3065. இயங்காத இரவிடைஅன் றொருநாள்வந் தெளியேன்
இருக்குமிடந் தனைத்ேதடிக் கதவுதிறப் பித்துக்
கயங்காத மலரடிகள் கவின்வாயிற் படியின்
கடைப்புறத்தும் அகத்தும்வைத்துக்களித் தெனைஅங் கழைத்து
மயங்காேத இங்கிதனை வாங்கிக்கொண் டுலகில்
மகனேநீ விளையாடி வாழ்கஎன உரைத்தாய்
புயங்காநின் அருளருமை அறியாது திரிந்ேதன்
பொய்யடியேன் அறிந்தின்று பூரித்ேதன் உளமே.
உரை: புயங்கனே, ஒருநாள் மக்கள் உலவாத இராப் பொழுதின்கண் எளியனாகிய யான் இருக்குமிடத்தைத் தேடி வந்து கதவைத் திறக்கச் செய்து கன்றாத பூப் போன்ற திருவடிகள் அழகிய வாயிற்படியின் உள்ளும் புறமும் பொருந்த வைத்து, நின்று மகிழ்வுடன் என்னையழைத்து, மனத்தில் மருட்சியின்றி இவ்விடத்தே இதனைப் பெற்றுக் கொண்டு, 'மகனே, நீ இவ்வுலகில் வாழ்க' எனச் சொல்லி யருளினாயாக, நினது திருவருளின் அருமையைத் தெரிந்து கொள்ள மாட்டாது பொய் நெறி பற்றித் திரிந்தேன்; இப்பொழுதே அதன் பெருமை யறிந்து உள்ளம் பூரிக்கின்றேன். எ.று.
இயங்காத இரவு இருட் செறிவால் மக்களோ மாக்களோ உலவாத இரவுக் காலம். ஒருநாள் இரவிடை இருக்குமிடம் தேடி வந்து கதவு திறப்பித்து என இயைக்க. கயங்குதல் - கசங்குதல் என வழங்கும்; புயம் - புசமென வருதல் போல. அகம் என்றவிடத்து அத்துச் சாரியை தொக்கது. வாங்குதற்கு மயங்கினமை புலப்பட, “மயங்காதே இங்கு இதனை வாங்கிக் கொண்டு” என்றும், திரும்பத் தர வேண்டா, நீயே வைத்துக் கொண்டு உலகியற்கொப்ப வாழ்க என்பார், “உலகில் மகனே நீ விளையாடி வாழ்க' எனவுரைத்தாய்” என்றும் இயம்புகின்றார். புயங்கம் - பாம்பு. பாம்பா பரணனாதலின், “புயங்கா” எனப் புகல்கின்றார். அறியாது திரிந்த நெறி இது வென விளக்குதற்கு, “பொய்யடியேன்” என விளம்புகின்றார். மகிழ்ச்சியால் மனம் தடிப்புறும் நிலையை “உளம் பூரித்தேன்” என வுரைக்கின்றார். (6)
|