3074.

     பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும்நின் றோங்கும்
          பெருங்கருணைத் திருவடிகள் பெயர்ந்துவருந் திடவே
     கரணமுற்று நடந்தடியேன் இருக்குமிடந் தேடிக்
          கதவுதிறப் பித்தருளிக் கடையேனை அழைத்துச்
     சரணமுற்று வருந்தியஎன் மகனேஇங் கிதனைத்
          தாங்குகஎன் றொன்றெனது தடங்கைதனிற் கொடுத்து
     மரணமற்று வாழ்கஎனத் திருவார்த்தை அளித்தாய்
          மன்றுடையாய் நின்அருளின் வன்மைஎவர்க் குளதே.

உரை:

     தில்லையம்பலத்தை ஆடரங்காக வுடைய பெருமானே, பிரணவமாகிய ஓங்காரத்தின் தொடக்கம், நடு, இறுதியாகிய மூன்றிடங்களிலும் நிலைநின் றோங்குகின்ற பெரிய திருவருளுருவாகிய நின்னுடைய திருவடிகள் முன்னும் பின்னுமாக வருந்த நடத்தற் றொழிலை மேற்கொண்டு அடியனாகிய யான் இருக்குமிடத்தைத் தேடி நடந்து வந்து கதவைத் திறக்கச் செய்து மனைக்கடைப் புறத்தில் இருந்த என்னை அழைத்து, அடி வணங்கி வருந்திய என் மகனே, இங்கே நான் தரும் இதனைக் கையிற் கொள்க என வாயாற் சொல்லி என் பெரிய கைகளில் கொடுத்தருளி, இறப்பின்றி வாழ்க என்ற திருமொழியை வழங்கி யருளினாய்; உன்னுடைய திருவருட் கொடை நலம் வேறே எவரிடத்தும் இல்லை காண். எ.று.

     ஓம் என எழுதியும் ஓதியும் வரும் ஒரு மொழியை ஓங்காரம் என்று காரச் சாரியைப் புணர்த்துக் கூறுவர். வடமொழியில் இதனைப் பிரணவம் என்பர். இதன் உருவமே இறை என்பாராய், “ஊனங்கத் துயிர்ப்பாய் உலகெல்லாம் ஓங்காரத் துருவாகி நின்றான்” (வலிவலம்) என்றும் இதன் உட்பொருளும் மெய்ப்பொருளும் இறைவனே என்றற்கு, “ஓங்காரத் துட்பொருளை” (ஆனைக்கா) எனவும், “ஓங்கார மெய்ப்பொருளை” (ஆலம் பொழில்) எனவும் திருநாவுக்கரசர் தெரிவிப்பது காண்க. இவ்வாறே மணிவாசகரும்” ஓங்காரமாய் நின்ற மெய்யா” (சிவபு) எனவும், “ஓங்காரத் துட்பொருளை” (அச்சோ) எனவும் எடுத்தோதுகின்றார். “ஓம் எனும் ஓங்காரத்துள்ளே ஒருமொழி” (2676) எனக் காட்டி இதனை உள்ளொளி (1556) எனத் திருமந்திரம் விளக்குகிறது. இவ்வுண்மைகளைத் தெளிவுறக் கண்டே, “பிரணவத்தின் அடிமுடியின் நடுவினும் நின்றோங்கும் பெருங்கருணைத் திருவடிகள்” என வுரைக்கின்றார். அடிபெயர்ந்து நடத்தலும் வருந்துதலும் இறைவற்கு இல்லையாயினும், அவரது சகள வுருவை நினைவிற் கொண்டு அன்பு மிகுதியால் அவை உள்ளன போல உவந்து கூறுகின்றார். கரணம் - ஈண்டுச் செயல் குறித்து நின்றது. கடையேன் - புறக்கடையில் இருந்தேன். சரண முறல் - அடி வீழ்ந்து வணங்குதல். இதனை ஏற்றுப் போற்றுக என்றற்குத் “தாங்குக” என்கின்றார். தடக்கை தடங்கை எனவும் வரும். பயனின்றி இறத்தலை மரணம் எனக் கருதுகின்றாராகலின், இம்மையிற் புகழும் அம்மையில் முத்தி யின்பமும் பெறவமைந்த வாழ்வை, மரணமிலா வாழ்வு என மதிக்கின்றமை புலப்பட, “மரண மற்று வாழ்க எனத் திருவார்த்தையளித்தாய்” என்று கூறுகின்றார்.

     (15)