3057.

     மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
          மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
     தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
          தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
     அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே
          ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
     என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே
          எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே.

உரை:

     நிலைபெற்ற தில்லைப் பொன்னம்பலத்தின்கண் ஆனந்த நடனம் புரிகின்ற பெருமையுற்ற மாணிக்க மணி போன்றவனே, என்னுடைய இரண்டு கண்களிலும் விளங்கும் ஒளியுடைய மணி போல்பவனே, தன்னியல்பில் நிறைந்த சத்துவ குண நிறைவானவனே, தற்பரமே சிற்பரமே, தத்துவக் கூட்டத்துப் பேரொளியே, வேறில்லாத தூய அத்துவித நிலையமே, ஆதியும் அந்தமுமின்றி இருந்தருளுகிற பரம்பொருளே, என்னுடைய இயல்புக்கேற்பத் திருவருள் புரிந்து எனது மயக்கவிருளை இப்பொழுதேனும் போக்கி என்னை யாண்டருள்க; அதற்கு இஃது ஏற்ற காலமாகும். எ.று.

     எக்காலத்தும் இருந்தருள்வது பற்றித் தில்லைப் பொன்னம்பலம் “மன்னிய பொன்னம்பலம்” எனப்படுகிறது. உயிர்த் தொகைகட்கு வாழ்க்கை யின்பம் தருகின்ற திருக்கூத்தென்பது விளங்க, “ஆனந்த மாநடஞ்செய் மாமணியே” எனக் கூறுகிறார். செம்மை நிறங் கொண்டு திகழ்தலால் “மாமணியே” என்கின்றார். மணி - மாணிக்க மணி. கண்களிலிருந்து பார்வை நல்கும் மணியை “என்னிரு கண் வயங்கும் ஒளி மணி” என இயம்புகின்றார். நல்ல கல்வி கேள்விகளாலும் நல்லினச் சூழலாலும் உளதாகும் சத்துவ குண நிறைவை இயல்பாக வுடையனாதல் விளங்க, “தன்னியல்பில் நிறைந்தருளும் சத்துவ பூரணமே” என இசைக்கின்றார். தற்பரம் - தனக்குத் தானே மேலாய் உறுவது; சிற்பரம் - அறிவுக்கு வரம்பாய் விளங்குவது. தத்துவ ஞானத் தனிப் பொருளாதலால், “தத்துவப் பேரொளி” என்று கூறுகிறார். அன்னியப் பொருள் அன்னியத் தன்மை கெட்டு முதலொடு ஒன்றி உடனாதல் அத்துவிதம். அன்னியத் தன்மை கெடுதல் சுத்தம். பசுத்தன்மையால் அன்னியமாகிய ஆன்மா, அத் தன்மை கெட்டுச் சிவமாந் தன்மை யெய்திச் சிவத்தோடு ஒன்றி யுடனாதல் முத்தி நிலையாதலின், “சுத்த அத்துவித நிலை” என இறைவனைக் குறிக்கின்றார். அத்துவித நிலையில் ஆன்மா அன்னியமாதலை விளக்க “அன்னியமிலாத” என விளக்குகிறார். “அன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே” (சிவ. போ) என மெய்கண்ட தேவர் விளம்புவது காண்க. ஆதியும் அந்தமுமில்லது சிவ பரம்பொருளாதல் விளங்க “ஆதி யந்தம் ஏதுமின்றி அமர்ந்த பரம்பொருளே” என வுரைக்கின்றார். இடம் கால எல்லைகட்கு அப்பாற் பட்டதாகலின், தேடிச் சென்று பெற மாட்டாமை பற்றி, என்னிலையில் யான் இருக்கத் திருவருள் தான் வந்து, என்னைக் கலக்கச் செய்தல் வேண்டும் என்பாராய், “என் இயல்பின் எனக்கருளி” என்கின்றார். என் சிறுமை நோக்கி அதற்குத் தக அருள்க என வுரைக்கின்றா ரென்றுமாம். ஆண்டு கொளல் - அருள் செய்து ஏற்றுக் கொளல்.

     இதனால், தன்னை ஆண்டருளி மயக்கம் தீர்த்தருள் என விண்ணப்பித்தவாறாம்.

     (29)