3058. பூதநிலை முதற்பரம நாதநிலை அளவும்
போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
உரை: நில முதலிய பூதங்களின் இயல்பு முதல் மேலதாகிய நாத தத்துவம் வரையில் அமைந்த தத்துவங்களின் இயல்புகளும் சேர்க்கைகளும் பிற தன்மைகளும் இனிது விளங்கவும், வேதங்கள் ஆகமங்கள் ஆகிய ஒவ்வொன்றின் பண்பும் செயலும் நன்கு விளங்கவும் வினையையுடையனாகிய எனக்கு என் உள்ளத்திலிருந்து, உணர்த்திய மெய்ம்மை சான்ற தீபமாகியவனே, ஞான நிலையமாய், அதனைக் கடந்து சிறக்கும் இன்ப நிலையமாய் அம்பலத்தின்கண் சச்சிதானந்தத் திருக்கூத்தை இயற்றும் சிவ பரம்பொருளே, குற்றங்கள் உண்டாகாவாறு மேலும் எனது மயக்கத்தைப்போக்கி, என்னைக் காத்தருளுதற்கு இது தக்க பருவம் காண். எ.று.
பூத நிலை - தன் மாத்திரைகளோடு கூடிய நிலம் நீர் நெருப்பு காற்று வான் என வரும், தத்துவம் பத்து. முதல் என்றதனால் ஞானேந்திரிய கன்மேந்திரியம் பத்தும், மன முதலிய காரணம் நான்குமாகச் சேரும் ஆன்ம தத்துவம் இருபத்து நான்கும், கலை முதலாக நிற்கும் வித்தியா தத்துவம் ஏழும், சுத்த வித்தை முதல் நாத மீறாக நிற்கும் சுத்த தத்துவம் ஐந்தும் கொள்ளப்படும். படவே, தத்துவம் முப்பத்தாறின் இயல்புகளையும் அவற்றினுள்ளே விரித்துக் காணப்படும் தாத்துவிகங்கள் அறுபதின் இயல்புகளையும் அவற்றின் சார்பாகக் காணப்படும் செயல் முறைகளையும் தமக்கு உள்ளிருந்து திருவருள் விளக்கமாகத் தெரிய உணர்த்தியது கூறுகிறார். இத் தத்துவங்கட்கு மேலாகவுள்ள ஞானநூல் நெறிகளை அறிவித்தமை புலப்பட “வேத நிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க” என விளம்புகிறார். வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்ற நான்கு; ஆகமம், காமிக முதல் வாதுள மீறாகக் கூறப்படும் இருபத்தெட்டு; இவற்றின் சார்பாக நிற்கும் மிருகேந்திரம், பவுட்கரம், ரவரவம் முதலாகிய உபாகமங்களும், வேதாந்த மெனப்படும் பிரகதாரணியம், சாந்தோக்கியம், முண்டகம் முதலாக பேசப்படும் உபநிடதங்களும் கொள்ளப்படும். அடிக்கடி நினைப்பு மறப்புக்களும், அறிவு அறியாமைகளும் மனத்தின்கண் உளவாதற்குக் காரணம் வினையுடைமை எனப் பெரியோர் கூறுதலால் “வினையேன்” எனத் தம்மைக் குறிக்கின்றார். உடம்பின் உணர்வு நிலையமாகிய நெஞ்சின் உள்ளகத்தில் நின்றியங்கும் உணர்வு வடிவாகிய உள்ளத்தில் இருந்தே ஞான வொளியாய் உணர்வாய்த் திருவருள் உண்மைப் பொருள்களைக் காட்டுவது பற்றி, “உளத்திருந்து விளக்கிய மெய்விளக்கே” என உரைக்கின்றார். உள்ளத்துக் கிடமாவது நெஞ்சம் என்பதைத் திருநாவுக்கரசர். “என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே” (தனிக்) எனக் கூறுவது காண்க. போத நிலை, நூலறிவும் உலகியலறிவும் உண்மையறிவும் கலந்தநிலை; சுத்தாத்துவித இன்ப நிலையைப் பெற்ற ஞானசம்பந்தரைப் “போதநிலை முடிந்த வழிப் புக்கொன்றியுடனானார்” (ஞானசம். 1253) என்று சேக்கிழார் பெருமான் உரைப்பது காண்க. இக் கருத்துக்கள் பொருந்தவே, “போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய்” என வடலூர் வள்ளலார் உணர்த்துகின்றார். அம்பலத்துத் திருநடனம், சச்சிதானந்த நடனமாதல் உரைப்பாராய், “பொதுவினில் மெய்யறிவின்ப நடம் புரியும் பொருளே” எனப் புகல்கின்றார். ஏதம் - குற்றம். மயக்கம் காரணமாக ஏதங்கள் உளவாதலால், “ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்து எனைக் காத்தல் வேண்டுகிறேன்” எனவும் மயக்கம் கெடுதற்குரிய பக்குவம் எனக்கு எய்தியுளது என்பார், “இது தருணம்” எனவும் இயம்புகிறார்.
இதனாலும் மயக்கம் தீர்தற்குரிய பக்குவ மெய்தினமை எடுத்தோதி வேண்டியவாறாம். (30)
|