3084. விளங்கறிவுக் கறிவாகி மெய்த்துரிய நிலத்தே
விளையும்அனு பவமயமாம் மெல்லடிகள் வருந்தத்
துளங்குசிறி யேன் இருக்கும் இடந்தேடி நடந்து
தொடர்க்கதவந் திறப்பித்துத் தொழும்பன்எனை அழைத்துக்
களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்துக்
களித்துறைக எனத்திருவாக் களித்தஅருட் கடலே
குளங்கொள்விழிப் பெருந்தகையே மணிமன்றில் நடஞ்செய்
குருமணியே அன்பர்மனக் கோயிலில்வாழ் குருவே.
உரை: நெற்றியிற் கண் பொருந்திய பெருந்தகையே, அழகிய தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் குருமணியே, மெய்யன்பர்களின் மனமாகிய கோயிலில் எழுந்தருளும் குருபரனே, உயிரறிவுக்கு விளக்கம் தரும் நுண்ணறிவாய் மெய்ம்மை சான்ற துரிய நிலத்தில் பெறப்படுகின்ற அனுபவப் பொருளாகும் நின்னுடைய மெல்லிய திருவடிகள் வருந்தும்படி, திட்பமில்லாத சிறியவனாகிய யான் இருக்கும் இடத்தைத் தேடி நடந்து அடைந்து வாயிலோடு தொடர்புற்றிருக்கும் கதவைத் திறக்கச் செய்து, அடியவனாகிய என்னை அருகழைத்துக் குற்றமில்லாத ஒன்றை எனது கையிற் கொடுத்து மகிழ்வோடு இருப்பாயாக என அருளுரை சொல்லிய திருவருட் கடலாகியவனே, இதற்கு என்னென்பேன். எ.று.
குளம், நெற்றி தகுதியாற் பெருமை மிக்கவனாதலால் சிவனைப் “பெருந்தகை” என்றும், நிறத்தாற் சிவந்த மாணிக்க மணி போறலின், “குருமணியே” என்றும், மெய்யன்பே சிவ ஞானமாதலின் அவர் மனத்தின் கண் இருந்தருளி மயங்கும் போது தெளிவு நல்குதலால் “குருவே” என்றும் கூறுகிறார். உணர்வு வடிவாகிய உயிர்க்கு உயிராதல், உள்ளுணர்வாய் ஆவன தெரிய வுணர்த்துதல். இதனை அறிந்தோர் திருவருள் ஞானம் எனத் தெரிவிக்கின்றார். அதீதமாகிய மூலாதரத்தில் ஆகாசமாய்த் தோன்றி அனுபவத்துக்கப் பக்குவமாகும் நிலையம் துரியமாதலால், “மெய்த்துரிய நிலத்தே விளையும் அனுபவ மயமாய்” என வுரைக்கின்றார். அதீதம் ஒடுங்குமிடமாதலின், சிலர், துரியாதீதத்தைக் கொள்ளாமல் துரியத்தோடே நின்றொழிவர். துரியாதீதத்தின் இருப்பைக் கண்டுணர்ந்த சிறப்புச் சிவாகமங்கட் குரியதாகலின், சிவாகம சீலர்களான சித்தாந்திகள் துரியாதீதத்தைக் கொண்டார்களாகப் பிறரெல்லாம் துரியத்தோடே நிற்கின்றனர். அதீதத்தே ஞானாகாசமாக இருக்கும் பரம்பொருள் துரிய நிலத்தே உருவாய அனுபவ மயமாய் விளங்குதலால், அதனைத் “துரிய முதலே” என்றும், “துரியப் பொருளே” என்றும் புகழ்கின்றார்கள். உடம்பொடுறையும் உயிர்க்கு மயக்கம் இயல்பாதலின், “துளங்கு சிறியேன்” எனவும், களங்கமுடைய தொன்றைத் “தாயினும் நல்லனாகிய” சிவபிரான் நல்கானாதலால் “களங்கமிலா ஒன்றெனது கைதனிலே கொடுத்து” எனவும், கவலையிருள் நீங்குதலால் “களித்துறைக எனத் திருவாக்களித்தான்” எனவும் இயம்புகின்றார்.
இதனாற் களங்கமிலா வொன்றளித்துக் களித்துறைக என அறிவுறுத்தியவாறாம். (25)
|