2. அருட் பிரகாச மாலை
அஃதாவது, இறைவன் திருவருள் நலத்தை நூறு பாட்டுக்கள் கொண்ட பாமாலையால் விளங்க வுரைப்பதாம். இதன்கண், திருவருளையுடைய சிவன் சிறப்பியல்புகளும், திருவருளின் பெருமைகளும், அதனைப் பெறுகின்ற ஆன்மாவின் இயல்புகளும் விளக்கப்படுகின்றன. இவற்றைக் கூறுமிடத்துச் சைவ நூல்கள் குறிக்கும் நுண்ணிய கருத்துக்கள் பலவற்றை வடலூர் வள்ளலார் எடுத்துரைக்கின்றார். ஒருநாள் இரவு, திருவருள் முதல்வன் மனித உருவில் வள்ளற் பெருமான் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டித் திறக்கச் செய்து, அருள் ஞானம் வழங்கிய நலம் வரலாற்றுக் குறிப்பாகப் பாட்டுத் தோறும் கூறப்படுகிறது. அவர்களது உரையாட்டின்கண் மேற்கூறிய பொருள்கள் அனைத்தும் பேசப்படுகின்றன. இவற்றோடு, திருவருள் ஞானத்தின் பெறலருமை, கருணை வாழ்வு, ஞான மோனச் சிறப்பு, அதுவதுவாதல், தானாக்கி யருளுதல், யோகானுபவம், துரியக் காட்சி, ஆகமாந்தக் கூறுகள், இருவினை யொப்பு, சுத்தாவத்தை, தத்துவ ஞானம், உண்மை ஞானங்கள், துவாதசகலாப் பிரசாதம், யோகாந்தம், கலாந்தம், நவந்தரு பேதம், வைந்தவம், மாயா வெளி, திருவருள் வெளி, சிவபர வெளி, அத்துவாக்கள் ஆகிய பொருள்கள் இடம் பெறுகின்றன. திருவருளே உயிர்கட்குப் புகலாவ தென்பதும், தில்லைத் திருநடனப் பொருளும், பிறவும் ஆங்காங்கு உணர்த்தப்படுகின்றன.
எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம் 3060. உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் யின்பம்
உறுகின்ற வெளிநிலையென் றுபயநிலை யாகி
இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்ேத
இரவில்எளி யேன்இருக்கும் இடந்ேதடி அடைந்து
கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
களித்தெனைஅங் கழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்
அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்பேன்
ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே.
உரை: இன்பக் கொடி போன்ற உமாதேவியார் கண்டு களிக்கத் திருவருள் நடம் புரியும் தலைவனே, உலகெலாம் தோன்றுதற்கு முதற் காரணமாகிய ஒளி நிலையென ஒரு திருவடியும், நிலையான இன்பற சுரக்கின்ற வெளி நிலையென ஒரு திருவடியும் என விளங்கும் இரண்டாகிய திருவடிகள் வருந்துமாறு இரவுப் போதில் எளியனாகிய யான் இருக்கும் இடத்தை நாடி நடந்து வந்தடைந்து திடுக்கிடாதபடித் தெருக் கதவைத் தாழ் நீக்கித் திறக்கச் செய்து விருப்புடன் என்னைத் தன்பால் அழைத்து என் கையில் யாதோ ஒன்றைக் கொடுத் தருளினாய்; அருளளக்கலாகாத அருட் கடலாகிய உன்னுடைய பெருமையை என்னென்று புகல்வேன். எ.று.
பொருளே நிறைந்த வுலகில் உயிர்கள்பால் இயலுவது வினையாகும். “வினையே ஆடவர்க்கு உயிர்” (குறுந்.) என்பர் சான்றோர். வினையும் பொருளுமாகிய உலகம் முற்றும், உள்ளத்தில் உணர்வுருவாய் அரும்புதலும், பின்னரது பொருளாய் மலர்தலும் காணலாம்; உணர்வு ஒளியாகவும், மலரும் பொருள் ஒளி நிலவும் வெளியாகவுமாகும். இவ்விரண்டையும் வடலூர் வள்ளல் தனித் தனியாக நிறுத்தி, “உலகமெலாம் உதிக்கின்ற ஒளி நிலை” என்றும், “இன்பம் உறுகின்ற வெளி நிலை” என்றும் உரைக்கின்றார். உள்ளும்போது உணர்வுருவாக இருக்கும் பொருள் செய்வினையால் உருவாகும் போது இன்பமாய் மகிழ்விப்பதால், “மெய்யின்பம் உறுகின்ற வெளி நிலை” என விளம்புகின்றார். காதலியின் காதலின்பத்தைக் கருதுபவன், “உள்ளிய வினை முடித்தன்ன இனியோள்” (நற். 3) என்பதனால் மேற்கண்ட கருத்தின் உண்மை விளக்கமுறும். இவ்விரண்டாலும் உலகியல் நடைபெறுதலால், இரண்டையும் இறைவன் திருவடிகளாக்கி, “உபய நிலையாகி இலகிய நின் சேவடிகள்” எனக் குறிக்கின்றார். உபயம் - இரண்டு. உலகியலை நடத்தும், திருவருள் முதல்வனாகிய பரமன், மக்களுருவிற் போந்தமை கூறலுற்று, “சேவடிகள் வருந்தியிட நடந்து” என்கிறார். வருந்த என்பது வருந்தியிட என வந்தது; போக்க வென்பது போக்கியிட என வழங்குவது போல. சொல்லிட என்பது சொல்லிப் போட என வருவதும் அத்தகைய வழக்கேயாம். இரவுப் போதில் செய்வினையில் வழித் தெருக் கதவை மூடித் தாழிட்டுக் காப்புச் செய்தல் உலகியல் வினை மரபாதலின், “கலசமிலாத் தெருக் கதவம் காப்பவிழ்க்கப் புரிந்து” எனக் கூறுகிறார். இரவில் இருள் பரவுவதால் வீடு தேடியடைதல் வேண்டிற்று. தெருவில் விளக்கின்மையும் மக்கள் வழங்குதலின்மையும் தேடியடைதற்குக் காரணமாயின. தெருவிற் கலக முளதாயின் கதவம் காப்புப் பெறுதல் அமையுமாயினும், இரவிருளில் கதவம் காப்பிடல் முறையாம் என்பது கொண்டு, “கலசமிலாத் தெருக் கதவம் காப்பவிழ்த்து” என உரைக்கின்றார். தாழ் நீக்கிக் கதவம் திறக்கச் செய்தமை விளங்கக் “காப்பவிழ்க்கப் புரிந்து” எனப் புகல்கின்றார். திறக்கப் பெற்றமையால் உட்புகுவார்க்கு உவகை மலர்வதால், “களித்து” எனவும், உட்புகுந்த பெருமான் திறந்து வரவேற்றவர் பக்கம் தான் செல்லாமல் அவரைத் தன்பால் அழைத்து அவரது கையில் ஒன்று கொடுப்ப, பெற்ற வள்ளலார், கொடுத்தது இன்னதெனத் தெளிதற்குள் கனவு கலைந்தமையால் “எனது கையி லொன்று கொடுத்தாய்” என்று உரைக்கின்றார். இன்னதென விளங்கக் கூறுகின்றிலராயினும், “அருட் கடலாம் உன் பெருமையை என்னென்பேன்” என நயந்து வியந்து பாராட்டுதலால் கொடுக்கப் பெற்றது உயர்வுடைய ஒன்று என்பது தெளிவாகிறது.
இதனால் இறைவனை இரவிற் கனவிற் கண்டு அவன் தானே வலியப் போந்து உயர்வுடைய பொருள் ஒன்று நல்கப் பெற்றது கொண்டு மகிழ்ந்து பாராட்டியவாறாம். (1)
|