3068. மறைமுடிக்கு மணியாகி வயங்கியசே வடிகள்
மண்மீது படநடந்து வந்தருளி அடியேன்
குறைமுடிக்கும் படிக்கதவந் திறப்பித்து நின்று
கூவிஎனை அழைத்தொன்று கொடுத்தருளிச் செய்தாய்
கறைமுடிக்குங் களத்தரசே கருணைநெடுங் கடலே
கண்ணோங்கும் ஒளியேசிற் கனவெளிக்குள் வெளியே
பிறைமுடிக்குஞ் சடைக்கடவுட் பெருந்தருவே குருவே
பெரியமன்றுள் நடம்புரியும் பெரியபரம் பொருளே.
உரை: விடம் பொருந்திய கழுத்தையுடைய அருளரசே, கருணையே நிறைந்த பெரிய கடல் போன்றவனே, கண்ணிடத்து ஒளிரும் ஒளியாகியவனே, ஞானமாகிய பெருமை மிக்க வெளிக்குள் விளங்கும் ஒளியே, பிறைத் திங்களை முடிக்கண்ணுள்ள சடையிற் கொண்ட தெய்வத் தருவை நிகர்ப்பவனே, எனக்குக் குருவானவனே, பெரிய சபையின்கண் கூத்தியற்றும் பிரமப் பெரும் பொருளே, வேதங்களின் உச்சியில் விளங்கும் ஞான மணியாய் விளங்குகிற சேவடிகள் மண்ணிற் பட்டுப் பொடி யாகுமாறு, நடந்து வந்து அடியனாகிய என்னுடைய குறைகள் நிறைவேறுமாறு என் மனையின் கதவைத் திறக்கச் செய்து எதிரே நின்று என்னைக் கூவி யழைத்து, ஒன்றை என் கையிற் கொடுத்தருளினாய். எ.று.
கறை-கடல் விடத்தின் நீல நிறக் கறை. களம்-கழத்து. கடலின் நீளமும் அகலமும் ஆழழுமாகிய பெருமை யெல்லாம் அடங்க, “நெடுங்கடல்” எனக் கூறுகிறார். கண்ணில் நிறைந்தெளிரும் ஒளி சிவத்தின் திருவருளொளி என்று நினைவுறுத்தற்குக் “கண்ணோங்கும் ஒளியே” என்று உரைக்கின்றார். கனம்-பெருமை. சித்கன வெளி - ஞானமாகிய பெருவெளி; இதனைச் சிதாகாயம் என்பர். சிதாகாயத்துக் குள்ளிருப்பது பரசிவப் பெருவெளியாதல் தோன்றச் “சிற்கன வெளிக்குள் வெளியே” என்று குறிக்கின்றார். கடவுட் பெருந்தரு-கடவுளாகிய பெரிய கற்பகத் தரு என்றும் கூறப்படும். மறைமுடி -வேதாந்தம்; வேதாந்தத்தில் விளங்கும் திருவடி ஞானம் மணி யென்று சொல்லப்படுகிறது; அதனால், “மணியாகி வயங்கிய சேவடிகள்” எனக் கூறுகிறார். குறை-இன்றியமையாத பொருள். கொடுத்தது இன்னதென விளங்காமை பற்றி, “ஒன்று” எனவே இப்பகுதி முற்றும் கூறுவர். (9)
|