3062. திருமாலும் உருமாறிச் சிரஞ்சீவி யாகித்
ேதடியுங்கண் டறியாத சேவடிகள் வருந்த
வருமாலை மண்ணுறுத்தப் பெயர்த்துநடந் தருளி
வஞ்சகனேன் இருக்குமிடம் வலிந்திரவில் ேதடித்
தெருமாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று
செவ்வண்ணத் திடைப்பசந்த திருமேனி காட்டிக்
குருமாலைப் பெருவண்ணக் கொழுந்தொன்று கொடுத்தாய்
குருமணிநின் திருவருளைக் குறித்துமகிழ்ந் தனனே.
உரை: திருமால் பன்றி யுருக் கொண்டு சிரஞ்சீவியாய் மண்ணுலகு முற்றும் தேடிச் சென்றும் காண அரியவாகிய சிவந்த திருவடிகள் கன்றுமாறு மண்ணும் கல்லும் உறுத்த மாலையாற் குளிர்ந்த இடம் பெயர்ந்து, நடந்து வஞ்ச நினைவுகளையுடைய எளியனாகிய யான், இருக்குமிடத்துக்கு இரவில் வலிய வந்து வீட்டின் தெருக் கதவைத் திறக்கச் செய்து புகுந்து எதிரே நின்று சிவந்த ஒளி பரந்த தமது பசுமை கலந்த திருமேனியைக் காட்டிக் குருவாம் தன்மையுடம் பெருமை பிறங்குவதாகிய ஒன்றைக் கொடுத்து மறைந்தருளினாய்; அதனால் குருமணியாகிய நினது திருவருட் பண்பை நினைந்து மகிழ்வேனாயினேன். எ. று.
நலமனைத்தும் தருகின்ற சத்தியாகிய திருமகளோடு கூடிய திருமாலாகிய மூர்த்தி என்றற்கு “திருமாலும்” எனச் சிறப்பிக்கின்றார். பன்றி யுருக்கொண்டமை தோன்ற, “உருமாறி” எனவும், மேற் கொண்ட வினை முடிவதற்குள் இறந்து படாவண்ணம் சாகாத் தன்மை கொண்டான் என்றற்குச் “சிரஞ்சீவியாகிய” எனவும், சிவன் திருவடியைக் காண்பதற்கு முயன்ற வரலாற்றைத் “தேடியுங் கண்டறியாத சேவடிகள்” எனவும் கூறுகின்றார். “அம்மால் திணி நிலம் பிளந்தும் காணாச் சேவடி” (அச்சப்) எனத் திருவாசகம் ஓதுவதறிக. செந்நிறத் தழல் திகழும் தாணுவாய் நின்றமை பற்றித் “தேடியும் கண்டறியாத சேவடிகள்” என்று கூறுகிறார். பகற் போதினால் வெம்மையுறும் மண் பிற்பகலில் வரும் மாலைப் போதில் தணிந்து குளிர்ந்து நடத்தற் கினிதாதலால், “வருமாலைப் பெயர்த்து நடந்தருளி” எனவும், நடந்த போது மணலிற் கிடக்கும் நுண்ணிய கற்பொடிகள் இயல்பாகவே சிவந்த, திருவடியில் உறுத்திச் சிவக்கச் செய்தமை விளங்க “மண்ணுறுத்தப் பெயர்த்து நடந்தருளி” எனவும் இயம்புகிறார். பிறர் எளிதின் அறியாதபடி உள்ளமும் உடம்பும் மறைத் தொழுகினமை புலப்பட, “வஞ்சகனேன் இருக்குமிடம் தேடி” எனக் குறிக்கின்றார். தெருக் கதவைத் தட்டித் திறப்பித்தமையும் பின்பு இறைவன் மனைக்குட் புகுந்து எதிரே நின்றமையும் தோன்ற, “தெரு மாலைக் கதவுதனைத் திறப்பித்து நின்று” என்றும், சிவந்த தமது திருமேனியைக் காட்டிய செயலை, “செவ்வண்ணத் திடைப் பசந்த திருமேனி காட்டி” என்றும், இச் செயலைத் தாமே வலியப் போந்து செய்தமை விளங்க “வலித் திரவில் தேடி” என்றும் எடுத்துரைக்கின்றார். திருமேனி பசந்து காட்டியது உமைபாகன் என்பது உணர்த்தற்கு. குரு, ஞான வொளி தருபவன். குரு வுருவில் இளையனாய்த் தோன்றினமையால், “குரு மாலைப் பெருவண்ணக் கொழுந்து” என்று கூறுகின்றார். கொடுத்தது இன்னது என விளங்காமையால் “ஒன்று” எனப் பொதுவாகக் கூறுகிறார். குருமணி - குருவாகிய மணி; சிவந்த நிறமுடைய மணி என்றுமாம். கொடுத்த ஒன்று நன்பொருள் என்று விளங்க, “திருவருளைக் குறித்து மகிழ்ந்தனன்” என்று கூறுகிறார். (3)
|