3048.

     நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
          நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
     தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
          தத்துவனே மதி அணிந்த சடைமுடிஎம் இறைவா
     தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
          சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
     வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில் நடம் புரிவாய்
          மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.

உரை:

     வானுலகத்துத் தேவர்களும் விரும்பிக் கேட்கும் புகழ் கொண்ட தில்லையிலுள்ள, அம்பலத்தில் நடம்புரியும் பெருமானே: நீலமணி போலும் கழுத்தையுடைய பெரிய கருணை யுருவாக விளங்கும் வள்ளலே, என் கண்ணின் மணி போன்றவனே, தேன் போன்ற சொற்களையுடைய உமாதேவியை ஒருபாகத்தே யுடையவனே, சிவனே, எம்பெருமானே, தேவர்கட்கெல்லாம் பெரிய தேவனே, எல்லாம் வல்ல சித்தருட் சிவ சித்தனே, பிறர்பாற் கேட்கத் தக்க தொன்றுமின்றாக எல்லாவற்றையும் ஒருங்கே முற்றவும் உணர்ந்த முதல்வனே, தத்துவப் பொருளாயவனே, பிறைச்சந்திரனை யணிந்த சடை பொருந்திய முடியையுடைய இறைவனே, எனக்கு நல்லவனாய், நான் விரும்பிக் கேட்பன அனைத்தையும், எனக்கு நல்கி யருளுகின்றாயாதலால் இனி எனக்கு ஒரு குறையும் இல்லையாம். எ.று.

     சிவனது திருப்புகழைத் தேவரும் மக்களும் ஓதக் கேட்டு, உவகை மிகுகின்றார்கள் வானுலகத்துத் தேவர்கள் என்றற்கு, “வான் கேட்கும் புகழ்த் தில்லை மன்றில் நடம் புரிவோய்” எனப் புகழ்கின்றார். மணி - நீல மணி. மிடற்றின் மணி நிறம்-தேவர்கள் உய்தல் வேண்டிக் கடல் விடமுண்டருளிய, கருணையை நினைவில் மிகுவித்தல் பற்றி, “பெருங் கருணை வள்ளல்” என்றும், அந்நினைவே சிவஞானமாய் யாவையும் அறியச்செய்தலால், “என் கண்மணியே” என்றும் இசைக்கின்றார். தேன் கேட்கும் மொழி, தேனைப் போல் இனிமைச் சுவை பொருந்திய சொல்; கேட்கும், உவம வாய்பாடு. எம் பெருமானே என்றவிடத்து, எம்மென்ற தன்மைப் பன்மை மக்களினத்தை யுளப்படுத்தலின், தேவர்களிடையே நிலவும் சிறப்புரைக்க வேண்டித் “தேவர் பெருமானே” எனக் கூறுகின்றார். முற்று முணரும் முழு ஞான முதல்வனாதல் விளங்கச் சிவபிரானை, “தான் கேட்கின்றவையின்றி முழு தொருங்கே யுணர்ந்தாய்” எனவும், தத்துவ தாத்துவிகக் கூறுகள் அனைத்தும் தன்னுருவாகக் கொண்டவ னென்பார், “தத்துவனே” எனவும் கூறுகின்றார். பிறைதங்கிச் சடை முடியின் வழகைப் பெறுதல் தோன்ற, “பிறை யணிந்த சடைமுடியெம் இறைவா” என்கின்றார். கேட்பவற்றை மறாமல் கொடுப்பவரை, நல்லவரென்னும் உலகியல் மரபு நோக்கி, “எனக்கு நல்லவனே என்றும், எல்லாம் வல்ல சித்தர்கட்கு அவ்வல்லமையை அருளும் தலைவனாதல் பற்றி, “எல்லாமும் வல்ல சிவசித்தா” என்றும் இசைக்கின்றார். கேட்பன அனைத்தையும் கேட்டவாறே நல்கப் பெறுவதால் குறைவின்மை குறிப்பெச்சத்தால் கூறப்பட்டது.

     இதனால் வேண்டியன வேண்டியாங்குப் பெற்ற அனுபவம் கூறியவாறாம்.

     (20)