3054.

     முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
          முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
     பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
          பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
     தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
          தனிமன்றுள் நடம்புரியுஞ் சத்தியதற் பரமே
     இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
          எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே.

உரை:

     பரமாகிய தனது நிலையில் இழுக்குறாத தத்துவப் பேரொளியாகியவனே, ஒப்பற்ற அம்பலத்தில் ஆடுகின்ற மெய்ம்மை சான்ற தற்பரனே, நான் முன்னுமறியேன், பின்னுமறியேன், எதிர்காலத்தில் முடிவாய் நிற்பதையும் அறியேன்; இவற்றை எண்ணியும் எண்ணாமலும் இங்கே நான் சொன்ன சொல் முழுதும் பல்வேறு நிலைகளிலிருந்து ஒழுகுகின்ற பலரும் மனம் உவகையுற்றுக் குற்றப்படாதபடி எனக்கு அருள் புரிந்தருளிய தலைவனே, இந்நிலையில் மேலுறும் என்னுடைய மயக்கங்களைப் போக்கி என்னை உனக்கு அடிமையாக்கிக் கொள்ளற்கு இது தக்க காலமாகும். எ.று.

     தன் நிலை - பரம்பொருள் என்னும் தனது நிலைமை. இதனைப் பூரணப் பொருள் எனவும், குறைவிலா நிறைவே கோதிலா வமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே” (கோயில்) எனவும் சான்றோர் கூறுவதன்றிக் குறைவுடையதாகக் கூறுவதின்மை பற்றி, “தன்னிலையிற் குறைவு படாத் தத்துவப் பேரொளியே” எனக் கூறுகின்றார். “தனி மன்றுள் நடம் புரியும்” என்றாராயினும் மன்றுள் தனி நடம் புரியும் என மாறிக் கொள்க. தனி நடம் - ஒப்பற்ற ஞான நடனம். தற்பரம் - தனக்குத் தானே பரமானது. பரம் - மேன்மை, முன்னென்றது காரணம், பின்னென்றது காரியம்; முடிபு - பயன். முன்னுதல் - முற்பட எண்ணுதல். பேசுவோர் யேசும் பொருளை முன்னுற எண்ணி மொழிவதும், அவ்வாறு எண்ணாமல் மொழிவதும் உலகியலில் உண்டாகலின், “முன்னியும் முன்னாமலும் மொழிந்த மொழி” எனவும், முன்னாமல் மொழிவன பிழை படுவதுண்டாதலால் அதனையும் உளப்படுத்தற்கு, “மொழிந்த மொழி முழுதும்” எனவும், பல திறத்து மக்கள் மனமார ஏற்று மகிழ்கின்றார்கள் என்பார், “பன்னிலையிற் செறிகின்றோர் பலரும் மனமுவப்ப” எனவும் எடுத்துரைக்கின்றார். பன்னிலை - செல்வ வறுமை நிலை; கற்றவர் கல்லாதவர் நிலை; ஆடவர் பெண்டிர் நிலை என வரும் நிலைகள். அவ்வந் நிலைகளில் அழுந்தி யிருப்போரை, “செறிகின்றோர்” என்றும், அவரனைவரும் தமது மொழியைக் கேட்டு மனம் உவந்து ஏற்கின்றமை தோன்ற, “பலரும் மனமுவப்ப” என்றும், தாம் மொழிவது பழுது படின், பலரும் ஏமாற்றத்தால் வருந்துவராதலின், “பழுது படாவண்ணம் அருள் பரிந்தளித்த பதியே” என்றும் இசைக்கின்றார். இஃது என்னுடைய நிலை; இந்நிலையிலும் எனக்குப் பலவகையில் மயக்கவுணர்வு தோன்றி உள்ளத்தை அலைப்பதால் அவற்றைப் போக்கித் தெளிவருள்க என வேண்டலுற்று, “இந்நிலையில் இன்னும் என்றன் மயக்கமெலாம் தவிர்த்தே” எனவும், அடியார் செய்வனவற்றைத் தம்முடையவாகக் கருதிப் பழுது படாவண்ணம் ஏன்றருளுவது பற்றி, “எனை யடிமை கொளல் வேண்டும்” எனவும், அதற்கு இதுவே ஏற்ற தருணம் என்பார், “இது சமயம் காண்” எனவும் விண்ணப்பிக்கின்றார். “அடியார் செய்த அனாசாரம் பொறுத்தருளி அவர்மேல் என்றும் சீறாத பெருமான்” (மாற்பேறு) எனத் திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க. காண் - முன்னிலை யசை.

     இதனால், முன்பின் நோக்காது, மொழிந்தவை பழுது படாவாறு என்னை அடிமை கொள்க என வேண்டியவாறாம்.

     (26)