3072. இருள்நிறைந்த இரவில் அடி வருந்தநடந் தடியேன்
இருக்குமிடந் தனைத்தேடிக் கதவுதிறப் பித்து
மருள்நிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே
மயங்காதே என்றென்னை வரவழைத்துப் புகன்று
தெருள் நிறைந்த தொன்றெனது செங்கைதனிற் கொடுத்துத்
திகழ்ந்துநின்ற பரம்பொருள்நின் திருவருள்என் னென்பனே்
அருள்நிறைந்த மெய்ப்பொருளே அடிமுடிஒன் றில்லா
ஆனந்த மன்றில்நடம் ஆடுகின்ற அரசே.
உரை: திருவருளே திருவுருவாய் அமைந்த மெய்ம்மைப் பொருளே தோற்றக் கேடுகளில்லாத இன்ப அம்பலத்தின்கண் ஆடுதலைப் புரிகின்ற அருளரசே, இருள் செறிந்த இராப் பொழுதில் திருவடி வருந்துமாறு நடந்து அடியவனாகிய யான் இருக்கின்ற இடத்தை நாடி வந்து, கதவைத் திறக்கச் செய்து, என்னைத் தன்பால் வருவித்து மருட்சி நிறைந்த மனம் உடைமையால் நினைவு மயங்குகின்ற மகனே, இனி மயங்கல் வேண்டா என்று சொல்லி, விளக்கம் மிக்க தொன்றை என் கையில் அளித்து அறிவொளி திகழ நின்ற மேலாப் பொருளாகிய உனது திருவருளை என்னவென்று இயம்புவேன். எ.று.
பொய்யொழுக்கமுடைய பொய்யர்பால் திருவருளுணர்வு நில்லாதாகலின், “அருணிறைந்த மெய்ப் பொருளே” எனவும், ஆதியந்தமின்றி எப்போதும் நடக்கின்ற இன்பத் திருக்கூத்து இறைவன் கூத்து என்றற்கு, “ஆனந்த மன்றில் நடம் ஆடுகின்ற அரசே” எனவும் இயம்புகின்றார்; ஆடுவார்க்கு ஆடரங்கு அம்பலம் எனற்கு “மன்றில்” என்கிறார். ஆடுதற்குக் காரணம் திருவருளாதலின், அதனை முறை பிறழா வண்ணம், இயக்குவது பற்றி “அரசே” எனக் குறிக்கின்றார். நிலவொளியில்லாத அமாவாசை யிருள் படிந்த இராப் பொழுதை, “இருணிறைந்த இரவு” என்றும் நடத்தல் இல்லாத செல்வர்க்கு நடை வருத்தம் தருமென நினைந்து, “அடி வருந்த நடந்து” என்றும், வீடுகள் பல நிறைந்த இடத்தில் தம்மைத்தேட நேர்ந்தமை புலப்பட, “அடியேன் இருக்குமிடம் தனைத் தேடி” என்றும் இயம்புகிறார். தேடியது, நடை வருத்தத்தை மிகுதிப் படுத்தியதென அறிக. வீடடைந்தார்க்குக்கதவு மூடியிருந்தமையின், அதனைக் கையாற்றட்டித் திறப்பித்தமை தோன்ற, “கதவு திறப்பித்து” எனவும், வந்தவர் யாவரோ, யாது கருதி வந்தாரோ என்பன போன்ற எண்ணங்களால் மருண்டிருந்தமை திறந்தவர் நடையாலும் சொற் குறிப்பாலும் உணர்ந்தமையின். “மருணிறைந்த மனத்தாலே மயங்குகின்ற மகனே மயங்காதே” எனவும் உரைக்கின்றார். உட்புகுந்த பெருமானைக் கண்டதும் மருட்கையாற் சிறிது பின்னொடுங்கினமை விளங்க “வர அழைத்து” என்கின்றார். மனத்துட் கிடந்த மருட்சி யிருளைத் தெளிவு தரும் சொல்லாலும் பொருளாலும் நீக்கி மனத்தில் தெளிவும் ஒளியும் நிலவக் கையில் ஒரு பொருளைக் கொடுத்தமை தோன்ற, “தெருணிறைந்த தொன்று எனது செங்கைதனிற் கொடுத்து” என்கிறார். செங்கை-வேறு யாது மில்லாத வெறுங் கை. மோனைக்குரிய கிளை யெழுத்துக்கள் இல்லாததைச் “செந்தொடை” என்பது போல. பரம் பொருண்மை மாத்திரையாய் நின்றது மிக்க பேரருளாலன்றி இங்ஙனம் வலியப் போந்து ஆட்கொள்ளும் தன்மையுண்டாகாதாகலின், “திருவருள் என்னென்பேன்” என வுரைக்கின்றார். (13)
|