3052. சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.
உரை: மெய்ம்மையாகிய சச்சிதானந்த வடிவுடன் அம்பலத்தின் கண் ஒப்பற்ற திருநடனம் புரிந்தருளும் சற்குருவே, எளியனாகிய எனக்கு அறிவும் சித்தியும் நல்லுணர்வையும் நல்கிக் கெடாத தூய ஞான நிலையில் இருக்குமாறு திருவுள்ளம் செய்த பரம்பொருளே, பத்தி நெறியை அறியாத சிறியவனாகிய என்பால் உளதாகிய மயக்கத்தை மேலும் போக்கி, மேலாய ஞான வின்பத்தை எனக்கு உண்டாகப் பண்ணி, என்னுள்ளத்திற் படிந்துள்ள குற்றத்தை யொழித்துத் தத்துவப் பொருளாகிய நீ வேறு நான் வேறு என்னும் வேறுபாட்டைக் கெடுத்து, ஒப்பற்றதாகிய சுகாதீத நிலையையும் உவப்புடன் தந்தருள்க என வேண்டுகிறேன். எ.று.
மெய் சத்தெனவும், அறிவு சித்தெனவும், இன்பம் ஆனந்தம் எனவும் சமய ஞான நூல்கள் வழங்குதலால், அம்மூன்றையும் சேர்த்துச் சச்சிதானந்தம் என ஒரு சொற் படுத்திக் கூறுவர். சச்சிதானந்தத் திருவுருவை, “மெய்யறிவு இன்ப வடிவாகி” என்றும், இவ்வடிவம் என்றுமுள்ள மெய்ப் பொருளாதல் விளங்க, “சத்திய மெய்யறி வின்ப வடிவாகி” என்றும் இயம்புகின்றார். உலகுயிர்கட்கு உய்தி விளைவிக்கும் திருக்கூத்தாதலால், “தனி நடம்” என்றும், நடம் புரியுமாற்றால் கண்டு மகிழ்பவர்க்கு நன்ஞானம் எய்துவித்தலால் கூத்தனே என்னாமல் “சற்குருவே” என்றும் புகழ்கின்றார். கண் காது முதலிய கருவிகளாற் கண்டும் கேட்டும் அறிந்தவற்றை மனமாகிய கரணத்தால் தெளிந்து பெறும் உண்மை யுணர்வு புத்தி என்பது. புத்தியின் நன்மையும் தீமையும் அருள் வழி யியங்கும் உயிருணர்வின் பயனாதலால், நற்புத்தி உளதாயதற்குத் திருவருள் முதலாவதைப் புலப்படுத்தற்கு “அளித்து” என இறைவன் செயலாகத் தெரிவிக்கின்றார். வருகின்ற சித்திக்கும் நல்ல அறிவுக்கும் இதுவே நிலைமையாகக் கொள்க. சிந்தித்தவை சிந்தித்தவாறே கைவரபெறுவது சித்தி; நலம் தருவதை நாடிக் காண்பது நல்லறிவு. தூய வாழ்க்கைக்கு இவை வேண்டப்படுதலால் இவற்றை இனிதளிக்குமாறு வேண்டுகிறார். இயற்கையிலேயே இவை யாவர் பாலும் உள்ளன வாயினும் மறவாமல் நினைவின்கண் நிலவுமாறு காத்தலை வேண்டி இறைவன்பால் முறையிடுகிறார். இடரினும் தளரினும் நோயுறினும் நினைவும் சொல்லும் செயலும் தீய நெறியிற் செல்லாத தூய நிலையைப் “புனித நிலை” யென்றும், குண மயக்கத்தால் தவறுண்டாதல் இயல்பாதலால், “அழியாப் புனித நிலை” என்றும், அந்நிலையில் தம்முடைய கருவி கரணங்கள் செயற்பட்டிருத்தல் விளங்க, “புனித நிலைதனிலிருக்க புரிந்த பரம்பொருளே” என்றும் இயம்புகின்றார். பொருள்களில் தோற்றமும் செயலும் இயலும் காண்பார் குணங்களை மாற்றுவனவாக, மாறாமல் செந்நிலையில் நிற்கப் பண்ணும் நீர்மை கண்டு சிவனை, “பரம் பொருளே” எனப் பகர்கின்றார். குடி வரவாலும் பெரியோர் செயலாலும், இறை யுணர்வாலும் தூய்மை பெருமைகளையுடைய தெய்வத்தின்பாலும், பெற்றோர் பெரியவர்பாலும் உளதாகும் நன்மதிப்பு உள்ளம் பத்தியாகும். நலமும் பெருமையும் தெரிந்தாலன்றி நல்ல பத்தி யுணர்வு எய்தாதாகலின், “பத்தியறியாச் சிறியேன்” எனத் தம்மை யுரைக்கின்றார். மயக்கம் காம வெகுளிகள் போல முற்றவும் கடியப் படாத வியல்பிற்றாதலால், “மயக்கம் இன்னும் தவிர்த்து” என்றும், மயக்கத்துக்கு இடமில்லாத இன்ப நிலையே மேலான இன்ப நிலையாதலால், “பரம சுகமயமாக்கி” என்றும், சுக மயமாயினும் அதனை யனுபவிக்கச் செய்யும் உள்ளம் உடனில்லாது பெயர்ந்து படிற்றுணர்வுகட்கு இடமாதலுண்மையின், “படிற்றுளத்தைப் போக்கி” என்றும் இயம்புகின்றார். உள்ளத்துப் படிற்றைப் போக்கி என மாற்றுக. பொருட்டன்மையால் உயிர் வேறு இறைவன் வேறு என நிற்றல் பற்றிப் பேதம் காணப்படுவதுண்மையின், அனுபவ நிலையில் அது பொருந்தாமையால் “நீ நான் என்னும் பேதமது நீக்கி” எனவும், உலகியற் பொருளின்பங்கள் நல்கும் சுகம் போலாது மேலாதல் விளங்க, “தனித்த சுகாதீதம் நீ தந்தருள்க” எனவும் இசைக்கின்றார். அதீதம் - மேல், தத்துவன் - உண்மைப் பொருளாகியவன். “தாயான தத்துவன்” எனத் திருவாசகம் கூறுவதறிக. பரம்பொருள்பால் வேண்டத் தக்கது இதுவே யாதலால், “பரம் பொருளே தனித்த சுகாதீதம் நீ மகிழ்ந்து தந்தருள்” என்று கூறுகின்றார். சுகானுபவத்துக் குரிய கருவி கரணங்கள் கழன்று நுகர்வதாதலால், “தனித்த சுகாதீதம்” எனினும் பொருந்தும்.
இதனால் தனித்த சுகாதீதம் வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (24)
|