3063. அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித்
தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும்
மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே
வருந்தாத இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன
ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய்
இன்றதுதான் அனுபவத்துக் கிசைந்ததுநா யடியேன்
என்னதவம் புரிந்தனோ இனித்துயரொன் றிலனே.
உரை: அன்றொரு நாள் இரவுப் போதில் என் மனைக்கு வந்து கதவைத் திறக்கச் செய்து, மலர் போன்ற திருவடிகள் வாயிற் படியில் முன்புறம் உள்ளும் குதிப்புறம் புறத்தும் பொருந்த வைத்து, என்னைத் தமக்கு முன்னே வருவித்து நிறுத்திக் கொண்டு மகனே, வருந்தாமல் இதனை வாங்கிக்கொள் எனவாயாற் சொல்லி, கையால் ஒன்றுதர, சிறியவானகிய யான் அதனை வாங்க மறுத்தேனாகவும் மறுபடியும் வற்புறுத்தி எனது ஒரு கையில் கொடுத்து, “நீ இங்கே யிரு;” என்று சொல்லி விட்டு மறைந்தாய் இப்பொழுது அதுதான் அனுபவத்துக்கு ஒத்துளது. நாயடியேனாகிய யான் என்ன தவம் செய்தேனோ அறிகிலேன். இனி எனக்குத் துயரமொன்றும் இல்லை. எ. று.
முன்பொருநாள் என்பது அன்றொரு நான் என வந்துளது. அணிக்கதவம் - நன்கு காப்பமைந்த கதவம். அருள் புரியவந்த திருவடியென்றற்கு “அருட்சேவடி” என்றும், மென்மையும் அழகும் உடைமை புலப்பட, “மலர் சேவடி” யென்றும் புகழ்ந்துரைக்கின்றார். வாயிற்படி - வாயிலின் குறுக்கே கிடக்கும் கட்டை; வாயிலிற் புகுவோரும் வருவோரும் அதனை மிதித்தும் தாண்டியும் செல்வர். இதனை வாயில் மிதிக்கட்டை யென்னாமல், வாயிற்படி என்பது உலக வழக்கு; வாசற்படி என்பதே பெருவழக்கு. படி-தரை; படி மேலிருத்தலால் படியாயிற்று. வாயிற்படிக்கு உள்ளேயோ வெளியிலோ பொருந்தாமல், படியின்மேல் காலடியின் ஒரு பாகம் உள்ளும் குதிப்பாகம் புறத்தும் அமைய நின்றமையின், “வாயிற் படிப் புறத்தும் அகத்தும் மன்ற வைத்துக் கொண்டு” என வுரைக்கின்றார். வாயிற் படி சிறிதாயிருந்தமையின் அவ்வாறு அடியை வைத்துக் கொண்டு நிற்பது எளிதாயிற்றென அறிக. ஏற்க மறுப்பதுடன் மனம் இசையாமையை முகம் காட்டினமையின், “வருந்தாதே இங்குஇதனை வாங்கிக்கொள்” எனவுரைக்கின்றார். இங்கிதனை என்றவிடத்து, இங்கு இப்பொழுதென்னும் பொருளது இங்கே உறைதி என்றவிடத்து இங்கு என்றது இவ்விடத்தே என்னும் பொருளதாம். முதற்கண் ஏற்க மறுத்தமையால் மீள வற்புறுத்தியது; விளங்க, “மறித்தும் வலித்து” என மொழிகின்றார். உறைதல்-தங்குதல்; இருத்தலுமாம். இவ்வாறு அருளுவதுதான் வெறுங் கற்பனையாகாமல் உலகிய லுண்மைக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பார், “அதுதான் அனுபவத்துக்கு இசைந்தது” என வுரைத்து, அருட் பேற்றை வியந்து பாராட்டுவாராய், “என்ன தவம் புரிந்தேனோ” என்றும், இனித் துயரொன்றிலனே” என்றும் இயம்புகின்றார். (4)
|