3059. செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
உரை: சிவந்த நிறத்தையுடைய திருமேனி வலப்பால் விளங்க, இடப்பாகம் பச்சை நிறம் விளங்கப் படிகம் நிறம் பெற்றுக் காண்பாரை இன்புறுத்தும் கனி போன்றவனே, இத்தன்மையது என்று வேதங்களுக்கும் எட்டி யறிய முடியாத மெய்ம்மைப் பொருளே, எனக்கு உயிராயும் உயிர்க்குயிராயும் இருக்கின்ற தலைவனே, அகர வெழுத்தின் தன்மையையுடைய பெருந்தகையே, அம்பலத்தில் நடம் புரிகின்ற அரிய அமுதாகியவனே, அடியவனாகிய யான் மன மகிழ எவ்வாறு விரும்புகின்றேனோ அவ்வாறே எனக்கு உணர்த்தலை வேண்டுகின்றேனாதலால், என் தலைவனே, அதற்கு இஃது ஏற்ற சமயம், காண். எ.று.
செம்மைப் பண்பால் திருவிளங்கும் மேனி சிவன் திருமேனியாதல் இனிது புலப்பட “செவ்வண்ணத் திருமேனி கொண்டு” எனவும், இடப்பால் பச்சை நிற உமா தேவியின் பசுமை நிறம் படர்ந் தொளிர்தலால் “ஒருபாற் பசந்து” எனவும் செம்மையும் பசுமையும் காட்டித் தன்னைத் தன்னொளியாற் காட்டும் படிகம் போல் ஒளி விளங்குவது தோன்ற, “திகழ் படிக வண்ணமொடு” எனவும், புறக்கண்ணிற் காணும் போதும் அகக்கண்ணிற் காணும் போதும் இனிக்கும் கனி போல் இன்பம் செய்வது பற்றித் “தித்திக்கும் கனியே” என்றும் இயம்புகின்றார். வேத ஞானம் பாச ஞானமாதலால் அதனால் இறைவனைக் காண மாட்டாமை பற்றி, “இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே” என இசைக்கின்றார். “வேத சாத்திரமிகுதி புராண கலைஞானம், விரும்ப சபை வைகாரியாதித் திறங்கள் மேலாம் நாத முடி வான வெல்லாம் பாச ஞானம்” (சிவ. சித்தி.) என அருணந்தி சிவனார் யாவரும் அறிய வுரைப்பது காண்க. இவ்வுண்மை விளங்கவே “மன்னும் மறைகள் தம்மிற் பிணங்கி நின்று இன்னன வென்றறியாதன” (இன்னம்பர்) எனத் திருநாவுக்கரசரும், “மானேர் நோக்கி யுமையாள் பங்கா மறை யீறறியா மறையோனே” (சதகம்) என மணிவாசகரும் கூறுவது காண்க. வேத காலத்தவர்க்கு வட புலத்தில் சிவநெறி தெரியாமையே இக் கூற்றுக்கள் பிறத்தற்குக் காரணம் என அறிக. உயிராய்ப் பரந்து உடலுணர்வை இயக்குவதும், உயிர்க் குயிராய் உண்மை யுணர்வு கொளுத்துவதும் செய்வது பற்றிச் சிவனை, “என்னுயிரே” எனவும், “என் உயிர்க்குள் இருந்தருளும் பதியே” எனவும் இயம்புகின்றார். அவ்வண்ணம், அகர வுயிரெழுத்தின் வண்ணம் எழுத் தெல்லாவற்றிற்கும் முதலாதலும், எல்லாவற்றிலும் நிறைதலுமாம். “அகர முதலின் எழுத்தாகி நின்றாய்” (நெல். அரத்த) என நம்பியாரூரரும் கூறுகின்றார். “அகர வுயிர் போல் அறிவாகி யெங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து” (திருவருட்) என உமாபதி சிவனார் உரைப்ப தறிக. அம்பலத் திருக்கூத்துக் காணும் போதே யன்றிக் கருத்தில் நினைக்கும் போதும் அமுத முண்ட இன்ப வுணர்ச்சி யுண்டாதலால், “அம்பலத்தே நடஞ்செய் ஆரமுதே” என வுரைக்கின்றார். இந்த உணர்ச்சியிற் றோன்னும் இனிமைக்கு ஒத்த அரிய இன்பம் வேறொன்றிலும் காண முடியாமையால் “ஆரமுதே” என்று கூறுகிறார். புரிதல் - விரும்புதல். அதுவண்ணம் - அவ்வண்ணம் : இதனைப் “பொருளொடு புணராச் சுட்டு” என்பர் காலத்திற் செய்வது கருதிய பயனைச் செய்யா தொழிவதில்லை என்பது பற்றி, “இது தருணங் காண்” என விண்ணப்பிக்கின்றார்.
இதனால், கருதியது கருதி யாங்குப் பெற நின் திருவருளைக் காலத்திற் செய்க என வேண்டிக் கொண்டவாறாம். (31)
|