3067.

     நெடுமாலும் பன்றிஎன நெடுங்காலம் விரைந்து
          நேடியுங்கண் டறியாது நீடியபூம் பதங்கள்
     தொடுமாலை யெனவருபூ மகள்முடியிற் சூட்டித்
          தொல்வினையேன் இருக்குமிடந் தனைத்தேடித் தொடர்ந்து
     கடுமாலை நடுஇரவிற் கதவுதிறப் பித்துக்
          கடையேனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்துக்
     கொடுமாலை விடுத்துமகிழ் எனத்திருவாய் மலர்ந்தாய்
          குணக்குன்றே இந்நாள்நின் கொடையைஅறிந் தனனே.

உரை:

     குணக் குன்றாக விளங்கும் பெருமானே, நெடிய திருமால் பன்றியுருக்கொண்டு மிக்க விரைவுடன் நெடுநாள் முயன்று தேடியும் கண்டறியமாட்டாவாறு நீண்ட தாமரை போன்ற திருவடிகளைத் தொடுக்கப்பட்ட மாலை போல நிலமகளின் முடியிற் சூட்டிப் பழ வினையாற் பிணிப்புண்டிருக்கும் அடியேன் இருக்குமிடத்தைத் தேடி யடைந்து மிக்க மயக்க விருளைச் செய்யும் நள்ளிரவில் மனையின் கதவைத் திறக்கச் செய்து அங்கே கடையவனாய்க் கிடந்த என்னைத் தன்பால் வருவித்து என் கையில் ஒன்றைத் தந்து, கொடிய மயக்கத்தைப் போக்கி மகிழ்வுடன் இருப்பாயாக என உரைத்தருளினாய்; இப்போது தான் உனது கொடையின் நலத்தை உணர்ந்து கொண்டேன். எ.று.

     நெடுமால்-திருமால்; திருவடியைக் காண்டற் பொருட்டுப் பன்றியுருக்கொண்டு பன்னெடுங் காலம் சென்றும் காணாராயினார் என்பது புராண வரலாறாகலின், “நெடுமால் நெடுங்காலம் விரைந்து நேடியும் கண்டறியாது நீடிய பூம்பதம்” எனக் கூறுகின்றார். நேடுதல்-தேடுதல். பன்றி யுருக்கொண்டு நிலத்தைக் குடைந்து கொண்டு செல்லச் செல்லத் திருவடி முடிவின்றி நீண்டு கொண்டேயிருந்தமை பற்றி, “நேடியும் கண்டறியாது நீடிய பூம்பதம்” என வுரைக்கின்றார். பூம்பதம்-தாமரையின் பூவைப் போன்ற திருவடி. திருவடி நிலத்திற் பொருந்த நடந்ததைக் திருவடி மலரை நிலமகள் தன் தலையில் தொடுக்கப்பட்ட பூமாலையாகச் சூடிக் கொள்ள என அணிநலம் திகழ உரைக்கின்றார்; சேர மன்னன் தான் ஊர்ந்து போந்த யானையினின்றும் நிலத்தின் மேல் இறங்கின செய்தியைக் கூறும் இளங்கோவடிகள், “இருநில மடந்தைக்குத் திருவடி யளித்தாங்கு அருந்திறல் மாக்கள் அடியீ டேந்தப் பெரும் பேரமளி யேறினன்” (சிலப். 26: 89 - 91) என்று கூறுவது காண்க. மாலையிற் றோன்றிக் கணந்தோறும் பெருகி இராக் காலத்தைச் செய்யும் இருட் போதினைக் “கடுமாலை நடுஇரவு” எனச் சிறப்பிக்கின்றார். கடையேன்-குணஞ் செயல்களால் கீழ்மைப்பட்டவன். நேரிய நெறியில் ஒழுகுபவரைத் தீநெறியிற் செலுத்தும் மயக்கவுணர்வைக் “கொடுமாலை” எனக் கூறுகின்றார். எக்காலும் மாறாக குண மாண்புடைமை பற்றி இறைவனைக் “குணக்குன்றே” எனப் புகழ்கின்றார். கொடை-கொடுத்த பொருளின் நலம்.

     (8)