3085. வேதமுடி மேற்சுடராய் ஆகமத்தின் முடிமேல்
விளங்கும்ஒளி யாகியநின் மெல்லடிகள் வருந்தப்
பூதமுடி மேல்நடந்து நானிருக்கு மிடத்தே
போந்திரவிற் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து
நாதமுடி மேல்விளங்குந் திருமேனி காட்டி
நற்பொருள்என் கைதனிலே நல்கியநின் பெருமை
ஓதமுடி யாதெனில்என் புகல்வேன்அம் பலத்தே
உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே.
உரை: பொன்னம்பலத்தின்கண், உலகுயிர்கட்கு இன்பம் விளைய வேண்டித் திருக்கூத்தியற்றும், பரம்பொருளாகிய சிவனே, வேத ஞானிகட்கு மேலுறும் சுடராகவும், ஆகம ஞானிகட்கு விளக்கம் தரும் ஒளியாகவும் திகழ்கின்ற நின்னுடைய மெல்லிய திருவடிகள் கன்றும்படி பூதமாகிய நிலத்தின் மேல் நடந்து, நான் இருக்குமிடத்துக்கு வந்து, இரவாதலின் கதவைத் திறக்கச் செய்து அன்புடன் நாத தத்துவத்துக்கு மேனிலையில் விளங்கும் ஞானத் திருமேனியைக் காட்டி நல்ல பொருளொன்றை என் கையில் தந்தருளிய நின்னுடைய பெருந்தன்மையை வாயாற் சொல்ல முடியாதெனப் பெரியோர் கூறுவராயின் யான் யாது கூறுவேன். எ.று.
வேத முடி - வேதாந்த ஞானம். ஆகம முடி - ஆகமாந்தமாகிய சித்தாந்த ஞானம். வேதாந்தக் காட்சிக்குப் பிரமச் சுடராகவும், சித்தாந்தக் காட்சிக்குச் சுடர்க் கொழுந்தாகிய ஒளியாகவும் சிவம் விளங்குதலின், “வேத முடிமேற் சுடராய் ஆகமத்தின் முடிமேல் விளங்கும் ஒளி” என விளம்புகின்றார். “வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன்” (சிவப்) என உமாபதி சிவனாரும், “ஓரும் வேதாந்த மென்றுச்சியிற் பழுத்த, சாரம் கொண்ட சைவ சித்தாந்தம்” (பண்டா) எனக் குமரகுருபரனாரும் கூறுவன கண்டு தெளிக. நிலம் ஐம்பெரும் பூதங்களி லொன்றாதலால், பூதம் எனப் பொதுப்படப் புகல்கின்றார். தாழ் நீக்கிக் கதவைத் திறப்பதை, “கதவுதனைக் காப்பவிழ்க்க” என வுரைக்கின்றார். புரிதல் - விரும்புதல். நாத முடி - நாதாந்தம் நாத தத்துவத்துக்கு மேலது, மாயா மண்டலத்துக்கு அப்பாலதாகிய பரசிவவெளி; ஆங்கே சிவஞானமாய்த் திகழும் சிவ சூரியன் உணரப்படுதலின், “நாத முடிமேல் விளங்கும் திருமேனி” என்றும், அது நல்கும் பொருள் நன்பொருளன்றி வேறாவ தில்லையாதலால், “நற்பொருள்” என்றும் இசைக்கின்றார். “உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்” எனச் சேக்கிழார் முதலியோர் பலரும் கூறுதலால், “நின் பெருமை ஓத முடியாதெளின்” என்கின்றார். எனின் - என்று கூறுவராயின், ஆனந்த வடிவினனாகிய இறைவன், ஆனந்தக் கூத்தாடுகிறான் என்பதற்குத் தான் ஆனந்தம் வேண்டி ஆடுகிறான் என்று பொருளன்று; உலகுயிர்கள் இன்பம் பெறல் வேண்டி ஆடுகிறான் என்பதாகலின், “உயிர்க் கின்பம் தர நடனம் உடைய பரம்பொருளே” என வுரைக்கின்றார். “நேயத்தால், ஆனந்த வாரிதியில் ஆன்மா வைத்தா னழுத்தல் தான் எந்தையார் பரதம் தான்” (உண். விளக். 37) என்று திருவதிகை மனவாசகம் கடந்தார் தெரிவிப்பது காண்க.
இதனால், இறைவன் ஞான மேனி காட்டி நன்பொருள் நல்கிய திறம் தெரிவித்தவாறாம். (26)
|