3045. ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
உரை: மிக்குற்ற மெய்யன்புடைய சான்றோர்களின் மன மென்கிற அம்பலத்தில், மகிழ்வுடன் திருக்கூத்தாடுகின்ற, ஒப்பற்ற பரம்பொருளே, திருவருள் நெறியில் மேன் மேற் சென்ற பொழுதில் ஒரு நிலையில் மேற்செல்ல மாட்டாமல், இளைத்தேனாக, அக் காலத்தே என் மன நினைவு அனைத்தும் கெடுமாறு, சிறப்புடைய கால சத்தியொன்று எனக்குள் கை கொடுத்து ஊக்கி மேனோக்கிச் செல்லவுதவிற்றாக, நானும் மேற்சென்று அச்சத்தியை அடைந்து தெளிந்த நீர் போல என் மனம் தெளிவு மிகுந்து இன்புறச் செய்தாய்; இவ்வுதவியை வேறு எவர் செய்வர். எ.று.
ஊறுதல் - சுரத்தல். நீரூற்றுப் போலச் சான்றோர் உள்ளத்தில் உண்மையன்பு சுரந்தவண்ணமிருத்தல் தோன்ற “ஊறிய மெய்யன்புடையார்” என்றும், அவருடைய அன்புள்ளத்தில் சிவத்தின் திருநடனம் நிகழ்வது விளங்க, “உள்ளமெனும் பொதுவில் உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருள்” என்றும் உரைக்கின்றார். சிவமெனவும், சிவபரம்பொருள் எனவும், பரம்பொருள் எனவும் கூறப்படும் அதுவே பெரிய பொருள் என்ற கருத்தில் பிரமப் பொருள் எனவும், பிரமம் எனவும் நூல்களில் வழங்குமென அறிக. திருவருள் யோகத்தில் தோய்ந்திருந்த வள்ளற் பெருமான், ஒருகால் சோர்வுற்றுத் தடுமாறிய அனுபவத்தை இங்கே குறிக்கின்றார். திருவருள் நினைவில் தோய்ந்து ஒன்றியிருந்த நிலையில் உடற் சோர்வினாலோ, உள்ளச் சோர்வினாலோ ஒன்றும் யோகம் கலைந்து மேலே தொடர மாட்டாராயினமை புலப்பட, “ஏறிய நான் ஒரு நிலையில் ஏறவறியாதே இளைக்கின்ற காலத்து” எனவும், அப்போதில் திருவருட் காலசத்தி உள்ளூறத் தோன்றி ஊக்கிய நலத்தை, “இளைப்பெலாம் ஒழிய வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்துத் தூக்கி மேலேற்றச் செய்து” எனவும், ஊக்கியதோடு நீங்காமல் உடனிருந்து ஞானத் தெளிவு மேவ வுதவிய திறத்தை “அவளை மேவுறவும் செய்து தேறிய நீர்போல் எனது சித்த மிகத் தேறித் தெளிந்திடவும் செய்தனை” எனவும், இவ்வாறு தோன்றாத் துணையாகுமவர் நின்னின் வேறிலர் என்பாராய், “இச்செய்கை எவர் செய்வார்” எனவும் உரைக்கின்றார். தேறுதல் - தெளிதல். யோக முயற்சிக்கும் போக நுகர்ச்சிக்கும் பொதுவாய் நின்று துணை புரியும் திருவருட் சத்தி காலத்தினாற் செய்யும் உதவி நோக்கிக் கால சத்தி எனவும், பருவசத்தி எனவும் வழங்கும். ஞானவொளி நல்கும் காலத்துச் சிவசத்தி எனப்படும் அத் திருவருள் மலத்தினூடு கலந்து உயிரறிவை மறைக்குமிடத்துத் திரோத சத்தி எனப்படுவது போல, என அறிக. சத்தியைப் பெண் எனக் கூறும் மரபு பற்றிப் பருவ சத்தியை, அவள் எனச் சுட்டுகின்றார்.
இதனால், திருவருள் யோகானுபவம் தெரிவித்தவாறாம். (17)
|