3049. ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
வானந்த முதல்எல்லாஅந்தமுங்கண் டறிந்தோர்
மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
உரை: இன்பம் நிலவும் ஞான வெளியில் இன்ப வுருவாய், இன்ப நடனத்தைச் செய்தருளும் இன்பச் சுவை மிக்க அமுதமே, அண்டங்கட்கு முடிவிடமாகிய அந்த முதற் கொண்டு நாதாந்த மீறாக நிலவும் எல்லா அந்தங்களையும் கண்டுணர்ந்த பெருமக்கள் அறிந்து வியக்கும் சிவபரம்பொருளே, வெண்ணிறப் பிறைத் திங்களை முடியிற் கொண்ட சிவந்த கனி போன்றவனே, இருள் தங்கிய மாயையாலாகிய உடலிடத்திருந்தேனாயினும், இருளடராத வகையில் இருக்கும் உபாயத்தை எனக்கு அளித்தருளினாய் நல்லவனே; நான் அந்த உபாயத்தைத் தெளிந்து கொண்டு, செய்யத் தகுவனவற்றை எனக்கு உவந்து உரைக்க என்பால் வந்தருள்க. எ.று.
ஆனந்தம் - இன்பம். இன்பம் ஞானமயமாதலின், ஞானாகாசமாகிய சிற்றம்பலத்தை “ஆனந்த வெளி” என்றும், அங்கே நின்றாடும் கூத்தப் பிரான் இன்ப வடிவினனாதலால், “ஆனந்த வடிவாய்” என்றும், அப்பெருமான் கூத்து, எவ்வுயிர்க்கும் இன்ப அன்பினை வழங்குவது கொண்டு, “ஆனந்த நடம் புரியும் ஆனந்த அமுதே” என்றும் பராவுகின்றார். இது சொற் பொருட் பின் வருநிலை. ஏனை வருமிடங்களிலும் இதுவே கூறிக்கொள்க. வான் என்றது, வானத்துப் பலவாகிய அண்டங்கள்; அவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கும் வானமுகடு வானந்தம் எனப்படுகிறது. நில முதல் சிவ மீறாகக் கூறப்படும் தத்துவங்கட்கு அந்தமாவது நாதாந்தம். இவற்றிடையே யோகாந்தம் போதாந்தம் எனப் பல அந்தங்கள் உண்மையின், அவை யெல்லாம் அடங்கவே, “எல்லா அந்தமும் கண்டறிந்தோர்” என மொழிகின்றார். இவை பலவும் கண்டறிந்த நுண்ணறிவோர் நுண்ணிதின் உணரும் பொருளாதலின் சிவனை, “அறிந்தோர் மதிக்கின்ற பொருள்” என அறிவிக்கின்றார். செம்மேனியனாதலால், சிவனைச் “செங்கனி” எனச் சிறப்பிக்கின்றார். ஊனம் தங்கிய மாயை, ஊனமாகிய இருள் செய்யும் மயக்கம் தரும் மாயை. “ஊனத்திருள் நீங்கிட வேண்டின்” (மயிலாடு) எனவும், மாயா காரியமாகிய வுடம்பை, “ஊனமாம் உடம்பு” (கானப்பேர்) ஏனவும் ஞானசம்பந்தர் கூறுகிறார். உடற்கு முதலாகிய மாயை விளைவிக்கும் மயக்கமாகிய இருள் தாக்காதவாறு திருவருணினைவாற் காத்துக் கொள்ளும் உபாயத்தை, “ஊனமிலா திருக்கின்ற உளவு” என்கிறார். நல்லவன் - நன்மையே உருவாகியவன். திருவருள் ஞான வுணர்வும், அதனைத் தாக்குவன வற்றினின்றும் காத்துக் கொள்ளும் உபாயமும் சிவத்தின் திருவருளாலன்றிக் கைவராமையின், “நீ மகிழ்ந்து சொல்ல வருவாயே” என வேண்டுகின்றார்.
இதனால், அறியாமை யிருள் தாக்காமற் காத்துக் கொள்ளும் உளவினை யுரைக்க வேண்டியவாறாம். (21)
|