3064.

     இரவில்அடி வருந்தநடந் தெழிற்கதவந் திறப்பித்
          தெனைஅழைத்து மகனேநீ இவ்வுலகிற் சிறிதும்
     கரவிடைநெஞ் சயர் ந்திளைத்துக் கலங்காே­த இதனைக்
          களிப்பொடுவாங் கெனஎனது கைதனிலே கொடுத்து
     உரவிடைஇங் குறைகமகிழ்ந் தெனத்திருவாய் மலர்ந்த
          உன்னுடைய பெருங்கருணைக் கொப்பிலைஎன் புகல்வேன்
     அரவிடையில் அசைந்தாட அம்பலத்தி னடுவே
          ஆனந்தத் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.

உரை:

     இடையிற் கச்சாக அணிந்த பாம்பு படம் விரிந்து அசைந்தாடப் பொன்னம்பலத்தின் நடுவே நின்று ஆனந்த நடனம் செய்து உலகுயிர்களை வாழ்விக்கின்ற அருளரசே, இரவுப் போதில் திருவடி வருந்த நடந்து போந்து அழகிய கதவைத் திறப்பித்து உள்ளிருந்த என்னை யழைத்து, 'மகனே, இவ்வுலகிற் காணப்படும் வஞ்சச் செயல்களுக்காக உனது நெஞ்சு சிறிதும் கலங்குதல் வேண்டா; இதனை மனமகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்க, என்று என் கையிலே ஒன்று கொண்டு மனவுறுதியுடன் இவ்வுலகில் வாழ்க என்று வாயாற் சொல்லி யருளிய பெரிய கருணைக்கு ஒப்பாக ஏதுமில்லை; என்னென்று சொல்வேன். எ.று.

     உடுக்கும் தோலாடை நெகிழாமைப் பொருட்டுப் பாம்பைக் கச்சாக அணிதலால், “அரவு இடையில் ஆட” எனவும், திருக்கூத்தாடுதலாற் பாம்பு அசைந்தாடுவது விளங்க, “அசைந்தாட அம்பலத்தி னடுவே நடம் செய்து ஆட்டுகின்ற அரசே” எனவும் கூறுகிறார். உயிர்கள் இன்புறல் வேண்டியும் வாழ்தல் வேண்டியும் இன்ப நடம் புரியும் கருத்துப் புலனாதல் வேண்டி, “ஆனந்தத் திருநடஞ் செய்து ஆட்டுகின்ற அருளரசே” என விளக்குகின்றார். இரவில் மண் மேல் நடப்பது பற்றி, “வருந்த நடந்து” என்றும், வந்த போது கதவு மூடப்பட்டிருந்தமையின், “திறப்பித்து” என்றும் இயம்புகின்றார். உலகியல் வாழ்வில் மக்களிடையே பொய்யும் வஞ்சனையும் நிறைந்திருப்பது குறித்து, “இவ்வுலகிற் கரவிடை நெஞ்சயர்ந்து இளைத்துக் கலங்காதே” என்கிறார். மக்களிடை என்னாமல், “கரவிடை” என்பது மக்கள் பலரும் பொய், கொடுமை, வஞ்சனை ஆகியவற்றின் உருவாய் உலவுதலைக் காட்டற்கு. கொடுப்பது சிதறாமல் இருப்பதற்காக, “கைதனிலே கொடுத்து” என்று கூறுகின்றார். உரவு-மனத்தின்மை. மனத்திட்பம் குன்றாமல் உறைக என அன்போடு உரைப்பது ஊக்கத்தை யுண்டு பண்ணுவது பற்றி, “திருவாய் மலர்ந்த பெருங்கருணை” எனச் சிறப்பிக்கின்றார். கருணைக்கு ஒப்பாவது வேறு யாதுமில்லையாதலால் “பெருங் கருணைக்கு ஒப்பிலை” எனவும், “என் புகல்வேன்” எனவும் இசைக்கின்றார்.

     (5)