3079. நீளாதி மூலமென நின்றவனும் நெடுநாள்
நேடியுங்கண் டறியாத நின்னடிகள் வருந்த
ஆளாநான் இருக்குமிடம் அதுதேடி நடந்தே
அணிக்கதவந் திறப்பித்துள் ளன்பொடெனை அழைத்து
வாளாநீ மயங்காதே மகனேஇங் கிதனை
வாங்கிக்கொள் என்றெனது மலர்க்கைதனிற் கொடுத்தாய்
கேளாய்என் உயிர்த்துணையாய்க் கிளர்மன்றில் வேத
கீதநடம் புரிகின்ற நாதமுடிப் பொருளே.
உரை: எனக்கு உறவாய், என்னுயிர்க்குத் துணைவனாய், விளக்கமுறும் தில்லையம்பலத்தில் வேதியர் வேதகீதம் பாடத் திருநடம் புரிகின்ற நாதாந்தப் பரம் பொருளே, நெடிய ஆதி மூல மெனப்படும் நாரணனும் பன்னாள் தேடியும் கண்டறிய மாட்டாத நின்னுடைய திருவடிகள் வருந்த நான் உனக்கு ஆளாகும் பொருட்டு, நான் இருக்குமிடத்தைத் தேடி நடந்து வந்து அழகிய கதவைத் திறக்கச் செய்து உள்ளே புகுந்து என்னை அன்பேபடு அருகழைத்து, மகனே, நீ வீணே மயங்குத லொழிக; நான் தரும் இதனை வாங்கிக் கொள்க என்று சொல்லி மலர் போன்ற என் கையிற் கொடுத்தருளினாய். எ.று.
தந்தை தாயாரைப் போல நெருங்கிய உறவினனாய்த் தலையளி செய்வது பற்றி
“கேளாய்” எனவும், உண்மை யுணர்வு நல்குதலால் “உயிர்த் துணையாய்” எனவும் இயம்புகிறார். நாதமுடிப் பொருள், நாததத்துவத்துக்கு உச்சி மேலதாகிய பரசிவப் பொருளாதலின் “நாதமுடிப் பொருளே” என நவில்கின்றார். திருமாலுக்கு ஆதிமூலம் என்பது ஒரு பெயர். உலகனைத்துக்கம் மூலமாகிய மாயையைத் தனக்கு திருமேனியாக வுடைமையால், திருமாலுக்கு அஃதொரு பெயராயிற்றென அறிக. சிவத்தின் திருவடி காண்டற் பொருட்டு உருமாறிப் பன்னெடுங் காலம் முயன்றான் என்று வரலாறு கூறுவதால் “நெடுநாள் தேடியும்” என்றும் காண மாட்டா தொழிந்த குறிப்புத் தோன்ற, கண்டறியாத நின்னடிகள்” என்றும் கூறுகின்றார். சிவனடியானாகத் தாம் மனப் பக்குவமுற்றிருந்தமை புலப்பட, 'ஆளாக இருக்குமிடம்' என்று இயம்புகிறார். அணிக்கதவம், வன்மையா லழகு பெற்ற கதவு. கதவு, ஈற்றில் அம்முச்சாரியைப் பெற்றுக் கதவம் என வழங்குவதுண்டு. “இரவுக் கதவறம் முயறல்” (குறுங். 244) என வருவது காண்க, மலர்க்கை, மலர் போன்ற அகங்கை. (20)
|