3087. மாமாயை அசைந்திடச்சிற் றம்பலத்தே நடித்தும்
வருந்தாத மலரடிகள் வருந்தநடந் தருளி
ஆமாறன் றிரவினிடை அணிக்கதவந் திறப்பித்
தங்கையில்ஒன் றளித்தினிநீ அஞ்சேல்என் றுவந்து
தேமாவின் பழம்பிழிந்து வடித்துநறு நெய்யுந்
தேனும்ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்
கோமான்நின் அருட்பெருமை என்உரைப்பேன் பொதுவில்
கூத்தாடி எங்களைஆட் கொண்டபரம் பொருளே.
உரை: தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடுமாற்றால் உயிர்களாகிய எங்களை ஆண்டருளுகிற பரம்பொருளே, மாமாயை கலங்கி உலகுடல் கருவிகளும் தோன்றும்வண்ணம் ஞான வம்பலத்தில் நடித்தருளியும் வருத்தமுறாத திருவடிகள் வருந்துமாறு என் மனை நோக்கி யான் உய்திபெற அன்றொருநாள் இரவின்கண் நடந்து போந்து அழகிய கதவைத் திறப்பித்து என் கையில் ஒன்றைத் தந்து இனி அஞ்சுதல் ஒழிக என்று இனிய மாம்பழத்தின் சாற்றைப் பிழிந்து வடி கட்டி மணமிக்க நெய்யையும் அதனளவான தேனையும் பெய்து கலந்தது போன்ற இனிய சொற்களைச் சொல்லி யருளினாய்; கோமானாகிய உன்னருட் பெருமையை என்னென்று புகழ்வேன். எ.று.
உலகுயிர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து இறவா இன்பம் எய்துதற் பொருட்டே தில்லையம்பலத்தில் இறைவன் திருக்கூத்து நடைபெறுகிறது என்பது கொண்டு, “பொதுவில் கூத்தாடி எங்களை ஆட்கொண்ட பரம்பொருளே” என்று கூறுகின்றார். மாமாயை - இறைவன் சத்தியில் ஒடுங்கி யிருக்கும் மாயையாகிய நித்தப் பொருள்; இதனைப் பரிக்கிரக மாயாசக்தி என்பதும் உண்டு. இறைவன் அருட்சக்தியைக் கலக்கி, அது மாமாயையைக் கலக்க, அதன்கண் உலகுகளும் உடல் கருவி கரணங்களும் பிறவும் தோன்றுகின்றன என்பதனால், “மாமாயை அசைந்திடச் சிற்றம்பலத்தே நடித்தும்” எனவும், இவ்வருட் செயல் சங்கற்பத்தாலே நிகழ்தலின் வருத்தம் சிறிதும் இன்மை பற்றி, “வருந்தாத மலரடிகள்” எனவும் இயம்புகின்றார். மலரடிகள் திருவருட் சக்தியைக் குறிக்கும் என அறிக. ஆமாறு - நலம் பெறும் பொருட்டு. சிற்றம்பலம் - ஈண்டு ஞானாகாயப் பொருளது. அங்கே அகளமாய் நின்று ஐந்தொழில் நடத்துவது பரசிவம்; தொழிலைந்தும் திருவிளையாட்டாதலால், “நடித்தும்” என்று குறிக்கின்றார். ஒன்றை அளித்ததினும் “அஞ்சேல்” என உரைத்தருளிய சொல்லின் சுவையும் இன்பமும் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டமையின், “தேமாவின் பழம் பிழிந்து வடித்து நறுநெய்யும் தேனும் ஒக்கக் கலந்ததெனத் திருவார்த்தை அளித்தாய்” என்று கூறுகின்றார். தேமா - இனிக்கும் மாம்பழம். கோது போக்குதற்கு வடித்தல் வேண்டிற்று. ஒத்த அளவு நறுநெய் சேர்ப்பது உண்பார் உடம்பின் சூடு மிகாமைப் பொருட்டு. கோமான் - தலைவன். பொது - தில்லையம்பலம்.
இதனால், அஞ்சேலென்ற அருளுரையின் இனிமை காட்டியவாறாம். (28)
|