3046.

     தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
          தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
     இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
          இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
     பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
          பெற்றி அளித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
     ஒருநிதிநின் அருள் நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
          உயர்பொதுவில் இன்பநடம் உடையபரம் பொருளே.

உரை:

     உயர்ந்த ஞான சபையில், இன்ப நடம் புரியும் பரம் பொருளே, ஈட்டப்படும் செல்வத்தைக் குன்றுபோற் குவித்தற் பொருட்டு வருந்துகின்ற மனம் உடைமையால் சோர்ந்த சிறியவனாகிய எனது தளர்ச்சி யாவையும் போக்கி இருவகை நிதிகளையும் பெற வளிக்கும் செல்வ மகளிர் இருவரும் என் பால் வந்து வணங்கி, அப்பனே, இருவகைச் செல்வங்களையும் ஏற்றுக் கொள்க; அவற்றைத் தருதற்கே இவண் வந்துள்ளோம் என மகிழ்வோடு சொல்லிப் பெருஞ் செல்வம் எனக்கு வாய்க்கச் செய்து, பின்பு அது வேண்டி என்முன் பாடுவோர் பாட ஆடுவோர் ஆட விளங்கும் தன்மையை எனக்கு அருள் செய்தாய்; பேதையாகிய எனக்கு ஒப்பற்ற நிதியமாகிய நினது திருவருளாகிய நிதியையும் உவப்புடன் அருள வேண்டுகிறேன். எ.று.

     நிதியக் குரு-செல்வக் குன்றுகள்; பல்வேறு இடங்களிலிருந்து கொணர்ந்து குவிக்கப்படுவது பற்றித் “தருநிதியக் குரு” எனச் சிறப்பிக்கின்றார். குரு-மண் மலை. மண் குன்று மிக்க நாட்டைக் குருநாடு என்றும், குரு க்ஷேத்திரம் என்றும் வழங்குவர். உலகியல் இன்ப வாழ்வுக்கு மலை போற் செல்வம் வேண்டுதலையறிந்து பல்வேறு நினைவுகளால் மனம் வேதனை யுறுதல் பற்றி, “நிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கும் மனத்தால்” என்றும், மனத்தைத் தன்வழிப் படுத்தாமல் அதன் வழி நிற்கும் சிறுமை புலப்பட, “மனத்தால் தளர்ந்த சிறியேன்” என்றும், இயம்புகின்றார். இருநிதியத் திருமகளிர் இருவர், சங்க நிதி பதும நிதி என்ற இரண்டிற்குமுரிய தெய்வ மகளிர் இருவர்; இவ்விருவரும் சங்க லட்சுமி, பதுமலட்சுமி, எனப்படுவர். அவர் தரும் செல்வத்தை மறுப்பே னென ஐயுற்று, என் முன் போந்து வணங்கி, என் மனச் சோர்வை நீக்கி, அப்பனே, உன் பொருட்டே யாங்கள் வந்துள்ளோம்; மறுக்காமல் இவ்விருவகை நிதிகளையும் ஏற்றுக் கொள்க, என மனமகிழ்ச்சியோடு இப்பெருஞ் செல்வத்தைக் கொடுக்கவும் என்பாராய், “தளர்வெலாம் தவிர்த்து இருநிதியத் திருமகளிர் இருவர் எனை வணங்கி, இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்திசைத்துப் பெருநிதி வாய்த்திட” எனவும், செல்வர்பாற் செல்வம் பெறல் வேண்டிப் பாடுவோரும் ஆடுவோரும் வருவதும், அவர்கட்கு வேண்டுவன அளித்தலும் செல்வர்கட்குப் புகழ்பயத்தலின், “எனது முன் பாடியாடும் பெற்றியளித்தனை” எனவும் இயம்புகின்றார். இஃது ஒன்றே எய்தின் நல்லறிவில்லாத யான் கெடுவேன்; இச் செல்வத்தோடு நினது திருவருட் செல்வமும் எனக்கு எய்துமாறு நீ அருள் புரிதல் வேண்டுமென்பாராய், “இந்தப் பேதைமையேன் தனக்கு ஒருநிதி நின் அருள் நிதியும் உவந்தளித்தல்வேண்டும்” என வேண்டுகின்றார். பொருட் செல்வத்தினும் அருட் செல்வம் சிறப்புடைத்தாதலால், “ஒருநிதி நின் அருள் நிதி” என உரைக்கின்றார். நிதியும் என்புழி, உம்மை இறந்தது தழீஇயது. வாய்ப்ப நல்க என்பது “வாய்த்திட” என வந்தது. பெற்றி - பெருமை. பாடி யாடும் பெற்றி, பாடியும் ஆடியும் வேண்டும் பரிசிலை நல்கும் பெருந்தன்மை.

     இதனால், பொருட் செல்வத்தோடு அருட் செல்வம் அளித்தல் வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (18)