3071. ஞாலநிலை அடிவருந்த நடந்தருளி அடியேன்
நண்ணும்இடந் தனிற்கதவம் நன்றுதிறப் பித்துக்
காலநிலை கருதிமனங் கலங்குகின்ற மகனே
கலங்காதே என்றெனது கையில் ஒன்று கொடுத்துச்
சீலநிலை உறவாழ்க எனத்திருவாய் மலர்ந்த
சிவபெருமான் நின்பெருமைத் திருவருள்என் னென்பேன்
ஆலநிலை மணிகண்டத் தரும்பெருஞ்சீர் ஒளியே
அம்பலத்தில் திருநடஞ்செய் தாட்டுகின்ற அரசே.
உரை: விடக் கறை நிலை பெற்ற நீலமணியின் நிறம் பொருந்திய கழுத்தையுடைய பெறற்கரிய சிறப்பமைந்த ஞான வொளியானவனே, அம்பலத்தில் நடம் புரியுமுகத்தால், உலகில் உயிர்களைப் பிறந்திருந்து இறந் துலவ வாழ்விக்கும் அருளரசே, நிலத்தின் மேல் திருவடி வருந்த நடந்து போந்து அடியவனாகிய யான் இருக்கும் இடத்தை யடைந்து, கதவைத் திறக்கச் செய்து காலநிலைமையை எண்ணி, மகனே, நீ மனம் கலக்கம் கொள்ளுகின்றாய்; அது வேண்டா என்று சொல்லி, என் கையில் ஒன்று தந்தருளி, நல்லொழுக்கம் நிலைபெறப் பொருந்தி வாழ்க என்று உரைத் தருளிய சிவபெருமானாகிய உனது திருவருட் பெருமையை என்னென்று புகழ்வேன். எ.று.
ஆலம்-விடம். கடல் விடமுண்டதனால் மாணிக்க மணி போன்ற கழுத்து நீலமணியின் நிறம் பெற்று நின்று திகழ்தல் விளங்க, “ஆலநிலை மணி கண்டத் தரும் பெருஞ் சீரொளியே” என்று போற்றுகின்றார். உலகில் எவராலும் பெறற் கரிதாம் பேரொளியாதலால் சிவ வொளியை, “அரும்பெருஞ் சீரொளி” என்று சிறப்பிக்கின்றார். உலகுயிர்களைத் தாம் படைத்துக்காத்தல் முதலிய ஐந்தொழில் செய்வது போலப் பொருள்களைப் படைத்துக் காத்து ஒழுகி வாழச் செய்தல் பற்றித் “திருநடஞ் செய்து ஆட்டுகின்ற அரசே” எனப் பரவுகின்றார். ஞால நிலை என்னுமிடத்து, நிலை ஏழனுருபின் பொருட்டு, நண்ணுமிடம், பொருந்தி யுறையு-மிடம். முதல்வன் வந்தருளிய போது உறைவிடத்தின் கதவு மூடிக் கிடந்தமையின், “கதவம் நன்று திறப்பித்து” என்கிறார். சிறிது திறவாமல் அகலமாகத் திறந்தமை புலப்பட, “நன்று திறப்பித்து” எனக் கூறுகிறார். நன்று-பெரிது. காலத்திற் பெறற் குரியவற்றைப் பெற மாட்டாது மன வருத்தம் உண்டு பண்ணும் நிலைமையைக் “கால நிலை” எனக் குறிக்கின்றார். “கால நிலைமையால் உங்கள் கருத்தில் வாட்டமுறீர்” (திருநாவுக். 257) எனச் சேக்கிழார் உரைப்பது காண்க. வாய்ச் சொல்லோடு அமையாது கையில் ஒன்று கொடுத்துதவியதும், கலக்கமறப் பொருள் எய்தப் பெற்றவரில் நல்லொழுக்கம் கெட நின்றவர் பலராதலின், “சீலம் நிலையுற வாழ்க” என்றதும் வடலூர் வள்ளலின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டமையின், “சிவபெருமான் நின் பெருமைத திருவருள் என்னென்பேன்” எனக் கூறுகின்றார். சீலம், நல்லொழுக்கம். (12)
|