3069.

     அன்றகத்தே அடிவருந்த நடந்தென்னை அழைத்திங்
          கஞ்சாதே மகனேஎன் றளித்தனைஒன் றதனைத்
     துன்றகத்துச் சிறியேன்நான் அறியாது வறிதே
          சுழன்றதுகண் டிரங்கிமிகத் துணிந்துமகிழ் விப்பான்
     இன்றகத்தே புகுந்தருளி எனக்கதனைத் தெரிவித்
          தின்புறச்செய் தருளியநின் இரக்கம்எவர்க் குளதோ
     மன்றகத்து நடம்புரிந்து வயங்கும்ஒரு குருவே
          வல்லவரெல் லாம்வணங்கும் நல்லபரம் பொருளே.

உரை:

     அம்பலத்தில்கண் திருக்கூத்தாடி விளக்கமுறுகின்ற ஒப்பற்ற குருபரனே, வல்லுந ரெல்லாரும் தலை வணங்கும் நல்லதாகிய பரம்பொருளே, அன்றொருநாள் திருவடி வருந்த நடந்து வந்து என் மனைக்கு வந்து என்னை யழைத்து இவ்விடத்தே, என் மகனே, நீ அஞ்சுதல் வேண்டா என வுரைத்து ஒன்றை என் கையில் தந்தருளினாய்; வீட்டில் அடைப்பட்டுக் கிடக்கும் சிறுமை யுடையவனாகிய யான் அதனையறியாமல் வீணே மனக் கலக்க மெய்தி வருந்துவது கண்டு திருவுளம் இரங்கி மிகவும் தெளிவுற்று மகிழ்வது கருதி, இந்நாள் என் மனைக்குட்புகுந்து, அதனுண்மையை எனக்கு அறிவித்து, இன்புறச் செய்தற்கு ஏதுவாகிய நின் கருணை வேறு எவரிடத்துளதாம். எ.று.

     மன்றகம்-தில்லையம்பலம். அம்பலத்தின்கண் செய்தருளும் திருக்கூத்தால் சிவனது திருவருள் விளக்கம் பெரிதும் புலப்படுதலின், “நடம் புரிந்து வயங்கும் ஒரு குருவே” எனவும் திருக்கூத்தே ஞானோபதேசமாக இருத்தல் தோன்ற, “குருவே” எனவும் இயம்புகின்றார். அறிவு, ஆண்மை, பொருள் ஆகியவற்றைப் பெறுதற்கண் வல்லவர் பலரையும் அகப்படுத்தற்கு “வல்லவ ரெல்லாம்” என்றும், பிறர் தம்மை வணங்கத் தக்க பெருமை யுடையராயினும், சிவ பரம்பொருளின் வன்மை வரம்பிகந்து விளங்குதலால், தலை வணங்குகின்றன ரென்பாராய், “வணங்கும் பரம்பொருளே” என்றும், பரமான பொருளாவதோடு நன்மை செய்வதாதல் பற்றி “நல்ல பரம்பொருளே” என்றும் இசைக்கின்றார். அன்று-முன்பொருநாள். அகம்-தங்கும் மனை, வீடுமாம். வந்தவரைக் கண்டும் அழைத்த குரலைக் கேட்டும் நெஞ்சில் அச்ச முற்றமையின், “அஞ்சாதே” எனப் பெருமான் கூறுகின்றார். துன்றகம்-கதவுகளாற் காப்பமைந்த வீடு. புதிது கண்டமை விளங்க “அறியாது” எனவும், மருட்கையற்று அலமந்தமை புலப்பட, “அறியாது வறிதே சுழன்று” எனவும், அந்த நிலைமை கண்டு யான் மனம் தெளிவுற்று மகிழுமாறு அருள் விளக்கம் தரத் திருவுள்ளம் கொண்டமை புலப்படுத்தற்கு, “அது கண்டு இரங்கி மிகத் துணிந்து அகம் மகிழ்விப்பான்” எனவும் கூறுகின்றார். மருண்ட நிலையிலே வள்ளலார் பன்னாளிருந்தமையின் “இன்று அகத்தே எழுந்தருளி எனக்கு அதனைத் தெரிவித்து இன்புறச் செய்தருளினாய்” என்பவர் யான் எய்திய மயக்கத்தைத் தீர்த்தல் வேண்டும் என நினைந்தருளிய இறைவனுடைய அருளுள்ளத்தை வியக்கின்றமை இனிது தோன்ற, “நின் இரக்கம் எவர்க்கு உளதோ” என உரைக்கின்றார். இவ்வாறு நினைப்பவர் உலகில் அரியராதலால், “எவர்க்குளது” என இயம்புகின்றார்.

     (10)