3080.

     சத்தஉரு வாமறைப்பொற் சிலம்பணிந்தம் பலத்தே
          தனிநடஞ்செய் தருளும்அடித்தாமரைகள் வருந்த
     சித்தஉரு வாகிஇங்கே எனைத்தேடி நடந்து
          தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்து
     மத்தஉரு வாமனத்தால் மயக்கமுறேல் மகனே
          மகிழ்ந்துறைக எனத்திருவாய் மலர்ந்தகுண மலையே
     சுத்தஉரு வாய்ச்சுத்த அருவாகி அழியாச்
          சுத்தஅரு உருவான சுத்தபரம் பொருளே.

உரை:

     சுத்த வுருவாகவும், சுத்த அருவாகவும், சுத்த வருவுருவாகவும் விளங்குகிற சுத்த பரம்பொருளே, ஒலியாக இருக்கும் வேதங்களைப் பொற் சிலம்பாகத் திருவடியில் அணிந்து அம்பலத்தில் ஒப்பற்ற நடம் புரிகின்ற திருவடித் தாமரைகள் கன்றுமாறு, சித்தர் உருக்கொண்டு இவ்விடத்தே என்னைத் தேடி நடந்து, தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து எனது சிவந்த கையில் ஒன்றைக் கொடுத்து மயக்க வுருவாகிய மனத்தின் கண், மகனே, மயங்குதல் வேண்டா என அறிவுறுத்தருளிய குணக் குன்றமே. எ.று.

     திருவருளினும் தூயது வேறு யாதும் இன்மையின், அருளே உருவம், அருவம், அருவுருவம் என உருவம் கொள்வது கொண்டு, “சுத்தவுருவாய்ச் சுத்த அருவாகி அழியாச் சுத்த வருவுருவான சுத்த பரம்பொருளே” என வுரைக்கின்றார். அருவம் நான்கும், உருவம் நான்கும், அருவுருவ மொன்றுமாக நூலோர் கூறுதலால் அருவ முதல் மூன்றையும் மொழிகின்றார். பரம்பொரு ளொன்றே இவ்வொன்பது வகையாக நடிப்பதால் “சுத்த பரம்பொருளே” என வுரைக்கின்றார். மறைகள் ஒலியுருவாய் ஓதப்படுவதால் “எழுதாக் கிளவி” எனப் பெயர் பெறும்; அதனால் “சத்த வுருவாம் மறை என்கின்றார். அம்பலத்தாடும் பரமன்” திருவடிச் சிலம் போசை வேத வோசையாக இசைத்தல் பற்றி, “மறைப்பொற் சிலம்பணிந்து அம்பலத்தே தனிநடம் செய்தருளும் அடித் தாமரைகள்” என்று கூறுகின்றார். சித்த வுரு, பலவும் வல்ல பெரியோர்களின் திருவுரு. மத்த வுருவாம் மனம், உன்மத்தம் கொண்டாற் போன்ற மனம். உன்மத்தம், மத்தம் என வந்தது. “மத்த மனத்தொடு மாலிவன் என்ன” (சதகம்) எனத் திருவாசகம் உரைப்பது காண்க.

     (21)