3044. சுற்றதுமற் றவ்வழிமா சூததுஎன் றெண்ணாத்
தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே.
உரை: ஒளி மிக்க மணிகள், வேய்ந்த அம்பலத்தில் திருக்கூத்தியற்றும் என் தலைவனே, சுற்றிச் செல்வது இவ்வழி; பெரிய சூது நிறைந்தது அவ்வழி என்பது நினைந்து, தொண்டுள்ளம் கொண்ட நன்மக்கள் பலரும், முற்காலத்தும் இக்காலத்தும் ஆராய்கின்றார்களாயினும், உண்மை நெறி இதுகாறும் கண்டிலர்; நின்னுடைய திருவருளால் நான் கற்பதும் கேட்பதும், கண்டதும் உள்ளத்தே யுணர்ந்து கொண்டதும், நன்ஞானம் பெற்றதும், அதனின்பத்தை நுகர்வதும் நின்னிடத்தேயாகும்; பெரிய தவமே புரிந்துள்ளேன்; என் தன்மை அதிசயமாக இருக்கிறது, காண். எ.று.
ஞானப் பேறு விழையும் நன்மக்களைத் தொண்டர் என்றும், ஞான வேட்கையைத் தொண்டுள்ளம் என்றும் பெரியோர் கூறுவர். இந்த நூல் கூறும் வழி தெளிவின்றிச் சுற்றிச் சுற்றிச் சென்று காலத்தைப் போக்கும் என்றும், அந்த நூல் கூறும் நெறி வஞ்சனையும் பொய்யும் நிறைந்தது. என்றும் சமயவாதிகளான நூலோர் கூறுவதால் மேற் கூறிய தொண்டர் பலரும் கலக்கமுற்று உண்மை காணலுற்று அவர்தம் நூல்களைப் படித்த வண்ணமுள்ளனர் என்பாராய், “கற்றது, மற்று அவ்வழி மாசூது என்று எண்ணாத் தொண்டரெலாம் கற்கின்றார்” என்றும், இது முற்காலத்தன்றி இக்காலத்தும் நிகழ்கின்ற தென்றற்கு, “பண்டும் இன்றும்” என்றும், இவ்வாறு கற்றும் உண்மை நெறி இன்னதென இதுவரையும் தெளிந்திலர் என்பாராய், “காணார்” என்றும் கூறுகின்றார். எல் ததும்பல் - ஒளி மிகுதல். துரை - தலைவன். வள்ளற் பெருமான் காலத்தில் சென்னை நகர், சைவ வைணவச் சமயப் பூசலுக்கும், வேதாந்த சித்தாந்தப் பூசலுக்கும் பெருங்களரியாய் இருந்தமையின், உண்மை நெறி காணும் தொண்டர் கூட்டத்தை இவ்வாறு எடுத்துரைக்கின்றார். ஒருவன் கற்றற்குரிய உடற் கருவிகளும், கேட்டற்குரிய கரணங்களும் இறைவனது திருவருள் இயக்கம் காரணமாக நிகழ்வன எனச் சைவ ஞான நூல்கள் உரைப்பது கண்டு, “நின்னுடைய அருளால் கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே” எனவும், உயிர்கள் உலகியற் பொருணிகழ்ச்சிகளைக் காண்பதும், உண்மை யுணர்வதும் திருவருளாலன்றி யில்லை எனப் பெரியோர்கள் கூறுவது கொண்டு, “கண்டதும் நின்னிடத்தே உட்கொண்டதும் நின்னிடத்தே” எனவும், கல்வி கேள்விகளாலும், காட்சி கருத்தாகிய அளவைகளாலும் பெற்ற அறிவும், நுகர்ந்த இன்பமும் திருவருட் பயனென அறிந்தமை புலப்பட, “பெற்றதும் நின்னிடத்தே இன்புற்றதும் நின்னிடத்தே” எனவும் விரித்துரைக்கின்றார். இதனை, “அவனருளே கண்ணாகக் காணினல்லால். . .இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே” (வினாவிடை) எனவும், “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” (தனி) எனவும், குற்றம் நீ குணங்கள் நீ கூடலால வாயிலாய், சுற்ற நீ பிரானும் நீ தொடர்ந்திலங்கு சோதி நீ, கற்ற நூற் கருத்து நீ அருத்தம் இன்பம் என்றிவை முற்றும் நீ, (ஆலவாய்) எனவும், “கூறு நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ, தேறும் வகை நீ, திகைப்பு நீ, தீமை நன்மை முழுதும் நீ” (குழைத்) எனவும் சான்றோர் கூறுவன காண்க. ஏனைத் தொண்டரினம் பெறாத திருவருட் சார்பு தமக்குண்டானதைத் தாம் செய்த தவப் பயனாகக் கருதுகின்றாராதலின், “பெரிய தவம் புரிந்தேன்” என்றும், இக்கருத்து அதிசயம் விளைவித்தமையால், “என் பெற்றி அதிசயமே” என்றும் இயம்புகின்றார்.
இதனால், தாம் பெற்ற கல்வி கேள்வி, முதலிய நலம் பலவற்றிற்கும் முதல் திருவருட் சார்பென்பது உணர்த்தியாவாறாம். (16)
|