3083. உள்ளிரவி மதியாய்நின் றுலகமெலாம் நடத்தும்
உபயவகை யாகியநின் அபயபதம் வருந்த
நள்ளிரவின் மிகநடந்து நான்இருக்கும் இடத்தே
நடைக்கதவந் திறப்பித்து நடைக்கடையில் அழைத்து
எள்ளிரவு நினைந்துமயக் கெய்தியிடேல் மகனே
என்றென்கை தனில்ஒன்றை ஈந்துமகிழ் வித்தாய்
அள்ளிரவு போல்மிடற்றில் அழகுகிளர் ந்தாட
அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே.
உரை: அள்ளிக் கொள்ளக்கூடிய அளவில் இருள் நிறைந்த இரவு போன்ற கரிய நிறக் கழுத்தின் அழகு ஓங்கி அசைய, அம்பலத்தில் ஆடுகின்ற சிவந்த பவளமலை போன்ற பெருமானே, எல்லாராலும் விரும்பப்படுகின்ற சூரியனாகவும் சந்திரனாகவும் நின்று, உலகம் எல்லாவற்றையும் நடத்துகின்ற இருவகையாகிய நின்னுடைய இரண்டாகிய அபயத்திருவடிகள் வருந்த நள்ளிரவில் நெடிது நடந்து, நான் இருக்குமிடத்தை அடைந்து, தெருவாயிற் கதவைத் திறக்கச் செய்து, நடைப் பக்கத்தில் என்னை அழைத்து, இகழப்படுகின்ற இரவுக் காலம் என நினைந்து, நீ மனமயக்கம் அடைய வேண்டா என்று சொல்லி என் கையில் ஒன்றைக் கொடுத்து என்னை மகிழ்வித்தாய். எ.று.
அள்ளிரவு, அள்ளிக் கொள்ளத்தக்க இருள் செறிந்த இரவுப் பொழுது; இருட் கருமையின் மிகுதி உணர்த்துதற்கு இவ்வாறு கூறுகின்றார். இருவிருள் போன்ற கரிய நிறத்தையுடைய கருத்தை உடையவன் சிவபிரான் என்பதாயிற்று. அவனது பொன் மேனியில் கழுத்தின் கருமை நிறம் அப்பெருமான் ஆடும் போது காண்பார் கண்டு வியக்க ஓங்கித் தோன்றுதலால், “அழகு சேர்ந்தாட” என அறிவிக்கின்றார். அம்பலத்தின் பொன் நிறம் பெருமானுடைய சிவந்த பவளம் போன்ற மேனியை இனிதுயர்த்திக் காட்டுதலால் “அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவளக் குன்றே” என்று செப்புகின்றார். உழைத்துப் பயன் பெறும் உலக மக்கட்குப் பெரிதும் வேண்டப்படுவது பகற் போதாகலின், அதனைச் செய்யும் சூரியனை “உள்ளிரவி” என உவந்துரைக்கின்றார். இச்சிறப்புப் பற்றியே பண்டையோர் உதய காலத்தில் அதனை வணங்கி வாழ்த்தினர் என்பது “உள்ளிரவி” என்பதனால் குறிப்பாய் உணர்த்தப்படுவது காண்க. பகலில் ஒளி செய்யும் சூரியனையும், இரவில் ஒளி நல்கும் சந்திரனையும் இறைவனுடைய இரண்டு திருவடிகளாம் எனக் கருதுகின்றாராதலால், “உலகமெலாம் நடத்தும் உபய வகையாகிய நின் அபய பதம்” எனவும், அடைந்தாரைத் தாங்கி ஆதரிக்கின்ற பெருமை உடையவையாதலால் இறைவன் திருவடியை “அபய பதம்” எனவும் போற்றுகின்றார். “உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்” (முருகு) என்று நக்கீரனாரும் கூறுதல் காண்க. பகல் இரவுகளால் உலக வாழ்வு இனிது நடைபெறுதலால்,
“உலகமெல்லாம் நடத்தும் உபயவகை” என எண்ணிக் கூறுகின்றார். நள்ளிரவு, நடு இரவு, நெடிது நடந்து வந்தார் என்பதை “மிக நடந்து” என விதந்து உரைக்கின்றார். தெருவாயிற் கதவைத் திறந்தவுடன் உள்ளிருக்கும் அகன்ற அறை “நடை” என்றும், நடைக்கடை என்றும் வழங்குவர். பண்டை நாளையோர் அதனையே “இடைகழி” எனக் கூறினர். பார்ப்பனர் வீடுகள் அதனை “இரேழி” எனத் திரித்துரைக்கும். இராக் காலத்தையும் அக்காலச் செயல்களையும் உயர்ந்தோர் நன்றென மதிப்பதில்லையாதலின், “எள்ளிரவு” என இயல்பெடுத்து இயம்புகின்றார். இருள் பரந்த பொழுது யார்க்கும் கண்ணும் கருத்தும் கலக்க முறுவ தியற்கையாதல் பற்றி, “இரவு நினைந்து மயக்கெய்தி விடேல்” எனத் தேற்றுகின்றார்.
இகனால், இரவுப் போது கண்டு மயங்காதவாறு அருளுரை வழங்கியவாறாம். (24)
|