3082. செய்வகைஒன் றறியாது திகைப்பினொடே இருந்தேன்
திடுக்கெனஇங்கெழுந்திருப்பத் தெருக்கதவந் திறப்பித்
துய்வகைஒன் றெனதுகரத் துவந்தளித்து மகனே
உய்கமகிழ்ந் தின்றுமுதல் ஒன்றும் அஞ்சேல் என்று
மெய்வகையில் புகன்றபின்னும் அஞ்சியிருந் தேனை
மீட்டும்இன்றை இரவில்உணர் வூட்டிஅச்சந் தவிர்த்தாய்
ஐவகையாய் நின்றுமன்றில் ஆடுகின்ற அரசே
அற்புதத்தாள் மலர்வருத்தம் அடைந்தனஎன் பொருட்டே.
உரை: எய்திய இடர்ப்பாட்டினால் செய்வது தெரியாமல் திகைப்புற்றிருந்தேனாக, திடீரென இருக்கைவிட் டெழுந்திருப்ப, தெருக்கதவைத் திறக்கச் செய்து, தெளி வுண்டாகும் வகையில் உட்புகுந்து ஒன்றை என் கையில் மகிழ்ச்சியுடன் தந்து, மகனே, மனம் தெளிக; இன்று முதல் யாதொன்றினுக்கும் அஞ்ச வேண்டா என மெய்ம்மையாகச் சொல்லித் தேற்றிய பின்னரும் நான் அஞ்சியே கிடந்தேன்; மீட்டும் இன்றிரவு என் முற் போந்து நல்லுணர்வு தந்து என்னுடைய அச்சத்தைப் போக்கினாய். ஐவகைத் திருக்கூத்தையும் அம்பலத்தில் ஆடுகின்ற அருளரசே, அடியவனாகிய என் பொருட்டு உன்னுடைய அற்புதமான திருவடிகள் நடந்து வருந்தின, காண். எ.று.
மன்றில் நின்று ஐவகையாய் ஆடுகின்ற அரசே என இயைக்க. ஆடல் ஐவகைகளை, உமாதேவி காண ஆடும் போக நடனம், காளியொடு அண்டமுற நிமிர்ந்தாடும் வாத நடனம், பூத கணம் சூழ நின்றாடும் பூத நடனம், முனிவர் காண ஆடும் போத நடனம், ஆன்மாக்கள் சிவபோகம் பெற ஆடும் ஞான நடனம் என்பர். “பஞ்சாக்கர நடனம் (நாதாந்த நடனம்), ஊன நாடகம், ஞான நாடகம், பஞ்ச கிருத்திய நடனம் கருணை நடனம்” என வேறாகவும் கூறுவர். இடரும் தளர்வும் அறிவை மயக்குவனாவாதல் உலகறிந்த வுண்மையாதலால், அவற்றை விதந்தோதாமல், எய்திய விளைவைவிதந்து, “செய்வகை யொன்றறியாது திகைப்பினொடே யிருந்தேன்” எனவும், அக்காலத்தே பக்கத்தே யாது நிகழினும் மனம் திடுக்கிடும் இயல்பிற்றாதலால், “திடுக்கென இங்கு எழுந்திருப்ப” எனவும் கூறுகிறார். வந்தவரது உவந்தவருகை திடுக்குற்ற மனத்தை அமைதியிற் கிடத்தித் தெளிவு எய்து விக்குமாதலால், அந்நிலையிற் போந்த பெருமான் கொடுத்த வொன்று மனநிறைவு தந்தமை புலப்பட, “உய்வகை யொன்று எனது கரத்து உவந்தளித்து” எனவும், இனிய ஆதரவும் உறுதியு முண்டாக வுரையாடினமையின், “மகனே மகிழ்ந்து உய்க” எனவும், இன்று முதல் ஒன்றும் அஞ்ச வேண்டா; நான் சொல்வது ஏற்று நெஞ்சு திடம் பெறுக என்பாராய், “இன்று முதல் ஒன்றும் அஞ்சேல் என்று மெய்வகையிற் புகன்றா” ரெனவும் உரைக்கின்றார். எய்திய இடர்ப்பாட்டின் வன்மையால் குழைந்து நிலை கலங்கிய நெஞ்சம் ஓரளவு திண்மையும் தெளிவும் எய்திற் றாயினும், கலக்கம் முற்றவும் நீங்கப் பெறாமையின், ஐய வுணர்வுகளால் அலைப்புண்டமை தோன்றப் “பின்னும் அஞ்சி யிருந்தேன்” என்றும், இது தானும் தீயெச்சம் போலப் பின்னர்ப் பெருகி மனநோயை மிகுவிக்குமாதலை யுணர்ந்த பெருமான் மீண்டும் ஒருநாளிரவு போந்து அச்சத்தைப் போக்கி ஆண்மை சான்ற நல்லுணர்வு நல்கியதை நினைந்து மகிழ்கின்றாராய், “மீட்டும் இன்றை யிரவில் உணர்வூட்டி அச்சம் தவிர்த் தாய்” என்றும் இயம்புகின்றாய்.
இதனால், இறைவன் ஒருமுறையன்றி மீளவும் போந்து அருள் செய்தமை கூறியவாறாம். (23)
|