர்கள் நன்கு மதித்திடவே நல்லறிவு சிறிதளித்து” என்றும், இரண்டின் குறை யறிவு குற்றம் பலவற்றிற் கேதுவாதலால், அதனைப் போக்கினமை புலப்பட, “புல்லறிவு போக்கி” என்றும், இப் புலமை நலம் மறதியாற் கெடாமல் நெடிது பெருகுதற்குத் தம்மைச் சிவநெறிச் சுத்த சன்மார்க்கத்தில் நிறுத்தினமை விளங்க, “நீடும் வகைச் சன்மார்க்கச் சுத்த சிவநெறியில் நிறுத்தினை இச்சிறியேனை” என்றும் இயம்புகின்றார். நாடுதல் - ஆராய்தல். நன்கு மதித்தல் - நலம் பாராட்டல். நல்லறிவு - மிக்க அறிவு; திருவருள் அறிவுமாம்; இதனைப் பிறர் இயற்கை யறிவென்றும், உண்மை யறிவென்றும், நுண்ணறி வென்றும் கூறுவர். சிறிதளித்தல் - சிறு தீக் கொண்டு நெருப்பெழுப்புவது போலும் செயல் வகை; இது பற்றியே அறிவு தருதலை, அறிவு கொளுத்துதல் என அறிஞர் வழங்குகின்றனர். சிறு பருவத்தில் உடலுணர்வும் உயிருணர்வும் குறைவாக இருப்பதால் “சிறியேன்” என்கிறார்; இகரச் சுட்டு, தன்னைச் சுட்டும் தன்மைக்கண் வந்தது. இப்புலமை எய்துதற்கு வேறு வாயில் இல்லையாதலின், “நின் அருள்” எனக் காட்டி, அதனை வியந்து பராவுவாராய், “என்னென்பேன்” என இயம்புகின்றார். கூடும் வகை, ஞானமும் செய்கையும் கொண்டு சிவானந்தத்திற் கூடும் சிறப்பு. அவரெல்லாம் எதிர் நோக்கும் திருவருளை எனக்கருளினாய்; நின் திருவுள்ளம் இருந்தவாறு என்பராய், “கூடும் வகை யுடையோர்கள் குறிப்பெதிர் பார்க்கின்றார்” என உரைக்கின்றார்

     இதனால், இசையும் யாப்பு வன்மையும் திருவருள் ஞானமும் உடையோர் எதிர்பார்த்து நிற்கச் சிறு பருவத்தே எனக்கருளினை என வியந்து அன்பு செய்தவாறாம்.

     (14)