3077. காரணன்என் றுரைக்கின்ற நாரணனும் அயனும்
கனவிடத்துங் காண்பரிய கழலடிகள் வருந்த
ஊரணவி நடந்தெளியேன் உறையும்இடந் தேடி
உவந்தெனது கைதனிலே ஒன்றுகொடுத் திங்கே
ஏரணவி உறைகமகிழ்ந் தெனஉரைத்தாய் நின்சீர்
யாதறிந்து புகன்றேன்முன் யாதுதவம் புரிந்தேன்
பாரணவி அன்பரெலாம் பரிந்துபுகழ்ந் தேத்தப்
பணிஅணிந்து மணிமன்றுள் அணிநடஞ்செய் பதியே.
உரை: மெய்யன்புடையவ ரெல்லாரும் நிலவுலகையுற்று அன்பு கொண்டு புகழ்ந்து துதிக்குமாறு, பாம்பாபரணம் பூண்டு அழகிய தில்லையம்பலத்தில் அழகு நடம் செய்தருளும் முதல்வனே, உலக காரணன் எனச் சிறப்பிக்கப்படுகின்ற திருமாலும் நான் முகனும் கனவிலும் காண்டற்காகாத நின் கழலணிந்த திருவடிகள் நோவுமாறு எனது ஊரையடைந்து, எளியனாகிய யான் இருக்கும் வீடு தேடி வந்து மன மகிழ்ச்சியுடன் என் கையகத்தில் ஒன்றைத் தந்து, இவ்வுலகில் சிறப்புற்று மகிழ்வுடன் வாழ்க என உரைத்தருளினாயாயினும் நின்னுடைய புகழ்களில் எதனைத் தேர்ந்து முற்பிறப்பில் ஓதி யுயர்ந்தேனோ; எத்தகைய தவம் செய்தேனோ, அறிகிலேன். எ.று.
பக்திக்கும் தவத்துக்கும் உரிய விடம் பூவுலகமே என்பது பற்றித் தேவரும் மக்களும் நிலவுலகை யடைந்து சிவ பெருமானாகிய உன்னைப் பணிந்து பரவுகின்றார்கள் என்பாராய், "பாரணவி அன்பெரலாம் பரிந்து புகழ்ந்தேத்த” என்றும் அவர்கள் பொருட்டு உடல் கருவி கரண முதலாயினவற்றைப் படைத்தளிப்பது காரணமாக நீ பாம்புகளை அணியாகக் கொண்டு தில்லை மன்றில் திருநடம் புரிகின்றாய் என்பாராய், “பதம் பணிந்து மணிமன்றுள் அணி நடம் செய் பதியே” என்றும் எடுத்துரைக்கின்றார். “புவனியிற் போய்ப் பிறவாமையின் நாணாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந்துறை யுறைவாய் திருமாலாம் அவன் விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்” (பள்ளி) என மணிவாசகர் உரைப்பது காண்க. அயன் படைத்தவற்றைக் காக்கும் தலைவனாதல் கொண்டு திருமாலை, “காரணன் என்று உரைக்கின்ற நாரணன்” எனக் கூறுகின்றார். அயன் ஆக்கியவுலகைக் “காக்குமாறு செங்கண்ணிறை கருணையங் கடலாம்” (பாரதம்) என்று வில்லிப்புத்தூரர் விளம்புவது காண்க. பசு போதவுருவினனாதலால் சிவ பரம் பொருளை அறிதுயிலில் ஆழ்ந்து கிடப்பினும் காணானாயின் என்பாராய், “கனவிடத்தும் காண்பரிய கழலடிகள்” எனவும், நோயும் பிணியும் தர்க்குதற் கமைந்த மக்களது வாத, பித்த, சிலேத்துமங்களாகிய தேகம் போல் வதன்றாயின் சிவனதுடம்பை அன்பால் தனது போல எண்ணுகின்றமை விளங்க, கழலடிகள் வருந்த” எனவும், இயம்புகின்றார். அணவுதல், சேர்தல், உறையுமிடம். இருக்குமிடம் ஏர், சிறப்பு; மேன்மையுமாம். மண்ணுலகில் வாழ்பவர்க்கு ஏற்றம் தருவது சிவஞானமாதலால், அது நிறைந்து வாழ்க என்பாராய், “ஏரணவி” என்றும், சிவஞானத்தால் உளதாவது இன்பமல்ல தில்லையாதலால் “மகிழ்ந்துறைக என வுரைத்தாய்” என்றும் கூறுகின்றார். தமக்குண்டாகிய பத்தியும் சிவனே எழுந்தருளி அருள் கொடுக்கும் நலமும் காரணமின்றி யுளவாகாமை யெண்ணி, இம்மையிற் பத்தி பூண்டு இறைவன் புகழ் பாடலுற்றதோ, முன்னைப் பிறவித் தவப் பயனோ என எண்ணுமாறு புலப்பட, “நின் சீர் யாதறிந்து புகன்றேன்” எனவும், “முன் யாது தவம் புரிந்தேன்” எனவும் மொழிகின்றார். சீரறிந்து புகழ்தல் 'பத்தி நெறி' என அறிக. (18)
|