3081. பலகோடி மறைகளெலாம் உலகோடி மயங்கப்
பரநாத முடிநடிக்கும் பாதமலர் வருந்தச்
சிலகோடி நடந்தெளியேன் இருக்குமிடத் தணைந்து
தெருக்கதவந் திறப்பித்தென் செங்கையில்ஒன் றளித்தே
அலகோடி வருந்தேல் இங் கமர்கஎனத் திருவாய்
அலர்ந்தஅருட் குருவேபொன் னம்பலத்தெம் அரசே
விலகோடி எனத்துயர்கள் ஒன்றொடொன்று புகன்று
விரைந்தோடச்செய்தனைஇவ் விளைவறியேன் வியப்பே.
உரை: பல கோடிக் கணக்கிலுள்ள மறை யிருக்குகள் யாவும் உலகெங்கும் திரிந்து ஓதி மயங்க, நாத தத்துவத்தின் முடி விடத்தே நின்று நடிக்கும் மலர் போன்ற திருவடிகள் வருந்தும்படி, சில தெருக்கோடிகளை நடந்து, கடந்து அடியேன் இருக்குமிடத்தை அடைந்து தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து உள்ளே போந்து, எனது செவ்விய கையில் ஒன்றைக் கொடுத்தருளிக் கோடிக்கு மேலும் பல நினைந்து வருந்துதல் வேண்டா; இவ்விடத்தே அமர்க எனச் சொல்லிய அருட்குருவே, பொன்னம்பலத்தின்கண் நின்றாடுகின்ற அருளரசே, விலகுக ஓடுக எனத் துயர்கள் ஒன்றோடொன்று தம்மிற் பேசிக்கொண்டு என்னை நீங்கி விரைந் தோடச் செய்தனை; இவ்வாறாயதன் தன்மையை அறிய மாட்டாது வியப்படைகிறேன். எ.று.
வேத மந்திரங்களின் ஒவ்வொரு வாக்கியமும் இருக்கு என்று வழங்குதலின், அவற்றின் தொகையைப் “பலகோடி மறைகள்” எனப் பகர்கின்றார். உலகனைத்துக் கண்டும் பரசிவத்தைக் காணாமல் மயங்கியலமர நாத தத்துவத்துக் காப்பாலான் சித்பர வெளியில் திருநடம் புரிவது புலப்பட, “பரநாதமுடி நடக்கும் பாதமலர்” என்று பகழ்கின்றார். தெருவின் முடிவிடத்தைத் தெருக் கோடி என்னும் வழக்குப் பற்றிச் “சில கோடி நடந்து” என்கிறார். அல கோடி வருந்தேல், ஒரு கோடியல்ல பல கோடி நினைவுகளை யுற்று வருந்துதல் ஒழிக; “ஒருபொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியுமல்ல பல” (குறள்) எனச் சான்றோர் கூறுவதறிக. விலகுக ஓடுக என்ற தொடர், விலகோடி என வந்துள்ளது. ஓடி - இகர வீற்று ஏவல் கண்ணிய வியங்கோள்; “நன்று மன்னது நாடாய் கூறி” (அகம். 268) என்றாற் போல. துயரத்தின் மிகுதி கண்டு மயங்கி வருந்தினேனாக, என்னை யறியாமலே அவை தாமே நீங்கின; இவ்வாறாயது எனக்கு வியப்புத் தருகிறது என்பது விளங்க, “இவ்விளை வறியேன், வியப்பே” என வுரைக்கின்றார். (22)
|