3070.

     அன்பர்மனக் கோயிலிலே அமர்ந்தருளி விளங்கும்
          அரும்பொருளாம் உனதுமல ரடிவருந்த நடந்து
     வன்பர்களின் தலைநின்ற வஞ்சகனேன் இருந்த
          மனைக்கதவு திறப்பித்து மகிழ்ந்தெனைஅங் கழைத்துத்
     துன்பமெலாம் நீங்குகஇங் கிதுதனைவாங் குகநீ
          தொழும்பன்என்ற என்னுடைய துரையேநின் னருளை
     என்பகர்வேன் என்வியப்பேன் எங்ஙனம்நான் மறப்பேன்
          என்உயிருக் குயிராகி இலங்கியசற் குருவே.

உரை:

     என்னுடைய உயிர்க்குயிராக இலங்கிய சற்குருவே, மெய்யன்பர்களின் மனமாகிய கோயிலில் எழுந்தருளி விளங்கும் அரிய பரம்பொருளாகிய உன்னுடைய மலர் போன்ற திருவடிகள் வருந்தும்படி நடந்து, வன்மன முடையவர்களில் முதல்வனாக நிற்கின்ற வஞ்சகனாகிய யான், இருந்த வீட்டின் கதவைத் திறக்கச் செய்து உள்ளே புகுந்து என்னைத் தன்னிடம் வருவித்து, உன் துன்பமெலாம் போகுமாறு இவ்விடத்தே யான் தரும் இதனை வாங்கிக்கொள்க; நீ என்னுடைய தொண்டனாவாய் என வுரைத் தருளிய எனது துரையே, நின்னுடைய திருவருளை என்னென் றுரைப்பேன்; நான் அதனை எவ்வாறு மறப்பேன், காண்க. எ.று.

     உணர்வுருவாகிய உயிர்க்குள்ளிருந்து உணர்வு நல்குதலால், சிவபிரானை, “என் உயிருக்குயிராகி இலங்கிய சற்குருவே” எனக் கூறுகின்றார். சற்குரு-மெய்யுணர்வு நல்கும் ஆசிரியன். மெய்யன்பர்கள் தூய மனம் சிவனுறையும் கோயிலாதல் பற்றி, “அன்பர் மனக்கோயிலிலே அமர்ந்தருளி” எனவும், அகள நிலையிற் சிவம் பரம்பொருளாய் நிலவுதல் பற்றி, “விளங்கும் அரும்பொருள்” எனவும் இயம்புகின்றார். பரமாம் தன்மைத்தாயினும் அரிய தவம் முயல்பவர்க்குப் பெறற்குரியதாகலின், “அரும்பொருளே” என்று புகல்கின்றார். மெய்யன்பர் மனம் ஞான நிலையமாதலின், அதுவே சிவபெருமான் எழுந்தருளும் கோயிலாமென ஞானசம்பந்தர் முதலியோர், “ஞானம் புகலுடையோர்தம் முள்ளப் புண்டரிகத்துள்ளுறையும் புராணர்” (திருவீழி) எனக் கூறுதல் காண்க. அன்பில்லாதவரை, “வன்பர்” என்பர். அன்பில்லாத மூர்க்கர்களில் யான தலையாயினே னென்பார், “வன்பர்களில் தலைநின்ற வஞ்சகனேன்” எனக் கூறுகிறார். வஞ்சகனேன் என்றது, தனது அன்பின்மையைப் புறத்தே வெளிப்படாதபடி மறைத் தொழிகினமை புலப்படுத்தியவாறாம். தமக்கு முன்னே என்னைக் கூவியழைத்து, யான் ஒன்று தருகின்றேன்; அதனைப் பெற்றுக் கொண்டு துன்பமெல்லாம் நீங்குக என்பாராய், “துன்பமெலாம் நீங்குக இங்கு இதுதனை வாங்குக” என்றும், இறைவன் தருதற்கும் வடலூர் வள்ளல் வாங்குதற்குமுள்ள தொடர்பு காட்டற்கு “நீ தொழும்பன் என்ற துரையே” என்றும் சொல்லுகிறார். துரை-கொடுத்தலும் வாங்குதலும் செய்தற்குரிமையுடைய தலைவன். செல்வர் ஒருவர் தாமே வலிய வந்து துன்பம் போக்கற்குத் துணை புரிவது பேரருளாதல் கண்டு, “ என்னென்பேன் என்னென்பேன் எங்ஙனம் நான் மறப்பேன்” எனவுரைக்கின்றார்.

     (11)