3075.

     ஓங்காரத் துள்ளொளியாய் அவ்வொளிக்குள் ஒளியாய்
          உபயவடி வாகிய நின் அபயபதம் வருந்த
     ஈங்கார நடந்திரவில் யானிருக்கும் இடம்போந்
          தெழிற்கதவந் திறப்பித்தங் கென்னைவலிந் தழைத்துப்
     பாங்காரும் வண்ணம்ஒன்றென் கைதனிலே அளித்துப்
          பண்பொடுவாழ்ந் திடுகஎனப் பணித்தபரம் பொருளே
     ஆங்கார வண்ணம்அகன் றதைஅறிந்து மகிழ்ந்தே
          அனுபவிக்கின் றேன்பொதுவில் ஆடுகின்ற அரசே.

உரை:

     அம்பலத்தில் ஆடல் புரிகின்ற திருவருளரசே, ஓங்காரப் பிரணவத்தின் உள்ளொளியாயும் அவ்வொளிக்குள் நுண்ணொளியாயும் இருக்கின்ற பெருமானே, இரண்டுருவாகிய நின் அபயத் திருவடிகள் வருந்துமாறு இவ்விடத்தே மண்ணிற் பொருந்த நடந்து, இராப் பொழுதில் யான் இருக்கமிடம் அடைந்து உயர்ந்த கதவைத் திறக்கச் செய்து அவ்விடத்தே என்னை வற்புறுத்தி யழைத்துப் பாங்காக அமையுமாறு ஒன்றை என் கையில் தந்து பண்புடன் வாழ்க என வாழ்த்துக் கூறிய பரம் பொருளே, நினது அருளுரையால் அகங்காரமான செருக்குணர்வு என்னினின்றும் நீங்கியதை நானே அறிந்து மகிழ்ந்து தூய வாழ்வை அனுபவிக்கின்றேன், காண். எ.று.

     ஒலி ஒளியாதலும், ஒளி ஒலியாதலும் இன்றைய விஞ்ஞானச் செயல் வகைகள் இயல்பாகக் காட்டுவது காண்பது போல ஓங்காரத் துருவாகிய பிரணவம், ஓம் என உருவாய் ஒலித்தல் போல, ஒளியாகவும் தோன்றக் கண்ட வள்ளற் பெருமான், “ஓங்காரத்துள் ஒளியாய்” என்றும், அவ்வொளிக்குள் நுண்ணிய ஒளியாய்ப் பரசிவம் தோன்றக் கண்டு “அவ்வொளிக்குள் ஒளியாய்” என்று உரைக்கின்றார். “சோதியுட் சோதி” என்பதுவே 'ஒளிக்குள் ஒளி' எனப்படுகிறது. அதனையே, “ஓங்காரத்துள்ளொளியாய் அவ்வொளிக்கு உள்ளொளியாய்” என வுரைக்கின்றார். ஓங்காரத்தின் உள்ளொளி கண்டார் ஆங்காரமான அகந்தை யிருள் நீங்கி இன்பானுபவம் பெறுவரெனத் திருமூலர் கூறுவதால் “ஆங்கார வண்ணம் அகன்றதை யறிந்து மகிழ்ந்தனுபவிக்கின்றேன்” என வள்ளற் பெருமான் விளக்குகின்றார். “ஓங்காரத்துள் ளொளி உள்ளே உதயமுற்று, ஆங்காரமற்ற அனுபவம் கைகூடார்” (1556) என்று திருமந்திரம் கூறுவதறிக. உபய வடிவு - இரண்டாகிய திருவடி. அபய பதம் - அடைந்தார்க்குப் புகலளிக்கும் திருவடி. ஆர்தல் - பொருந்துதல். அகன்றுயர்ந்த வாயிற் கமைந்த கதவு என்றற்கு “எழிற் கதவு” எனப்படுகிறது. எழில் - உயர்ச்சி. பாங்காரும்வண்ணம், தவறிக் கீழே வீழாவாறு, தக்கார் தகவு கண்டு அதற்கொப்ப வொழுகுவது பண்பு; “பண்பெனப்படுவது பாடறிந்தொழுகுதல்” (கலித்) என்பர் சான்றோர். பரம்பொருளாகிய சிவனை நினைவாரும் நினையாரும் வேறறத் தோன்றுவராயினும் உணர்வும் ஒழுக்கமுமாகிய பண்பு அறிந்தொழுகுபவரே, இன்பானுபவம் பெறுவர்; பெறாதவர் ஏங்கி வருந்துவர் என்பாராய், திருமூலர், “பாங்கமர் கொன்றைப் படர் சடையானடி, தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்; நீங்கிய வண்ண நினைவு செய்யாதவர், ஏங்கி யுலகில் இருந்தழுவாரே” (திருமந். 1551) என வுரைப்பது காண்க. திருமந்திரத்தில் காணப்படும் வண்ணமும் நினைவும் பண்பறிந் தொழுகுதலை யுணர்த்துவ தறிக.

     (16)