3053. ஏதும்அறி யாதிருளில் இருந்தசிறி யேனை
எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.
உரை: எதுவும் அறியாமல் அறியாமை யிருளில் கிடந்து, சிறுமைப் பட்டுக் கிடந்த என்னை, எனது நிலையினின்றும் எடுத்து நிறுத்தி அறிவும் சிறிது பொருந்தச் செய்து, நாளும் வேதியரால் ஓதப்படுகிற வேத முதலாக வுள்ள நூற் கருத்துக்களைப் படிக்காமலே உணருமாறு, என் உணர்வின்கண் இருந்து உணர்த்தியதுடன் திருவருளின் உண்மை நிலையையும் இதுவெனக் காட்டிக் குற்றம் மிக்க சமயங்களின் போக்கிற் செல்லுகிற என்னைத்தடுத்துத் திருவருள் நெறியாகிய மெய்ம்மையமைந்த, பொது நெறியிற் செல்வித்து, அதன்கண் நான் மயங்கும் காலத்தில் மகனே மயங்குதல் ஒழிக எனவுரைத்து, எனக்கு எய்திய மயக்க வுணர்வுகளையறவே நீக்கி எனக்குள்ளேயே எழுந்தருளும் தூய பரம்பொருளே, என் மயக்க மெல்லாம் தவிர்த்து என்னை அடிமை கொள்ளல் வேண்டும். எ.று.
வள்ளலாருடைய அறிவு வரலாறு குறிக்கும் இப்பாட்டு “முன்னறியேன்” (3054) எனத் தொடங்கும் பாட்டிற் குளகமாய் வினை முடிபு பெறுதலால் “எனையடிமை கொள்ளல்” என்ற முடிபு உரையிற் பெய்து கூறப்படுகிறது. இளமைப் பருவத் தொடக்க நிலையில், சிறிதும் அறிவறியா திருந்தமையை, “ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியே” னெனவும், அச் சிறுமை நீங்குதல் வேண்டிப் பள்ளியை யடைந்து ஓரளவு கல்வி பெற்ற திறத்தை, “எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து” எனவும் எடுத்துரைக்கின்றார்.” அதனோடு பள்ளிக் கல்வி நின் றொழிந்ததாக, திருவருள், வள்ளற் பெருமான் திருவுள்ளத்தில் தங்கி, மெய்யுணர்வுக்குப் படி முறையாக இருக்கும் மறை முதலிய ஞான நூற் கருத்துக்களை நல்கின செய்தியை, “ஓது மறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்விலிருந்து உணர்த்தி” எனக் கூறுகிறார். தந்தை யோதக் கேட்டு மைந்தன், ஓதுவதும், அவன் ஓதக் கேட்டு அவன் மகன் ஓதுவதுமாக ஓதப்படுவது பற்றி, மறை நூல்களை “ஓதும் மறை” எனவும், பிற உபநிடதங்களும், இதிகாச புராணங்களும் அடங்கக் “கலைகள்” எனவும், இவற்றை ஒருவர்பால் ஓதிக் கேட்கா தொழிந்தமை விளங்க, “ஓதாமல்” எனவும், மேல் உணரக் கடவதாகிய திருவருளுணர்வுக்கும் படி முறையாகவுள்ள கலைகளின் அறிவு தமக்கு எய்தினமை கூறுவாராய், “உணர வுணர்விலிருந்து உணர்த்தி” எனவும் உரைக்கின்றார். தானும் கல்லாது, பிறர்பால் கேட்டலும் செய்யாதிருக்க, கலைஞான நுட்பம் பலவும் தமக்கு வந்தவாறு நினைப்பார்க்கு இது பரம்பொருளின் அருட் செயல் எனத் தெரிந்தமையின் அதனை வியந்து பேசுகின்றார். நூலறிவு காட்டிய அப்பொருள் உண்ணின்றுணர்த்து முகத்தால் திருவருள் உண்மையை யுணர்த்திற்றென்பார், “அருள் உண்மை நிலை காட்டி” என்றும், பின்பு, அக்காட்சி வழித் தனித்தேக விடாமல், தீச் சமய நெறியிற் செல்வா வகை நீக்கிற்றென்றற்கு, “தீது செறி சமய நெறி செல்லுதலைத் தவிர்த்து” என்றும் இயம்புகின்றார். தீது செறி சமயம் - சூதும் வாதும் உடையதாய், பொய்யும் புனைந்துரையும் நிறைந்ததாகிய சமயம். பரம்பொருள் காட்டிய நெறி யாதாம் என்னில், திருவருளை முதலாகக் கொண்டொழுகும் உண்மைப் பொது நெறி என்பாராய், திருவருள் மெய்ப் பொது நெறியிற் செலுத்தி” நீறு என்று கூறுகின்றார். இதுவே பின்னர், சுத்த சமரச சன்மார்க்க மென இயங்குவதாயிற்று. சுத்தம் - மெய்ம்மை. சமரசம் - பொது. சன்மார்க்கம் - மெய்ந்நெறி; நன்னெறியுமாம். மயக்க முறுவது உயிர்க்கு இயல்பாகலின், திருவருள் செலுத்திய நெறியிற் சென்றபோதும் மயக்கம் புகுந்து அலைத்தமை விளங்க, “நான் மருளும் போது மயங்கேல் மகனே என்று மயக்கெல்லாம் போக்கி” என்றும், செலுத்தியும் மயக்கம் போக்கியும் அருள் புரிந்த பொருள் எங்கிருந்து செய்தது என வினாவுவார்க்கு விடை கூறுவாராய், “எனக்கு உள்ளிருந்த பரம்பொருள்” என்றும் புகன்றுரைக்கின்றார். எனக்குள் தூய்மை யில்லாதன இருப்பினும், அவற்றால் தூய்மை கெடாதது பரம்பொருள் என்றற்குப் “புனித பரம்பொருள்” என வுரைக்கின்றார். அது காட்ட வந்த புனிதப் பொது நெறி சுத்த சமரச நன்னெறியாதல் காண்க.
இதனால், சுத்த சமரச நெறி தோன்றிய வரலாறு ஒருவாறு குறிக்கப்பட்டவாறாம். (25)
|