3056. அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள்நிறைந்தசிந்தையிலே தித்திக்குந் தேனே
செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
மருள் நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
உரை: திருவருட் பண்பே நிறைந்த, பெரிய தகைமையையுடைய பெருமானே, இன்பம் பெருக்கும் அமுதாகியவனே, அற்புதமான தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருளரசே, தெளிவு மிக்க மனமுடைய பெரியோர் உள்ளத்தில் ஊறியினிக்கும் தேன் போன்றவனே, சிவந்த கனி போன்றவனே, பிறைச் சந்திரனை யணிந்த சிவந்த சடையையுடைய எம்பெருமானே, மயக்கம் நிறைந்த மனத்தையுடைய கொடியவனாகிய என்னுடைய வஞ்ச நினைவனைத்தையும் கண்டும் மனம்வந்து, எனக்கு இனிய வாழ்வளித்த பெரிய கருணைக் கடலாகியவனே, இருளைப் புரிகின்ற அந்த மயக்கமனைத்தையும் இப்பொழுதேனும் ஒழித்தருள வேண்டுகிறேன் என்னையுடைய தலைவனே, இது தக்க சமயமாகும், காண். எ.று.
என்னுடைய நாயகன் என்றது, என்னை ஆளாக வுடைய தலைவன் என்ற பொருள்பட வந்துளது. நிறைந்த அருளொளியே திருமேனியாக அமைந்தவனாதல் விளங்க, “அருணிறைந்த பெருந்த கையே” என வுரைக்கின்றார். ஒருவர்க்குத் தகைமை நல்குவது அவரது அருட் பண்பாதலால் வேண்டிற்று. இன்பம் தருவது அதனின் வேறாய அமுதம்; இறைவன் அருளே யுருவாகியது பற்றி, “இறைவனைப் “பெருந்தகை” எனல் இன்பமே அமுத வடிவு கொண்டவன் என்றற்கு “ஆனந்த அமுதே” என்கிறார். பொன்னம்பலத்தில் ஆடுகின்ற அற்புத அரசே என மாறுக. பொன்னம்பலத் தில்லையிற் சிறப்பாக உண்மையின், தில்லைப் பொன்னம்பலம் என உரை கூறுவதாயிற்று. சிந்தைக்கண் தெளிந்த அறிவொளி திகழ்ந்தாலன்றி, சிந்திக்கப்படும் பொருளின் நலமும் இன்பமும் நுகரலாகாது என்பது பற்றித் “தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே” எனச் செப்புகின்றார். அகள வுருவைச் சிந்திப்பார் சிந்தையிலும், சிவந்த சகள வுருவைக் காண்பார் கருத்திலும் இன்ப முறுவித்தலால், “செங்கனியே” எனக் கூறுகிறார். மதி - பிறைச் சந்திரன், செஞ்சடை - சிவந்த நிறம் கொண்ட சடை. தெருளுக்கு மறுதலை மருள்; பொருளல்லாதவற்றைப் பொருளாகக் காண்பது அதன் இயல்பு. மருளுணர்வு நிறைந்த மனம் கொடுமைக்குரிய நினைவுகளைத் தூண்டித் துன்பம் விளைவிப்பது பற்றி, “மருனிறைந்த “மனக் கொடியேன்” என வுரைக்கின்றார். மனத்தாற் கொடியனாகிய எனக்குப் பிறர் உதவியின்றி வாழ மாட்டாத துன்பப் பிறவியே உரியதாகவும், குறை யொன்றுமில்லா நிறை வாழ்வளித்து அருள் செய்தாய் என்பாராய், “என் வஞ்ச மெலாம் கண்டும் மகிழ்ந்து இனிய வாழ்வளித்த மாகருணைக் கடலே” எனப் போற்றுகின்றார். அறிவை இருட் படுத்துவது பற்றி மயக்கத்தை “இருள் நிறைந்த மயக்கம்” எனவும், அதனை முற்றவும் போக்கினாலன்றிப் பிறவித் தொடர்பு நீங்காதாகலின், “இன்னும் - தீர்த்தருள வேண்டும்” எனவும் விண்ணப்பிக்கின்றார். இன்னும் - இப்பொழுதேனும். முன்பெல்லாம் இருந்ததைவிட, இப்போது தெளிவு ஓரளவு பெற்றுளேனாதலின், இது மறைதற்குள்ளே “தீர்த்தருள வேண்டும்” என்றும், தெளிவு மிகுதியால் மயக்கம் தனது வன்மை குன்றி யிருக்கும் இக்காலம் ஏற்றதென வலியுறுத்தற்கு “இது தருணம் காண்” என்றும் எடுத்துரைக்கின்றார்.
இதனால், பிறவிக் கேதுவாகிய மயக்க வுணர்வைப் போக்கி, யருள்க என முறையிட்டவாறாம். (28)
|