3086.

     தங்குசரா சரமுழுதும் அளித்தருளி நடத்துந்
          தாள்மலர்கள் மிகவருந்தத் தனித்துநடந் தொருநாள்
     கங்குலில்யான் இருக்குமனைக் கதவுதிறப் பித்துக்
          கையில்ஒன்று கொடுத்தஉன்றன் கருணையைஎன் என்பேன்
     இங்குசிறி யேன்பிழைகள் எத்தனையும் பொறுத்த
          என்குருவே என்உயிருக் கின்பருளும் பொருளே
     திங்களணி சடைப்பவளச் செழுஞ்சோதி மலையே
          சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே.

உரை:

     இவ்வுலகிற் சிறியவனாகிய யான் செய்த பிழைகள் அனைத்தையும் பொறுத்தருளிய எனது குருவே, என்னுடைய உயிர்க்கு இன்பத்தை நல்கும் பரம் பொருளே, பிறைச் சந்திரனைச் சடையில் கொண்டு பவள நிறச் செழுஞ் சோதியைப் பரப்பு மலையாகியவனே, சிவகாமியாகிய கொடி போன்ற அம்மை கண்டு மகிழும் தில்லைக் கூத்தப் பெருமானே, இவ்வுலகில் உள்ள சரம், அசரம் என்ற இருவகைப் பொருள்களையும் படைத்துக் காத்து வாழ்விக்கின்ற திருவடிகளாகிய மலர்கள் மிகவும் வருந்துமாறு தனியாக ஒரு நாள் இரவில் நடந்து போந்து யான் இருக்கும் வீட்டின் கதவைத் திறக்கச் செய்து, என்னுடைய கையிலொன்றைக் கொடுத்தருளிய உனது கருணையை என்னென்று சொல்லுவேன். எ.று.

     உணர்த்தினா லன்றி உணர மாட்டாமை பற்றி, வடலூர் வள்ளல் தம்மைச் “சிறியேன்” என்று கூறுகிறார். சிறியேன் - சிறுமையையுடைய நான். என்னுடைய பிழைகட் கெல்லாம் காரணம் எனது சிறுமை என்பது கருத்து. சிறுமை எனதியல்பாதலால் பொறுத்தல் முறையாதல் கண்டு என்னைப் பொறுத்தாண்டனை யென்பார், “சிறியேன் பிழைகள் எத்தனையும் பொறுத்த என் குருவே” எனவும், அறிவு பொருளாக உரை நிகழ்த்தலின், “குருவே” எனவும் இசைக்கின்றார். உயிர்கள் விழைவ தெல்லாம் இன்பமேயாகலின், “உயிர்க்கு இன்பருளும் பொருளே” எனப் புகல்கின்றார். “எல்லா வுயிர்க்கும் இன்ப மென்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” (பொருள்; 29) என்பது தொல்காப்பியம். பரம் பொருள் இன்ப வடிவிற்றெனச் சிவாகமங்கள் உரைப்பதால் “பொருளே” எனக் கிளந்து மொழிகின்றார். திங்கள் - பிறைச் சந்திரன். பவள நிற மேனியராதலால், “பவளச் செழுஞ் சோதி மலையே” எனப் பகர்கின்றார். “நீறணி பவளக் குன்றமே” (கோயில்) எனத் திருமாளிகைத் தேவர் போற்றுவது காண்க. சிவத்தை விரும்புகின்றவள் என்பதனால் தில்லையில் அம்பிகையைச் சிவகாமி என்கின்றனர் வல்லி - ஈண்டுக கொடி போன்றவள் எனப் பொருள் பட நிற்கிறது. உமை கண்டு மகிழ மன்றில் நின்று ஆடுவதால் “சிவகாம வல்லி மகிழ் திருநட நாயகனே” என்று சிறப்பிக்கின்றார். இயங்கு திணை, நிலைத்திணை எனத் தமிழ் கூறும் பொருட் பாகுபாட்டை, வட மொழி சரமென்றும் அசரமென்றும் உரைக்கிறது. உலகியற் பொருள்களைப் படைத்தளித் தழிக்கும் முதல்வன் சிவனாதலால், “சராசர முழுதும் அளித்தருளி நடத்தும்” எனக் கூறுகிறார். மக்களுருவில் தனியனாய் வந்தமை பற்றி, “தனித்து” என்றும், நெடிது நடந்தமை புலப்பட “மிக நடந்தும்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், சிறுமையாற் செய்பிழையைப் பொறுத்து நல்ல தொன்று நல்கியது தெரிவித்தவாறாம்.

     (27)