3078. துரியவெளி தனிற்பரம நாதஅணை நடுவே
சுயஞ்சுடரில் துலங்குகின்ற துணையடிகள்வதப்
பிரியமொடு நடந்தெளியேன் இருக்குமிடந் தேடிப்
பெருங்கதவந் திறப்பித்துப் பேயன்எனை அழைத்து
உரியபொருள் ஒன்றெனது கையில்அளித் திங்கே
உறைகமகிழ்ந் தெனஉரைத்த உத்தம நின் னருளைப்
பெரியபொரு ளெவற்றினுக்கும் பெரியபொரு ளென்றே
பின்னர்அறிந் தேன்இவற்கு முன்னர்அறி யேனே.
உரை: உத்தமனே, உந்தித்தானமாகிய துரிய வெளியின் தோன்றும் பரம நாத மாகிய அணையின் நடுவே தனிச் சுடரொளியாக விளக்குகின்ற நின்னுடைய திருவடிகள் இரண்டும் வருந்த, அன்புடன் நடந்து போந்து, எளியவனாகிய யான் இருக்குமிடத்தைத் தேடிப் பற்றி அங்கே மூடியிருந்த பெரிய கதவைத் திறக்கச் செய்து, பேயனாகிய என்னை வரவழைத்துத் தனக்குரிய பொருள் ஒன்றை என்னுடைய கையில் தந்து இங்கே மகிழ்ந்து உறைக என்று சொல்லி யருளிய நினது திருவருளைப் பெரிய பொருளெனப் பேசப்படும் பெரும் பொருள் எல்லாவற்றிற்கும் பெரிய பொருள் எனப் பின்பு அறிந்து கொண்டேனேயன்றி முன்பு அறிந்திலேன் எ.று.
உத்தமன், உயர்ந்த உறவினன். நமது உடம்பின் புருவ நடு வெளியைச் சாக்கிரதுக்கும் (நனவு நிலைக்கும்), கழுத்து வெளியைச் சொப்பனத்துக்கும் (கனவு நிலைக்கும்), இதய வெளியைச் சுழுத்திக்கும் (துயிலுறு நிலைக்கும்), உந்தி வெளியைத் துரியத்துக்கும் (உறக்க நிலைக்கும்), மூலாதார வெளியைத் துரியா தீதத்துக்கும் (பேருறக்க நிலைக்கும்) இடமெனச் சிவாகமங்கள் உரைக்கின்றன. புருவ நடு வெளியிலிருந்து தேகத்தின் அகத்தும் புறத்தும் பரந்து நிலவும் உயிரது உணர்வியக்கம் ஒடுங்கி உள்ளுறச் சென்து துரியமாகிய உந்தியை யடையும். அங்கே சுத்த சிவ தத்துவமாகிய நாதம் ஒளி யுருவில் காணப்படுதலின், இங்கே அணையும் நிலை 'அணை' எனப்படுகிறது. நீரணை போல் தடை செய்வதன்று. அந்த அணையின் (சத்தியின்) ஊடே உயிருணர்வு மூலாதாரத்தைக் கண்டே மேலான ஞான மயமாகிய சிவமெனக் கூறப்படும் நாதத்தைத் தரிசிக்கிறது. இக் கருத்தை, தூரிய வெளிதனிற் பரம நாத அணை நடுவே சுயஞ்சுடரில் துலங்குகின்ற துனையடிகள்” எனச் சொல்கின்றார். பர நாதத்தின் வேறுபடுத்தற்கு மாயா மண்டலச் சுத்த தத்துவ மத்தகத்தில் விளங்கும் நாதத்தைப் 'பரம நாதம்' எனவும், அது ஞானவொளி மயமாதலின் 'சுயஞ் சுடர்' எனவும் சொல்லுகின்றார். பிரியம் - அன்பு. தத்துவ நாட்டத்தைத் தடுத்து நின்ற உலகிய லறிவைப் “பெரிய கதவம்” என்றும், தன் முகம் நோக்கச் செய்ததை “அழைத்து” என்றும், சிவத்துக்கே யுரிய சிவஞானத்தை 'உரிய பொருள்' என்றும் குறிக்கின்றார், இச் சிவஞானம் திருவருள் ஞானம் எனவும் படுமாதலின், “திருவருளை” என்றும், அதனிற் பெரியது வேறொன்றிமை பற்றிக், “பெரிய பொருள் எவற்றினுக்கும் பெரிய பொருள்” என்றும், ஞான நாட்டம் பெற்ற பின் எய்தப் படுதல் தோன்ற, “பின்னர் அறிந்தேன் இதற்கு முன்னர் அறியேன்” என்றும் இயம்புகின்றார். (19)
|