3047.

     அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
          ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
     செஞ்சாலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
          திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
     எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
          இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
     துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
          துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே.

உரை:

     துஞ்சும் பொருள்கட் குரிய ஆதியும் முடிவுமில்லாத தூய நடம் புரிகின்ற அருளரசே, துரிய நிலைக்கண் நடுவிடத்தே விளங்குகின்ற சுயஞ் சோதியையுடைய மாணிக்க மணியே; என் மகனே என என்னை யழைத்து அஞ்ச வேண்டா; உனக்கு அருள் செய்துள்ளோம்; இவ்வுலகில் விரும்பியவாறு வாழ்க; செஞ்சாலி யென்னும் நெல்விளையும் வயல்கள் நிறைந்த தில்லையில், உள்ள சிற்றம்பலத்தில் நிகழ்கின்ற திருக்கூத்தைத் தரிசித்து அன்புருவும் சித்த சுத்தனுமாய், குறையாத இன்பம் நெடுங்காலம் நுகர்ந்து, இனிது வாழ்க எனத் திருவாய் மொழிந்தருளினாய், நினது அன்பை என்னென்பேன். எ.று.

     தோற்றக் கேடுகளையுடைய எப்பொருளும் எச்செயலும் நிலையின்றிக் கெடுவது உண்மையாகலின், என்றும் உள்ள சிவத்தின் திருக்கூத்து, “துஞ்சு ஆதியந்தம் இல்லாச் சுத்த நடத்து அரசே” என்றும், உந்தித் தானமாகிய துரியத்தின் நடுவிலிருந்து நோக்குவோர்க்கு அருட் சோதியுடன் காட்சி தருதல் விளங்கத் “துரிய நடுவே இருந்த சுயஞ் சோதி மணியே” என்றும் சொல்லிப் பரவுகின்றார். தனக்குச் சிவபரம் பொருளின் திருவருட் காட்சி எய்திய அனுபவத்தை எடுத்தோதுவாராய், அருள் நலம் விளங்க என் மகனே நீ அஞ்சுதல் வேண்டா; நீ வாழ்வாங்கு வாழ்ந்து இவ்வுலகில் இன்புறுக என வுரைத்தருளினார் என்பாராய், “அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம் ஆடுக நீ வேண்டியவாறாடுக இவ்வுலகில்” என வுரைக்கின்றார். செஞ்சாலி - நெல்லில் உயர்ந்த வகை. தில்லைப்பதி நெல் வளமிக்க மருதப் பணையாகலின், “செஞ்சாலி வளமோங்கு தில்லை” என்று சிறப்பிக்கின்றார். திருநடக் காட்சி உன்னை மெய்யன்புடையனாக்கி அதனால் விளக்கமுறும் தூய சிவ ஞானத்தால் நீயும் சித்தை தூயனாவாய் என்பார், “திருநடங் கண்டு அன்புருவாய்ச் சித்த சுத்தனாகி” என்றும், சுத்த சித்தமுடையவர்களின் விழைவும் செயல்களும் தூயவாய் நலம் பயப்பனவாதல் பற்றி “எஞ்சாத நெடுங்காலம் இன்ப வெள்ளம் திளைத்தே இனிது மிக வாழி” என்றும், இத்தகைய வாழ்வு தானும் இறைவன் அருளாலன்றி எய்துவ தன்றென்பது புலப்பட, “எனக்கருளிச் செய்தாய்” என்றும் உரைக்கின்றார். சிந்திக்கும் செயலால் மனம் சித்தம் எனப்படுகிறது. வாழ்க்கை விளையாட்டாக மதிக்கப்படுவது பற்றி, “ஆடுக நீ வேண்டியவாறாக ஆடுக இவ்வுலகில்” என இயம்புகிறார். நம்பியாரூரரைத் தடுத்தாட்கொண்டு வாழ்வித்த சிவபெருமான், “நின் வேட்கை தீர, வாழி மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூர் கேட்க எழுந்தது” (தடுத்தாட்) எனச் சேக்கிழார் தெரிவிப்பது காண்க. வேண்டியவாறாவது, மெய்யன்புக்கும் தூய சிந்தைக்கும் ஒத்தபடி, விழைவன விழைந்து செய்வன செய்தொழுகல்.

     இதனால் திருவருட் காட்சி யனுபவம் கூறியவாறாம்.

     (19)