3076. அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா
அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக்
கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே
கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து
உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி
உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது
பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில்
பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே.
உரை: அம்பலத்தின்கண் பெருமை பொருந்திய திருக்கூத்தியற்றும் அருளரசே, என்னுடைய குற்றங்களைப் பொறுத்தாண்ட குருபரனே, திருமால் பிரமன் முதலிய தேவர்கள் எல்லாராலும் அறிந்து அடைய முடியாத அருமையும் பெருமையு முடைய சீர்த்தி கொண்ட தாமரை போன்ற திருவடிகள் வருந்த முன்பொருநாள் கரிய இருள் பரவிய இராக் காலத்தில் யான் இருக்கு மிடத்துக்கு நடந்து வந்து கதவைத் திறக்கச் செய்து, என்னுடைய கையில் ஒன்றைத் தந்து உரிமையொடு வாழ்க எனச் சொல்லியதொடு நின்றொழியாது மனமகிழ்வுடன் இன்றிரவும் போந்து எனக்கு அறிவுறுத்தினாய்; இதனால் என்பால் உனக்குள்ள அன்பிருந்த திறத்தை யான் என்னென்று சொல்லுவேன். எ.று.
பொது - தில்லையம்பலத்துக்குள்ள பெயர்களில் ஒன்று. உலகுகளைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலும், உயிர்களை அருளல், மறைத்தல் என்ற இரு தொழில்களும் இனிது நடைபெறச் செய்யும் பெருமை யுடைமையால் சிவனது கூத்தைப் பெருநடம் என்று சிறப்பிக்கின்றார். அரி பிரமர் ஆதியர், திருமால் பிரமன் முதலாய தேவர்கள். திருமால் காத்தற் றொழிலிலும், பிரமன் படைத்தற் றொழிலிலும் எய்தும் இன்பமும் தேவர்கள் முன்னை வினைப் போக நுகர்ச்சியில் எய்தும் இன்பமுமே நோக்குவ தல்லது, சிவஞானப் பேற்றின்கண் நுகரும் இன்பத்தில் ஈடு படாமை பற்றி, “அரி பிரமாதிய ரெல்லாம் அறிந்தணுகவொண்ணா அரும்பெருஞ் சீரடி மலர்கள்” எனக் கூறுகின்றார். அறிய மாட்டாமையால் அருமையும், அணுக வொண்ணாமையாற் பெருமையும் உடைமை விளங்க, “அரும்பெருஞ் சீர் அடி மலர்கள்” என அறிவிக்கின்றார். கரிய இருள் - திணிந்த இரவு கரி யிருள் எனப்படுகிறது. பசுபாச மலங்களாற் பிணிப்புண்டு உலகியல் அறிவிச்சை செயல்களுக்கடிமைப்பட்டுக் கிடக்கும் கட்டினின்றும் நீங்கி ஆன்ம வுரிமையுடன் வாழ்க என வற்புறுத்துவாராய், “உரிமையொடு வாழ்க என வுரைத்து” எனவும், தொடுவழி நீங்கி விடுவழிப் படரும் பாசி போல உணர்த்திய பொழுது நீங்கி மீட்டும் படரும் இயல்பு உலகியற் சூழலுக் குண்மையால், “இன்றை யிரவினும் வந்து உணர்த்தினை” எனவும், மறித்தும் உணர்த்த வேண்டிய நிலைமைக்கு வெறுப்புறாமல் உவப்புடன் உணர்த்தியது பற்றி, “உவத்து” எனவும் இயம்புகின்றார். இன்றை, ஐயீற்றுடைக் குற்றுகரம். ஒருமுறைக்குப் பன்முறை யுரைத்தற்குக் காரணம் என்பால் உனக்குள்ள அன்பு என்பாராய், “என் மீது பிரியமுனக் கிருந்தவண்ணம் என் புகல்வேன்” என்று கூறுகின்றார். பிழை, மறதி, மறவிக் குற்றத்தைப் பொறாவிடின் இன்றை யிரவும் நீ வந்திராய் என்பது குறிப்பு. (17)
|