3050.

     ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
          அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
     காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
          கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
     பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
          போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
     நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
          நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.

உரை:

     கண்ணுதற் கடவுளே, வேதமும் ஆகமமும் எதனை முதற்பொருள் எனத் துணிந்தனவோ அதுவே அம்பலத்தில் நிகழ்கின்ற திருக்கூத் தென்று எனக்குக் காரண காரியத்தோடு விளங்கக்காட்டி யருளினாய்; இங்கே இதற்கு என்ன கைம்மாறு செய்வேன்; பூரணப் பொருளாகிய நினக்கு அடித்தொண்டு செய்தொழுகும் சிறியவனாகிய யான், சிவனே போற்றி; சிவனே போற்றி என்று போற்றி செய்து மகிழ்கிறேன்; திருமால் பிரமன் முதலிய தேவர்களாற் காண்டற் கரிதாகிய அந்தத் திருக்கூத்தை, நாயிற் கடையாய அடியவனாகிய எனது இதய கமலத்தில் ஆடியருள்க. எ.று.

     ஆரணம் - வேதம். வேதாந்தமும் ஆகமாந்தமும் ஆய்ந்துரைக்கும் முடிவான உண்மை திருச்சிற்றம்பலத்தில் சிவன் நடிக்கும் திருநடனம் என்று திருவருட் சிந்தனையால் தமக்கு எய்தினமை விளங்க, “ஆரணமும் ஆகமமும் துணிந்தது எது அதுவே அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் எனத் தெரித்தாய்” எனவும், உண்மை யறிவோர், அதனை ஏது எடுத்துக் காட்டுக்களால் விளக்குவது மரபாகலின், “காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய்” எனவும் இயம்புகின்றார். ஆட்டம் - திருக்கூத்து, காரியத்துள் எடுத்துக் காட்டும் அடங்குதலின், காரண காரியம் என இரண்டுமே ஈண்டுக் குறிக்கப் படுகின்றன. “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதி” (பாச) எனத் திருஞானசம்பந்தர் உரைப்பது காண்க. தெரித்தல் - தெரிவித்தல். கண்ணுதல் - கண் பொருந்திய நெற்றி. பெறற் கருமை விளங்கக் “கைம்மா றொன்றறியேன்” என்று இசைக்கின்றார். பூரணனே என்பது பூரண என அண்மை விளியேற்றது. இதனைத் தமிழ் நூலோர் குறைவிலா நிறைவு என்பர். அடித்தொண்டு - திருவடி வழிபாடு. செய்வது திருவருட் பெருந் தொண்டாயினும் பணிவுடைமை பற்றி, “அடித் தொண்டு புரிகின்ற சிறியேன்” என்றும், திருவடியை மலரிட்டு வணங்கித் திருப்பெயரை வாயாற் போற்றுதல் திருத்தொண்டாதலின், “போற்றி சிவ போற்றி எனப் போற்றி மகிழ்கின்றேன்” என்றும் இயம்புகின்றார். திருநடனத்தின் உண்மைப் பொருளை யுரைத்தருளிய நீ என் மனத்தின் கண்ணும் சேரமான் பெருமாளுக்குப் பூசை முடிவிற் காட்டியது போல எளியனாகிய யான் அறிய ஆடி யருள்க என்று வேண்டுவாராய், “அந்நடத்தை நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள்வாயே” என முறையிடுகின்றார். பசு பாச ஞான மூர்த்தங்களாதலால், “நாரண நான்முகன் முதலோர் காண்பரும் அந்நடம்” என்கின்றார். காண்பு - காண்டல்.

     இதனால் திருவம்பல நடன வுண்மை தெரிந்தமை அறிவித்தவாறாம்.

     (22)