3043. சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
உரை: சிறிதும் அறிவில்லாத என்னை வலிய ஆண்டருளித் தனியனாகிய என் குற்றங்களையும் குணமாக ஏற்றுக்கொண்டு, கற்பன கற்றறிந்தும் சான்றோர்பாற் கேட்டும் தெளிவுடையராகிய பெருமக்களும் என்னைக் கண்டு மகிழுமாறு செய்து, என் பழைய வினைகளையும் போக்கி மேலும் அறிய வேண்டிய எல்லாவற்றையும் யானே அறியச் செய்து, என்னுடைய மனத்தின்கண் நிலை பெறுகின்ற மெய்யின்ப வாழ்வருளும் முதல்வனே, அறிவு பெற்றும் பேதையாகிய என் மேல் உனக்குப் பேரருள் செய்ய வேண்டுமெனத் திருவுள்ளம் வந்தது எவ்வாறு, கூறுக. எ.று.
சற்று - சிறிதென்னும் பொருளில் நிலவும் வழக்குச் சொல். அறிவில்லாத எனையும் என்றவிடத்து அறிவென்றது, திருவருட் பேற்றுக்குரிய உண்மை யறிவு. வலித்தாளுதல் - தானே வலிய வந்து ஆளுதல். தமியேன்-தனித் திருப்பவன். தம்மை யுடைய இறைவனைத் தமி என்பதுபற்றித் தமியான இறைவனைத் தனக்குள் உணர்ந்துடையவன், தமியேன் என நயம் காண்பவரும் உண்டு. மெய் கண்ட தேவர் சிவபரம்பொருளைத் தமி எனக் கூறுவர். குற்றத்தைக் குணமாகக்கொண்டு, ஏற்பது சம்மதம்; இசைவுமாம். கற்பன கற்றுணர்வதும், உணர்ந்தோர்பாற் கேட்டறிவதும் அறிவுப் பேற்றுக்கு வாயிலாதலால், அறிவுடையோரை, “கற்று மறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவர்” எனச் சிறப்பிக்கின்றார். “கற்றல் கேட்டல் உடையார் பெரியார்” (பிரமா) என ஞானசம்பந்தர் பாடி யருளுவது நோக்குக. என் செயலும், தெளிவுடையார் செய்யும் செம்மைப் பணியாதல் கண்டு, என்னையும் தெளிவுடைய பெருமக்கள் உவக்கின்றனர் என்றற்குக் “கற்று மறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும் கண்டு மகிழப் புரிந்து” என்று கூறுகின்றார். கற்றுணர்ந்தார் இறைவன் நற்றாளை யுணர்ந்து பரவுவது அவரது நற்செயல்; “உற்றாரிலாதார்க் குறுதுணையாவன ஓதி நன்னூல் கற்றார் பரவப் பெருமை யுடையன” (ஐயா) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காண்க. தம்மைச் செய்த உயிரைப் பற்றித் தன் பயனை நுகரும் பொருட்டு உணர்வைச் சோர்வித்து, மயக்கும் இயல்பு முன்னை வினை செய்யும் தீமையாதலின், அதனை விலக்குவது ஞானப் பேற்றுக்கு இன்றியமையாமையாலும், அதனை விலக்க வல்லவன் இறைவனல்லது வேறெவரும் இல்லாமை பற்றி, “பண்டை வினை யகற்றி” என்கின்றார்.
“வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” (சிவ. போ.) என மெய்கண்டார் விளம்புவது காண்க. வினை யிருள் நீங்க விளங்கிய ஞானத்தால் அறிய வேண்டுவன பலவும் அறிதற்குரிய வன்மை யுளதாக, அக்காலை இறைவன் திருவருள் ஞான மெய்துவிக்கும் திறத்தை, “மற்றும் அறிவன வெல்லாம் அறிவித்து” எனவும், அந்த ஞானம் நிறைந்து தூயதாய மனத்தின்கண் இறைவன் எழுந்தருளும் நலம் புலப்பட, “என்னுளத்தே மன்னுகின்ற மெய்யின்ப வாழ்க்கை முதற்பொருளே” எனவும் கூறுகின்றார். ஞானத்தால் உளதாகும் இன்ப நிலைபேறுடையதாகலின், “மன்னுகின்ற மெய்யின்பம்” என்றும், அதனை நுகர்ந்து வாழும் வாழ்க்கையை, “மெய்யின்ப வாழ்க்கை” யென்றும், அதற்கெல்லாம் இறைவன் முதல்வனாதலால் “முதற்பொருளே” என்றும் இசைக்கின்றார். பெறுவன பெற்றும், பேணி நுகரும் அறிவில்லாமை கண்டு, வெறுத்துக் கையொழியாது அருளறிவு தந்து, இறைவன் நுகர்விக்கும் செயற்குக் காரண மொன்றிருத்தல் வேண்டுமென்ற எண்ணம் இயல்பாய் எழுதலால், “பெற்றும் அறிவில்லாத பேதை என்மேல் உனக்குப் பெருங்கருணை வந்தவகை பேசு” என வேண்டுகின்றார். மெய்யறிஞர் மயங்கக் கண்டு இரங்குதலினும், பேதையின் பேதைமை கண்டு இரங்குதல் பெரிதாகலின், “பெருங்கருணை வந்த வகை” என வினாவுகின்றார்.
இதனாற் பெருமானது பெருங் கருணைத் திறம் அறிய விழைந்தவாறாம். (15)
|