3051.

     இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
          எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
     உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
          உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
     மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே
          வாழ்முதலே பரமசுக வாரிஎண்கண் மணியே
     குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்
          கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.

உரை:

     நிலை பெற்ற மணி வேய்த அம்பலத்தின்கண் திருநடம் புரிகின்ற வாழ்வும் வாழ்முதலுமானவனே, மேலான சுகத்தைத் தருகிற கடல் போன்றவனே, எனக்குக் கண்ணின் மணியானவனே, தேய்வதில்லாத குளிர்ந்த சந்திரன் போன்றவனே, சிவகாமி யென்றும் கொடி பற்றிப் படர்ந்து ஓங்குகின்ற குண வுருவாய்க் குற்றமில்லாத குன்றமாகியவனே, இறைவனாகிய உனது திருவருள் ஞானத்தால் என்னைக் கண்டறிந்து எனக்குள் ஒளிரும் உன்னைக் கண்டறிந்தேன்; பின்பு நாம் இருவரும் பொருந்தி யிருப்பது கண்டு அதிசய மடைந்தேன்; ஆயினும் அந்த அதிசயத்தைப் போக்கி அனுபவத்தைப் பெறலாகும் உபாயத்தை இன்னும் அறிகின்றிலேன்; அவ்வுபாயத்தை அடியேனுக்கு உரைக்க வேண்டுகிறேன். எ.று.

     மறைவது இலா நடம் என இயையும். மணி மன்று - மணிகள் இழைத்த பொன்னம்பலம். நடம் புரியும் அருட் செயலால் உலகுயிர்கட்கு வாழ்வளிப்பதால் “நடம் புரியும் வாழ்வே” எனவும், வாழ்வுக்கு வேண்டிய நிலம் பொருள் கருவி கரணங்களுக்குரிய முதலுக்கும் இறைவனே காரணமாதலால் “வாழ்முதலே” எனவும் இயம்புகின்றார். “போற்றி யென் வாழ்முதலாகிய பொருளே” (திருப்பள்ளி) என மணிவாசகர் குறிப்பது காண்க. பரமசுகம் - சிவானந்தம். இன்ப மனைத்துக்கும் மேலானது பற்றிப் பரமசுகம் எனப்படுகிறது. கடல் போல் அளப்பரிதாகலின், “பரம சுகவாரி” எனக் கூறுகின்றார். சுகவாரி - சுகக் கடல். இன்ப சுகத்தால் அறிவு மயக்க முறாது ஞானவொளி மிக்கு விளங்குதலால் “என் இரு கண்மணியே” என இசைக்கின்றார். சுகவாரி என்பது தாயுமானார் கையாண்ட வழக்கு. உலகவர் காண விளங்கும் நிலவு குறைவதும் வளர்வது முடையதாகலின், சிவமாகிய ஞானத் திங்கள் அவ்வாறில்லை என்பாராய்க் “குறைவதிலாக் குளிர் மதியே” எனச் சிறப்பிக்கின்றார். தில்லையிற் சிவகாமி என்பது அம்மைக்குப் பெயராதலின், அவளைப் பசுங்கொடியாகவும், சிவபெருமானை அக்கொடி பற்றிப் படர்ந்து விளங்கும் குன்றமாகவும் புனைந்து, “சிவகாம வல்லிக் கொழுந்து படர்த்தோங்குகின்ற குண நிமலக் குன்றே” எனப் போற்றுகின்றார். இளமை நலமும் பசுமை நிறமும் புலப்பட, “வல்லிக் கொழுந்து; என்றும், தூய குணமே யுருவாகிய குன்ற மென்றற்குக் “குண நிமலக் குன்று” என்றும் கூறுகின்றார். தம்மை யுணர்ந்த பின்பே தலைவனை யுணர்தல் சான்றோர் இயல்பாதலால், “எனைக் கண்டு கொண்டேன்” எனவும், உயிராகிய தன்னைக் காணுமிடத்துத் தனக்குள் உயிர்க்குயிராகும் தலைவனைக் காணுதலின், “எனக்குள் உனைக் கண்டேன்” எனவும் இயம்புகிறார். இக்காட்சி தானும் திருவருளறிவாலன்றி நிகழ்வதின்மை புலப்பட, “இறைவன் நினதருளாலே” எனக் கூறுகிறார். மெய்கண்டாரும், “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்” (சிவ. போ.) என்பது காண்க. “தன்னாலே தனை யறிந்தால், தன்னையும் தானே காணும்” (சிவப்) என உமாபதி சிவனாரும் கூறுதல் காண்க. உயிரியல்பை யுணருமிடத்து உயிர்க்குள் உணர்வுருவாய் இறைவன் உறைவ துணரப்படுவது பற்றி, “பின் இருவரும் ஒன்றாக உறைவது கண்டு அதிசயித்தேன்” என வுரைக்கின்றார். உயிர்க்குயிராய் ஒன்றாதலும், உயிரும் உயிருமாய் உடனாதலும் காணப்படுதலின், காண்பார்க்கு வியப்புத் தோன்றுதலால் “அதிசயித்தேன்” என இசைக்கின்றார். “ஒன்றாய் வேறாய் உடனானான் இடம் வீழிம் மிழலையே” (வீழி) என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. அருமை பெருமைகளால் வேறாயவன் எளியனாய் ஒன்றாய் உடனாதல் வியப்பைத் தருவது உலகியல் மரபு; அதற்கு எனது சிற்றறிவு காரணமாகலாம்; அதனைப் போக்கிய வழி வியப்புணர்வு நீங்கும்; அதற்குரிய உபாயம் அருளுக, என வேண்டுவாராய், “அதிசயத்தை ஒழிக்கும் உளவறியேன்; அவ்வளவு ஒன்று உரைத்தருளல் வேண்டும்” என விண்ணப்பிக்கின்றார். அதிசயம் - வியப்பு; மருட்கையுமாம். அரியதில் அரிதாகிய பரம்பொருள் எப்பொருளிலும் கலந்து எளிதாதல் கண்டு மணிவாசகப் பெருமான், “அரியதில் அரிய அரியோன் காண்க; மருவி யெப்பொருளும் வளர்ப்போன் காண்க.” (அடைப்) என வியப்பது நோக்குக.

     இதனால், தன்னையும் தலைவனையும் கண்டு எய்திய, அதிசயத்துக் கேதுவாய மருட்கையைப் போக்க விண்ணப்பித்தவாறாம்.

     (23)