3066. ஒருநாளன் றிரவில்அடி வருந்தநடந் தடியேன்
உற்றஇடந் தனைத்ேதடிக் கதவுதிறப் பித்து
மருநாள் மலரடிஒன் றுள்ளகத்ேத பெயர்த்து
வைத்துமகிழ்ந் தெனைஅழைத்து வாங்கிதனை என்று
தருநாளில் யான்மறுப்ப மறித்தும்வலிந் தெனது
தடங்கைதனிற் கொடுத்திங்கே சார்கஎன உரைத்தாய்
வருநாளில் அதனருமை அறிந்துமகிழ் கின்றேன்
மணிமன்றுள் நடம்புரியும் மாணிக்க மணியே.
உரை: மணிகள் பதித்திழைத்த அம்பலத்தில் திருக்கூத்தாடும் மாணிக்க மணி போன்ற பெருமானே, அன்றொருநாள் இராப் போதில் மெல்லடிகள் வருந்தும்படி நடந்து போந்து அடியவனாகிய யான் இருந்த இடத்தைத் தேடிக் கொண்டு கதவைத் திறக்கச் செய்து மணம் பொருந்திய தண்டினையுடைய தாமரைப் பூப் போன்ற திருவடியை வீட்டி னுட்புறத்தே மாறி வைத்து மனம் மகிழ்ந்து, என்னை அருகே யழைத்து இதனை வாங்கிக் கொள்க என்று வாயாற் சொல்லி கையில் தந்த நாளில் யான் வாங்க மறுத்தேனாக, வற்புறுத்தி என் பெரிய கையில் தந்து இவ்வுலகத்தே பொருந்தி வாழ்க என உரைத்தருளினாய். பின் வந்த நாட்களில் அதனுடைய அருமையை அறிந்து உவப்பு உறுவேனாயினேன். எ.று
மாணிக்க மணி போன்ற நிறமும் ஒளியுமுடைய திருமேனி கொண்டவனாதலால், சிவபெருமானை “மாணிக்க மணியே” எனக் கிளந்து கூறுகின்றார். நடக்கின்ற போது உயர்ந்தோரது உயர்ந்த திருவடி நிலத்தின் வன்மையால் கன்றி வருந்துவதை நினைந்து, “அடி வருந்த நடந்து” என்று கூறுகின்றார். மருநாளம் மணம் கமழும் தாமரைத் தண்டு. மலர் -தாமரைப் பூ. ஓரடி யுள்ளும் ஓரடி புறத்துமாக நின்றமை விளங்க, “ஒன்று உள்ளகத்தே பெயர்த்து” என உரைக்கின்றார். முதற்கண் இரண்டடிகளையும் புறத்தே வைத்துப் பின்பு ஓரடியை உள்ளே வைத்தமை தோன்ற, “மலரடி ஒன்று உள்ளகத்தே பெயர்த்து வைத்து” எனவும், வாங்கியே தீர்க என வற்புறுத்தினமையின், “மறித்தும் வலித்து எனது தடங்கைதனிற் கொடுத்து” என்று புகல்கின்றார். பெற்ற பின்னர் வந்த நாட்களை, “வருநாள்” என மொழிகின்றார். (7)
|