3055. ஐயறிவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கத் தெரியா
தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
விரும்பிஅருள் நெறிநடக்க விடுத்தனை நீ யன்றோ
பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
புரிந்ததவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
உரை: மெய்யுணர்வுக்கு உணர்வாகி அழகிய அம்பலத்தில் நடம் புரிகின்ற சுத்த பரிபூரணமாயுள்ள இன்ப வடிவாகிய பரம் பொருளே, கண் முதலிய ஐந்து வகைப் பொறிகளாலும் சிறிதளவும் தெளிவாக அறிந்து அனுபவிக்கத் தெரியாமல் புலம்பியும் மகிழ்ந்தும் விளையாடிப் பொழுது கழிக்கின்ற அந்த இளம் பருவத்தில் எளியனாகிய யான், உண்மையறிவால் உயர்ந்தவரும், உவக்கும்படி உன்னைப் பாடி, அருள் நெறிக்கண் அன்புடன் ஒழுகும்படி என்னைச் செலுத்துவாயாயினை யன்றோ? பொய் யுணர்வும் புலைத்தன்மை பொருந்திய மனமுமுடைய கொடியவனாகிய யான், முன்பிறப்பிற் செய்த தவம் யாதோ? அதனை எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன். எ.று.
ஐயறிவு - கண் முதலிய பொறிகள் ஐந்தாலும் பெறும் அறிவு. இளம் பருவத்தில் இந்த அறிவு ஐந்தாலும் பெரிதும் அறிவு வளர்தல் இயல்பாகலின், ஐயறிவை எடுத்தோதுகின்றார். பொறியுணர்வு வளர வளர மன வுணர்வு வளர்ச்சி பெறுதலின் இரண்டாலும் உளதாகும் உண்மை யறிவு இளமைக்கண் சிறிதாதலால், “சிறிது அறிந்து அனுபவிக்கத் தெரியாது” என்றும், தெரியாத வழி அழுதலும் தெரிந்த வழி மகிழ்தலும் இளமைக் காலத்து இயல் நெறியாதலால், “அழுது களித்தாடுகின்ற அப்பருவம்” என்றும், அக்காலத்தேயே கற்றவர் கண்டு பொருணலம் தேர்ந்து இன்புற்றுப் பாராட்டு மளவில் பாடும் திறமை எய்தியிருந்ததாக உரைக்கின்றவர், அதனைத் தமது செயலாக்காமல் திருவருட் செயலாக எண்ணியிருத்தமை விளங்க, “அப்பருவத்து எளியேன் மெய்யறிவிற் சிறந்தவரும் களிக்க” என்றும், “உனை விரும்பிப் பாடி அருணெறி நடக்க நீ என்னை விடுத்தனை யன்றோ” என்றும் இசைக்கின்றார். மெய்யறிவிற் சிறந்தோர், பொறி வாயிற் காட்சிகளாலும் மானதக் காட்சிகளாலும் பெற்ற அறிவுடன் உண்மையறிவும் கொண்டு மேம்படும் அறிஞர்கள், வள்ளற் பெருமான் பாடிய பாட்டுக்களை நயந்து சிறந்தோர் பாராட்டியது இங்கே தெரிவிக்கப்படுகிறது. தமது சிறுமையையும் பாடும் பாட்டின் பெருமையும் நோக்கி, இதற்குக் காரணம் திருவருளறிவன்றி வேறில்லையென்று முதுமையுற்ற காலத் தெண்ணித் தெளிகின்றாராகலின், “அருள் நெறி நடக்க விடுத்தனை நீ யன்றோ” என வோதுகின்றார். திருவருளறிவு மிக்க இளமைக் கண்ணே தமக்கு உண்டானதற்குக் காரணம் காண்பவர், தவத் தளவேயாகும் நான் பெற்ற செல்வம்” என்றும், “தவமும் தவமுடையார்க்காகும்” என்றும் முன்னோர் கூறுதலால் தவமே காரணமாதலறிந்து அத்தவம் யாதாகலாம் என அறியும் வேட்கையால் “முன் பிறப்பில் புரிந்த தவம் யாது அதனைப் புகன்றருள வேண்டும்” என வேண்டுகின்றார். உயிர்களின் வினை வகைகளைக் கண்டு உரிய பயனை அறிவு வழி யூட்டுவிக்கும் முதல்வனாதல் பற்றி, “துய்யறிவுக் கறிவாகி மணி மன்றில் நடஞ்செய் சுத்த பரிபூரணமாம் சுக ரூபப் பொருளே” எனப் பராவுகின்றார். தூய அறிவு - துய்யறிவு என வந்தது. உயிரறிவின்கண் அதன்பாலுள்ள பேரருளால் அறிவுருவில் அமர்பவனாதலால், “துய்யறிவுக் கறிவாகி” என்று சொல்லுகின்றார். சிவ பரம்பொருள் தூய்மையும் குறைவிலா நிறைவு முடையதாதல் தோன்றச் “சுத்த பரிபூரணம்” என்றும், இன்பவடிவின தென்றற்குச் “சுக ரூபப் பொருள்” என்றும் ஏத்துகின்றார். தன்னை யொழியப் பிற பொருள்களில் தான் கலப்பினும் ஒன்றும் தன்னைக் கலத்தலின்மையின் தூயதாதல் விளங்கச் “சுத்த பரிபூரணம்” எனச் சிறப்பிக்கின்றார்.
இதனால், இளமைப் பருவத்திலே தான் திருவருள் நெறி நின்று பாடற் கேதுவாகிய, தவம் யாதாம் என விண்ணப்பித்தவாறாம். (27)
|